சஷ்டியும் ஆடிப்பெருக்கும் இணைந்த நாளில் செந்தில்வேலனுக்கு செவ்வரளி; எலுமிச்சை சாதம்!

வள்ளி தெய்வானையுடன் முருகக் கடவுள்
வள்ளி தெய்வானையுடன் முருகக் கடவுள்

சஷ்டியும் ஆடிப்பெருக்கும் இணைந்த நன்னாளில், சண்முகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி மனதார வேண்டுவோம். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார் ஆறுமுகப்பெருமான்.

மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி என்பது முருகக் கடவுளுக்கு உகந்த நன்னாள். வாரந்தோறும் வருகிற செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானைத் தரிசிப்பதும் கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதும் மகத்தான பலன்களைத் தரும் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

கெளமார வழிபாடு என்றும் குமார வழிபாடு என்றும் சொல்லப்படுகிற முருக வழிபாடு எளிமையானது. மிகப்பெரிய மந்திர ஜபங்களோ கடும் தவமோ அவசியமில்லை. ஒரு ‘அரோகரா’ கோஷத்தைச் சொன்னாலே போதும்... வெற்றி வடிவேலவன் நம்மைக் காக்க ஓடோடி வருவான் என்பது ஐதீகம்.

கிழமைகளில் செவ்வாய் என்பது போல, நட்சத்திரங்களில் கார்த்திகை நாள் போல, திதிகளில் சஷ்டி என்பது கந்தவேலனுக்கு உன்னதமான நாள். இந்தநாளில், சஷ்டி விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், மாலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள முருகன் கோயிலுக்கோ, முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில் சந்நிதிக்கோ சென்று, முருக தரிசனம் செய்து, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள்.

ஆறுபடை நாயகன் என்று போற்றப்படும் முருகக் கடவுளுக்கு ஆறுபடைகளை அடுத்தும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அதேபோல, எல்லா சிவாலயங்களிலும் பிராகாரத்தில், வடிவேலனுக்கு சந்நிதிகள் அமைந்திருக்கும். அம்மன் கோயில்கள் சிலவற்றில், முருகப்பெருமானுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும்.

கந்த சஷ்டி கவசம் அல்லது ஸ்கந்த குரு கவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வதும் அல்லது ஒலிக்கவிட்டு ஆத்மார்த்தமாகக் கேட்பதும் இந்த சஷ்டி நாளில், அளப்பரிய பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஞானகுருவெனப் போற்றப்படும் வேலவனுக்கு உகந்த அரளி முதலான செந்நிற மலர்களைக் கொண்டு அலங்கரிப்பதும் சார்த்துவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும். எதிரிகள் தொல்லை முதலானவையில் இருந்து விடுபடலாம்.

அதேபோல், முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கோ பக்தர்களுக்கோ வழங்கினால், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் ஈடேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். இழந்த செல்வங்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

இன்று ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பெருக்கும் சஷ்டியும் இணைந்த நன்னாள். இந்தநாளில், ஆறுமுகப்பெருமானை தரிசிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வோம். நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம் தருவது புண்ணியத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in