சங்கடமெல்லாம் தீர்க்கும் சங்காபிஷேக தரிசனம்!

- கார்த்திகை சோமவார விரத பலன்கள்
சங்காபிஷேகத்துக்கான சங்குத் தீர்த்தம்...
சங்காபிஷேகத்துக்கான சங்குத் தீர்த்தம்...

சிவபெருமானை வழிபடுவதற்கு எத்தனையோ நாட்கள் உகந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. மாதத்தில் இரண்டு முறை வருகிற பிரதோஷம் என்று சொல்லப்படுகிற திரயோதசி திதி முக்கியமான நாளாகப் போற்றி வணங்கப்படுகிறது. அதேபோல, மாத சிவராத்திரியும் மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரியும் விசேஷமான நாட்கள். விரதம் மேற்கொள்வதற்கான நாட்கள்.

ஒவ்வொரு மாதமும் வருகிற திருவாதிரையும் மார்கழி திருவாதிரையும் ரொம்பவே சிறப்பு வாய்ந்த நாட்கள் என்று வழிபாடுகள் நடக்கின்றன. பொதுவாகவே, திங்கட்கிழமை என்பது சிவனாரை வணங்கி வழிபடுவதற்கான நாள் என்பார்கள் சிவனடியார்கள்.

திங்கள் என்பது சந்திரனைக்குறிக்கும். சந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வகையில், தேய்ந்திருந்த சந்திரனைப் பெருமைப்படுத்துகிற விதமாக, பிறையையே சிரசில் அணிந்திருக்கிறார் சிவபெருமான் என்கிறது சிவபுராணம். அதனால்தான், சிவபெருமானைப் வணங்கக் கூடிய, வழிபடக் கூடிய முக்கியமான விரதங்களில் சோம வார விரதமும் ஒன்று. சோம வாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கட்கிழமை என்பது சந்திரனுக்கு உரிய நாள்!

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்டான் சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான் என்கிறது புராணம். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனுடைய ஒரு கலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற திருநாமம் பெற்றார். சோமநாதன், சோமேஸ்வரர், சோமசுந்தரர் எனும் திருநாமங்களும் அமையப்பெற்றார் சிவனார்.

மேலும், சந்திர பகவானின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவியரில் ஒருத்தியான ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் என்பது கூடுதல் விசேஷம். (அதனால்தான் ஆலயம் செல்லும்போதும் வீட்டில் வழிபாடுகளை மேற்கொள்ளும் போது கணவனும் மனைவியுமாக சேர்ந்து பூஜைகளில் ஈடுபடுவது தகுந்த பலன்களையும் வரங்களையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்). அன்று முதல், பெண்கள் தீர்க்கசுமங்கலியாக வாழவும் கணவனுக்கு மேன்மைகளும் பெருமைகளும் உண்டாகவும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்நொடிகள் தாக்காமல் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்றும் சோமவார விரதம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது.

சோமவார விரதம் என்பதை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மேற்கொள்வது சிறப்பு. அதேசமயம், கார்த்திகை மாதத்துச் சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) தனிச் சிறப்பு மிக்கவை. கார்த்திகை மாதத்தில், இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சந்திரசேகரர் பவனியும் விமரிசையாக நடந்தேறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்விகள் செய்து, அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும்!

கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு வெண்மை நிற மலர்கள் சூட்டி, வெண்பட்டாடை அணிவித்து வழிபட்டால், ஆயுள் பலம் பெருகும். விருத்தி அடையும். மன அமைதி உண்டாகும். வம்சம் வாழையடி வாழையென தழைக்கும். பொருளால் ஏற்பட்ட கடன், பிறவியால் ஏற்படும் கடன் என கடன்கள் மொத்தமும் விடுபட்டு முக்திக்கு வழி கிடைக்கும் என்கிறார்கள் சிவனடியார்கள்!

நம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் கார்த்திகை சோமவார சங்காபிஷேக தரிசனத்தில் கலந்துகொண்டு தென்னாடுடைய சிவனாரை வணங்குவோம். தெளிவுடனும் நிம்மதியுடனும் அருளும் பொருளும் கிடைத்து ஆனந்தமாக வாழச் செய்வார் சோமேசன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in