சனி பிரதோஷம் சர்வ பாபவிமோசனம்... மறக்காதீங்க!

சனி பிரதோஷம் சர்வ பாபவிமோசனம்... மறக்காதீங்க!

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது என்கிறார்கள் சிவனடியார்கள்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை முதலான மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி திதியில்தான் என்கிறது சிவபுராணம். எனவே மற்ற ஐப்பசி சனி பிரதோஷமும் கார்த்திகையில் வரும் சனி பிரதோஷமும் மகத்துவம் மிக்கவை!

பொதுவாகவே, பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம். வறுமையும் தரித்திரமும் விலகும். நோய்கள் நீங்கும். சகலகாரியங்களில் வெற்றி கிடைக்கும். சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் அற்புத விரதம் இது!

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லிவைத்திருக்கிறோம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு அணிந்துகொண்டு, ’நமசிவாய’ நாமம் சொல்லி விரதம் மேற்கொள்ளலாம். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் நேரம் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும் என்பார்கள். பின்னர் இரவு உணவு எடுத்துக் கொள்ளலாம். இப்படி பதினோரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் தென்னாடுடைய சிவனாரின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்!

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சிவனடியார்கள்.

’சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம்’ என்று சொல்லுவார்கள். மிகவும் புண்ணியமான இந்த நேரத்தில் நாம் சிவ மந்திரங்களை ஒருமுறை ஜபித்தாலும், அது பலகோடி மடங்கு ஜபித்ததற்கான புண்ணிய பலன்களைத் தரும் என்கிறது சிவபுராணம்!

சனிப்பிரதோஷ நன்னாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, ஏதேனும் ஓரிடத்தில் கண்கள் மூடி அமர்ந்துகொண்டு, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால், நாம் ஏழு பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். நம் ஏழு தலைமுறையினர் பாவங்கள் அடியோடு விலகும்.

நந்தியம் பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடதுபுறமாகச் சென்று பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சந்நிதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களையும் வணங்கிய பலன்களைக் கொடுக்கும்.

இன்று நவம்பர் 5-ம் தேதி, சனிக்கிழமை. சனிப்பிரதோஷ நன்னாள். சிவாலயங்களில் சனி மகா பிரதோஷம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மாலை வேளையில் சிவாலயங்களுக்குச் சென்று நம்மால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானையும் சிவபெருமானையும் வழிபடுவோம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in