’சஷ்டியை நோக்க சரவணபவனார்...’: கந்தசஷ்டி கவசம் பிறந்த கதை!

- சிலிர்க்கவைக்கும் சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் அற்புதக் கவசம்
’சஷ்டியை நோக்க சரவணபவனார்...’: கந்தசஷ்டி கவசம் பிறந்த கதை!

முருகன் கோயில்களில் தவறாமல் ஒலிக்கும் மிக முக்கியமான பாடல். செவ்வாய், வெள்ளிக்கு நம் வீடுகளில் கூட ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பதில் அப்படியொரு நிம்மதியும் நிறைவும் இல்லத்தில் நிறைந்திருப்பதை நாமே உணர்ந்திருப்போம். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, சூரசம்ஹாரம் முதலான வைபவங்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் டீக்கடைகளிலும் கூட, இந்த தோத்திரப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாமும் வழியெங்கும் கேட்டு மனமுருகியபடி பக்தியில் திளைத்துக் கொண்டே இருப்போம்.

நம்மை கவசமெனக் காக்கும் இந்த தோத்திரம்... கந்தசஷ்டி கவசம்! கந்தசஷ்டி கவசம் பாடி முருகப்பெருமானை மனமுருக வேண்டிக் கொள்கிறோம். சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் மெய்ம்மறந்து கேட்டு இன்புறுகிறோம். இந்த கந்தசஷ்டிக் கவசத்தை நமக்கு அருளியவர் யாரென்று தெரியும்தானே... அவர், பாலதேவராய சுவாமிகள். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

தொண்டைமண்டலத்து வல்லூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் வீராச்சாமி பிள்ளை. கணக்கராகப் பணிபுரிந்தவருக்கு, ஒரேயொரு குறை... பிள்ளைச்செல்வம் இல்லையே என்பதுதான் அது. சதாசர்வ காலமும் முருகப்பெருமானையே வேண்டி வந்த வீராச்சாமி பிள்ளைக்கு, ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தார். கல்விச் செல்வத்தை வழங்கினார். மகன் பாலதேவராயர் தந்தையின் வணிகத்தொழிலை மேற்கொண்டார். பெங்களூரு முதலான நகரங்களுக்கு வியாபார நிமித்தமாகச் சென்று அங்கே சிலகாலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் மகா புலவர் என்று புகழ்பெற்ற மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அவர் பெங்களூரு வந்தபோது, அவரைத் தேடிச் சென்று உபசரித்து நமஸ்கரித்தார் தேவராயர். வித்வானிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.

ஒருகட்டத்தில், கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதை வித்வானிடம் காட்டி கருத்துகளைக் கேட்டார். வித்வானும் சில திருத்தங்களைச் சொல்ல, அவற்றைத் திருத்தி நூல்களாகவும் வெளியிட்டார். ‘தணிகாசல மாலை’, ‘சேட மலை மாலை’ முதலான நூல்களை பாலதேவராய சுவாமிகள் இயற்றினார் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. மீனாட்சி சுந்தரம் பிள்ளையைப் பற்றி எழுதிய சரிதத்தில், தேவராயர் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

இப்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கிற, பாடிக்கொண்டிருக்கிற கந்தசஷ்டிக் கவசம், திருச்செந்தூரில் தேவராயரால் பாடப்பட்டது என்றும் திருப்பரங்குன்றம், பழநி, சுவாமிமலை, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை முதலான ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே ஆறு கந்தசஷ்டி கவசங்களை அவர் பாடியுள்ளார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

திருச்செந்தூரில் பாடப்பட்ட கந்தசஷ்டி கவசத்தைத்தான் நாம் பாடிக்கொண்டிருக்கிறோம் என்றாலும் அதில், ‘பழநிக்குன்றினில் இருக்கும் சின்னக்குழந்தை சேவடி போற்றி’ என்ற வரிகளைச் சொல்லி, எனவே பழநியம்பதியில் இந்தப் பாடல் இயற்றப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிப்பவர்கள் உண்டு.

’எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கருள்வாய்’ எனும் வரிகளுக்குள்தான் இருக்கிறது கந்தசஷ்டிக் கவசம் சரிதம் உருவான கதை!

பால தேவராய சுவாமிகள் ஒருமுறை பழநிக்குச் சென்றிருந்தார். அப்போது மலையை வலம் வந்தார். கோயில் மண்டபத்தில் தங்கினார். அங்கே நோயால் பீடிக்கப்பட்டு துன்பப்பட்டுக் கிடந்தவர்களைக் கண்டார். உள்ளம் வருந்தினார். வறுமையால் வாடியவர்களைக் கண்டு மனம் பதறினார். மன நலம் குன்றி அரற்றிக் கொண்டிருந்தவர்களைக் கண்டு அழுது கலங்கினார். ‘ஞானபண்டிதா... இவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டப்பா’ என்று வேண்டிக்கொண்டு உறங்கினார். அன்றிரவு, அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், ‘உன் எண்ணப்படியே அவர்கள் அனைவரின் நோயையும் தீர்த்தோம். இவர்கள் மாத்திரமல்ல... இவர்களைப் போல் ஏதோவொரு துன்பத்தில் உழல்பவர்களுக்காக, அவர்கள் ஓதுவதற்காக, செந்தமிழில் நீ பாடு’ என சொல்லி மறைந்தார்.

இதையடுத்துத்தான், ‘சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்’ என 238 அடிகள் கொண்ட கந்தசஷ்டி கவசத்தை எழுதினார் பாலதேவராயர்.

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்பவர்கள், பாடலின் ஜீவனையும் இந்த தோத்திரத்தின் மூலம் கிடைக்கும் முருகப்பெருமானின் பரிபூரண அருளையும் எளிதாக உணரலாம். இதனால் நோய்கள் தீரும். மனக்கவலைகள் அகலும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுப்பார் முருகப்பன்.

கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்வோம். பால தேவராய சுவாமிகளை வணங்குவோம். பாலமுருகப் பெருமானை பிரார்த்திப்போம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in