`இங்கு சசிகலா வழிபாடு செய்திருப்பது எதிரிகளை அழிக்கவல்ல வல்லமையைத் தரும்'

மூன்றாம் கட்ட ஆன்மிக பயணத்தை தொடங்கினார் சசிகலா
`இங்கு சசிகலா வழிபாடு செய்திருப்பது எதிரிகளை அழிக்கவல்ல வல்லமையைத் தரும்'
கஜ பூஜை செய்யும் சசிகலா

அரசியலில் தனது பழைய நிலையை அடைய தனது மூன்றாம் கட்ட ஆன்மிக பயணத்தை தொடங்கியிருக்கிறார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இந்த மூன்றாம் கட்ட பயணத்தில் மும்மத வழிபாட்டை முக்கியமாக மேற்கொண்டிருக்கிறார் சசிகலா.

தனது இரண்டு கட்ட ஆன்மிக பயணங்களை முடித்துவிட்டு சசிகலா சிலநாள் ஓய்வில் இருந்த சசிகலா தற்போது மூன்றாம் கட்ட ஆன்மிகப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ``விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன்'' என்று கூறினார்.

அவரது அரசியல் பயணம் கூட்டணிக் கட்சிகளுடனா அல்லது தனித்தா என்ற கேள்விக்கு, ``பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார். அவரை சந்திக்கும் அமமுக பிரமுகர்கள் தினகரனால் கட்சியை விட்டு நீக்கப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

கோ பூஜை செய்யும் சசிகலா
கோ பூஜை செய்யும் சசிகலா

இந்த மூன்றாவது கட்ட ஆன்மிகப் பயணத்தின் முதல் கட்டமாக இன்று முக்கியமான இந்துக் கோயில்களுக்கு வருகை தந்தார். திருச்சியில் இருந்து கார் மூலம் பயணித்த சசிகலா நேராக பூம்புகாருக்கு அருகில் உள்ள கீழப்பெரும்பள்ளம் என்ற ஊரில் இருக்கும் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்றார். இந்த நாகநாதசுவாமி கோயிலில் கேதுவுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இது நவக்கிரகங்களில் கேதுவுக்கான தலமாக வணங்கப்படுகிறது. அங்கு நாகநாத சுவாமியையும், சௌந்தரவல்லி அம்மனையும் வழிபட்ட சசிகலா கேதுவுக்கு அர்ச்சனை செய்தார். இந்த தலத்தில் கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அங்கு வழிபாடு செய்துவிட்டு அடுத்ததாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றவர் அங்கு அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனை வணங்கினார். அங்கு கோ பூஜை, கஜபூஜை செய்தார். அவருக்கு கோயில் சார்பில் அபிராமி அம்மன் சிலை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி சிக்கல் சிங்காரவேலரின் கோயிலுக்குச் சென்றார். சூரபத்மனை அழிப்பதற்கு தனது தாயிடம் இருந்து சக்தி வேலை முருகன் பெற்றுக் கொண்ட சிறப்பு மிக்க தலம் இது. இங்கு சசிகலா வழிபாடு செய்திருப்பது எதிரிகளை அழிக்கவல்ல வல்லமையைத் தரும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

கோயில் சார்பாக சசிகலாவுக்கு  அபிராமி அம்மன் புகைப்படம்
கோயில் சார்பாக சசிகலாவுக்கு அபிராமி அம்மன் புகைப்படம்

இன்று இந்துமத முக்கிய வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்த சசிகலா இரவு வேளாங்கண்ணியில் தங்குகிறார். நாளைக் காலை கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு தலமான வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வழிபடுகிறார். அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு செல்லும் சசிகலா, அங்கு வழிபட்டபிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இப்தார் நோன்பு விழாவில் பங்கேற்கிறார். தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக மூன்றாம் கட்டமாக ஆன்மீக பயணத்தை மும்மதbவழிபாடு செய்து தொடங்கி இருக்கிறார் சசிகலா.

நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெற்றுத் தரும் கேது பகவானையும், நீண்ட ஆயுள் தரவல்ல திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரையும், எதிரிகளை அழிக்கும் வல்லமை தரும் சிங்காரவேலரையும் அவர் வழிபட்டதுடன், கிறிஸ்தவ இஸ்லாமிய முக்கிய வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல இருப்பதால் விரைவில் அரசியல் ரீதியான அடுத்த கட்ட நகர்வை அவர் புது உத்வேகத்துடன் தொடங்குவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.