தீராத பழியையும் தீர்த்துவைப்பார் சரபேஸ்வரர்!

தீராத பழியையும் தீர்த்துவைப்பார் சரபேஸ்வரர்!

சரபேஸ்வர மூர்த்தியைத் தரிசித்துப் பிரார்த்தித்து வந்தால், நமக்கு உண்டான தீராத பழியையெல்லாம் தீர்த்துவைப்பார்.

ஸ்ரீசரபேஸ்வரர் திரு அவதாரத்துக்கு புராணம் எளிமையாக விளக்கியுள்ளது.

பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான் இரணியன். தவம் செய்தது மட்டுமா? தவத்தின் பலனாக எப்படியான வரம் கேட்கவேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தான். அப்படி அவன் செய்த தவத்தின் பயனாக, “தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் முதலிய எவராலும், எதனாலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எந்த ஆயுதங்களாலோ எனக்கு மரணம் ஏற்படக் கூடாது’’ என்ற வரத்தைப் பெற்றான்!

வரம் கொடுத்தவன் மீதே கைவைத்தான் இரணியன். தன்னை எதிர்ப்பவர் எவருமின்றி, தானே கடவுள் என்று இறுமாப்புடன் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக வழிபடக்கூடாது என்று கொக்கரித்தான். கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே, நாரத முனிவர் மூலம் திருமால் உபந்யாசத்தைக் கேட்டு வளர்ந்தான். திருமாலின் பக்தனாகவே பிறந்தான்!

அப்பன் அசுரன். அவனுக்கு இப்படியொரு பிள்ளை. எந்நேரமும் நாராயண நாமம் சொல்லி வளர்ந்தான் பிரகலாதன். இதனைக் கண்ட இரணியன், மகன் மீதே கோபமானான். எவ்வளவு சொல்லியும் தன் நாமத்தைச் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். ஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடுவாரா பரம்பொருள்.

பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி “எங்கே உன் நாராயணன்’’ என்று எகத்தாளமாகக் கேட்டான் இரணியன். “என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பிரகலாதன்.

ஆவேசமானான் இரணியன், அருகில் இருந்த தூணை தன் கையில் இருக்கும் ‘கதை’ கொண்டு தாக்கினான். அதிலிருந்து நரசிம்ம உருவத்துடன் வெளிப்பட்டார் ஸ்ரீமந் நாராயணர். இரணியன் பெற்ற வரத்தின்படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாமல் அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலோ இல்லாத அந்திசாயும் நேரத்தில், எந்த ஆயுதங்களுமின்றி தன் நகங்களையே கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாமல் வெளியிலேயும் இல்லாமல் வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார் என்கிறது புராணம்.

சரி... ஸ்ரீசரபேஸ்வரர்?

அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி உக்கிரமானார் நரசிம்மமூர்த்தி. அவரின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினார்கள். பரமேஸ்வர மூர்த்தி, சரபேசம் எனும் பறவையாக உருவெடுத்து வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார் என்றும் அந்தப் பறவையே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி என்றும் விவரிக்கிறது புராணம்.

சரபேஸ்வரரின் தோற்றம் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவையே சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய இரண்டு றெக்கைகளும், நான்கு கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், நான்கு கால்கள் கீழேயும், மேலே தூக்கியநிலையில் வாலும், மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்டு, தெய்வாம்சமாகத் திகழும் விசித்திரப் பிறவியாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசரபேஸ்வரர்.

அபூர்வப் பிறவி தோன்றியதும் ஓங்கி எழுப்பிய குரலில், நரசிம்ம மூர்த்தியே தன் அடங்கினார். உக்கிரம் தணிந்தது என்கிறது ஸ்ரீநரசிம்ம புராணம்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்கை ஆகியோரைத் தன் றெக்கைகளாகவும் கொண்டு வேகமாகப் பறந்து, பகைவர்களை அழிக்கும் சரபேஸ்வரரை பட்சிகளின் அரசன் என்றும் சாலுவேஸ்வரன் என்றும் ஞானநூல்கள் விவரிக்கின்றன.

சக்தி மிக்க ஸ்ரீசரபேஸ்வரருக்கே சக்திகளாய்த் திகழ்பவர்கள் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியும் ஸ்ரீசூலினியும்! இதில் தேவி ப்ரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவளின் உதவி கொண்டே ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் புராணம் தெரிவிக்கிறது!

சரபேஸ்வரரின் சக்தி அளவில் அடங்காதது. எல்லைகளே இல்லாதது. எதிரிகளால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் முதலான தீய சக்திகளை மட்டுமின்றி, இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் சகல நோய்களையும் தீர்த்து வைப்பார். நம் மீது சுமத்தப்பட்ட தீராத பழிகளையும் துடைத்தெடுப்பார் என்கிறார் முத்துக்குமார சிவாச்சார்யர்.

‘நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி’ என்று ஸ்ரீசரபேஸ்வரரைப் போற்றுகின்றன ஞானநூல்கள். நாம் தரிசிக்கிற சரபபேஸ்வர மூர்த்தங்கள், பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் வந்தவை என்கின்றன சரித்திரக் குறிப்புகள்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம் திருத்தலத்தில் அற்புதமான சந்நிதியில் பிரம்மாண்டமாக இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீசரபேஸ்வரர். இங்கே சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் தினமும் நடைபெறுகின்றன.

மேலும், சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலிலும் தனிச் சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஸ்ரீசரபேஸ்வர தரிசனம் சர்வ பாப விமோசனம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நம் கஷ்டங்கள் நீங்கவும், தீய சக்திகளின் ஆதிக்கம் நம்மைவிட்டு விலகி ஓடவும், எதிர்ப்புகள் மொத்தமும் விலகி, நாம் விரும்பிய வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் அருளுகிறார் ஸ்ரீசரபேஸ்வரர். தீராத பழியையெல்லாம் தீர்த்துவைப்பார் சரபேஸ்வரர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in