தம்பி முருகனுக்கு உகந்த செவ்வாயில் அண்ணனுக்கு சங்கடஹர சதுர்த்தி!

தம்பி முருகனுக்கு உகந்த செவ்வாயில் அண்ணனுக்கு சங்கடஹர சதுர்த்தி!

தம்பி முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் அண்ணன் விநாயகப் பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இன்று 10-ம் தேதி செவ்வாய்க்கிழமையில் அண்ணனையும் தம்பியையும் ஒருசேர வணங்கிப் பிரார்த்திப்போம்.

தோஷங்களில் மிக முக்கியமான தோஷம் என்று எல்லோரும் கவலைப்படுவது செவ்வாய் தோஷத்துக்குத்தான்! செவ்வாய் தோஷம் இருந்தால், அங்கே களத்திர ஸ்தானம் எனப்படும் திருமண பாக்கியம் பலஹீனமாக இருக்கும் என்பார்கள். கல்யாண யோகம் தடைபட்டு, தள்ளிக்கொண்டே போகும் என்பார்கள்.

செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். வேலுண்டு வினையில்லை என்பதற்கு ஏற்ப, வேலவனை வணங்கினால் செவ்வாய் தோஷம் முதலான தோஷங்கள் விலகும் என்கிறது சாஸ்திரம். முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய நாளாக, செவ்வாய்க்கிழமை அமைந்திருப்பதும் இதனால்தான் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

ஞானகுரு என்று போற்றப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த நிறமான சிகப்பு நிறத்திலான பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபடுவது ரொம்பவே விசேஷமானது. செவ்வரளி, ரோஜா முதலான பூக்களைக் கொண்டு அர்ச்சிப்பதும் முருகக் கடவுளை அலங்கரிப்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும் என்பது ஐதீகம்!

அதேபோல் சிவமைந்தனான முருகக் கடவுளுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை என்றால் சிவனாரின் மூத்த மைந்தனான பிள்ளையாருக்கு உகந்த கிழமையாக எல்லாக் கிழமையையும் சொல்லுவார்கள். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் ஆனைமுக வழிபாடு மிக மிக அவசியம். அதனால்தான் சிவாலயங்களில் அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களிலும் எடுத்ததுமே பிள்ளையார் சந்நிதி அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமிக்கு அடுத்து வருகிற தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று வணங்கி வழிபடுகிறோம். கிருத்திகை விரதம் போல், ஏகாதசி விரதம் போல், திருவோண விரதம் போல், சங்கடஹர சதுர்த்திக்கும் விரதம் மேற்கொண்டு வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள்.

பிள்ளையாருக்கு பூக்கள் வாங்கவேண்டும், மாலையாக்கவேண்டும், அலங்கரிக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. அரசமரத்தடியிலும் ஆலமரத்தடியிலும் குளத்தங்கரைகளிலும் நம் தெருமுனைகளிலும் இருந்து அருள்பாலிக்கிற பிள்ளையாருக்கு, ஆற்றங்கரைகளிலும் வயல்வெளிகளிலும் இருக்கிற அருகம்புல் சார்த்தினாலே, அகம் மகிழ்ந்து அருள்பாலிப்பார் ஆனைமுகத்தான்!

அதேபோல், ரோட்டோரத்திலும் தோட்டங்களிலும் கரையோரங்களிலும் எருக்கஞ்செடியில் இருக்கிற பூவைக் கொண்டே அலங்கரித்து வேண்டிக்கொண்டால் போதும்... நமக்கு பொன்னும் பொருளும் அள்ளித்தந்து அருள்பாலிப்பார் விநாயகப் பெருமான்!

இன்று செவ்வாய்க்கிழமை, சங்கடஹர சதுர்த்தி. காலையும் மாலையும் சங்கரன் புதல்வன் பிள்ளையாரப்பனை மனதார வேண்டிக்கொள்வோம். மங்கல காரியங்களை உடனே நடத்திக்கொடுத்து அருளுவான் வேழமுகத்தான். நம் வேதனகளையெல்லாம் போக்கி விடியலைத் தருவான் ஆனைமுகத்தான்.

செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தியில், அண்ணன் பிள்ளையாரையும் அவன் தம்பி முருகக் கடவுளையும் ஒருசேர பிரார்த்திப்போம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in