ஏழு ஜென்ம பாவமும் தீரும்: சிவனுக்கு ஒருகைப்பிடியேனும் அரிசி கொடுங்களேன்!

- எறும்புக்கும் படியளக்கும் ஈசனுக்கு அன்னாபிஷேக பூஜை
ஏழு ஜென்ம பாவமும் தீரும்: சிவனுக்கு ஒருகைப்பிடியேனும் அரிசி கொடுங்களேன்!

திங்கள் முடிசூடியவருக்கு, பிறையையே அணிகலனாக சிரசில் சூடிக்கொண்டிருக்கும் ஈசனுக்கு, மதி எனும் நிலவானது முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது சிறப்புக்கு உரிய மகத்துவம் மிக்க நன்னாள் என்று ஐப்பசி அன்னாபிஷேகத்தைச் சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்‌ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும். இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும்போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையால் குளிர்வது இயற்கை என்கிறது சிவபுராணம்.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. அதனால்தான், அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்று போற்றப்படுகிறது. அதனால்தான் சாப்பிடுவதற்கு முன்னதாக, பிரார்த்தனை செய்கிறோம். இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். அன்னமானது, அபிஷேக நிலையில் ஆண்டவனின் திருமேனி முழுவதும் தழுவி, அவனை அகப்படுத்தி அடைக்கலமாகிக் கொள்கிறது. இதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே, அவனே பரம்பொருள், அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிறார்கள் சிவனடியார்கள்.

சிவபுராணத்தில் ஒரு கதை உண்டு.

‘உலகுக்கே படியளப்பவர் சிவபெருமான்’ என்று எல்லோரும் சொல்கிறார்களே. இது உண்மையா என்பதைச் சோதித்துப் பார்ப்போம் என முடிவெடுத்தாள் பார்வதிதேவி. ஒரு சிறிய பாத்திரத்துக்குள் எறும்பு ஒன்றைப் போட்டு மூடிவைத்தாள். அப்போது சிவபெருமான் அங்கே வந்தார். “இன்று உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் படியளந்துவிட்டீர்களா? எல்லா உயிர்களும் சாப்பிட்டனவா?” என கேட்டாள். “இதிலென்ன சந்தேகம்... எல்லா ஜீவன்களும் சாப்பிட்டாகிவிட்டன” என்றார் சிவபெருமான். திரும்பத்திரும்ப இதையே உமையவள் கேட்டாள். சிவனாரும் திரும்பத்திரும்ப இதையே பதிலாகத் தந்தார்.

ஒருகட்டத்தில், “உனக்கு ஏன் இப்படியொரு சந்தேகம். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?” என்று ஈசன், பார்வதிதேவியிடம் கேட்டார். உடனே, எதிரே இருந்த எறும்பை அடைத்துவைத்திருந்த பாத்திரத்தை எடுத்துவந்தாள் தேவி. “இதோ... உலகுக்கே படியளக்கும் எங்கள் ஈசன், இந்தப் பாத்திரத்துக்குள் இருக்கிற எறும்புக்கும் உணவளித்துவிட்டாரா?” என்று கேட்டபடியே பாத்திரத்தின் மூடியைத் திறந்தாள். அதிர்ந்துபோனாள். வியந்து மலைத்தாள். விழிகள் விரிய சிவனாரைப் பார்த்தாள். அந்தப் பாத்திரத்துக்குள் இருந்த எறும்பு, அரிசி ஒன்றை தின்றுகொண்டிருந்தது. “கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு கொடுப்பேன்; கர்ப்பப்பைக்குள் இருக்கும் சிசுவுக்கும் உணவளிப்பேன்” என்று சிவபெருமான் சொல்ல, அவரை விழுந்து வணங்கினாள் தேவி என்கிறது சிவ புராணக் கதை!

ஒரு எறும்புக்குக்கூட படியளக்கும் சிவபெருமானுக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு, ஐப்பசி அஸ்வினி நாளில் (நவம்பர் 7) அன்னாபிஷேம் விமரிசையாக நடைபெறுகிறது. சிவனாருக்கு அன்னாபிஷேகம் செய்வதற்கு, நம்மால் முடிந்த ஒருபடி அரிசியையேனும் வழங்குவது நம் பாவமெல்லாம் போக்கும் என்பது ஐதீகம். அவ்வளவு ஏன்... அன்னாபிஷேகத்துக்கு ஒருகைப்பிடி அரிசிகொடுத்தாலே நம் பாவமெல்லாம் பறந்தோடும். நம் ஏழு ஜென்ம பாவங்களும் தோஷங்களும் நீங்கப் பெறலாம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்!

நாளை சிவனுக்கு முக்கிய சிவாலயங்களில் அன்னாபிஷேகம் களைகட்டும். அந்த நாளில் உலகுக்கே படியளக்கும் சிவனுக்கு ஒரு கைப்பிடியேனும் அரிசி வழங்குங்கள். உங்கள் பாவங்கள் உங்கள் சந்ததியினருக்குப் போகாமல் இருக்கச் செய்வார். உங்களின் புண்ணியங்களை உங்கள் சந்ததியினருக்கு வழங்கி அருளுவார் சிவபெருமான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in