தேவசகாயம்: சாதிய பாகுபாட்டை சாடிய புனிதர்!

தேவசகாயம்
தேவசகாயம் படம்: ஜவஹர்ஜி

குமரிமாவட்டம், நட்டாலத்தில் பிறந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் தேவசகாயம். கிறிஸ்தவத்தை தழுவியதால் திருவிதாங்கூர் மகாராஜாவால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு மரணத்தைத் தழுவியவர்.

இந்தியாவின் முதல் மறை சாட்சியாகவும், தமிழகத்தின் முதல் புனிதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் தேவசகாயம். இவரது வாழ்கையை கள ஆய்வுகள், ஓலைச்சுவடிகள், பழமையான திருவிதாங்கூர் குறித்த வரலாற்று நூல்கள் ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டு, ‘தெற்கில் விழுந்த விதை’ எனற நூலாக எழுதியவர் கவிஞரும், வரலாற்று ஆய்வாளருமான குமரி ஆதவன். மே 15-ம் தேதி, ரோமில் போப் பிரான்சிஸ், தேவசாகயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கவிருக்கும் நிலையில், குமரி ஆதவனிடம் காமதேனுவுக்காகப் பேசினோம்.

குமரி ஆதவன்
குமரி ஆதவன்

"என்னுடைய இளமைப் பருவத்தில் தேவசகாயம்பிள்ளை நாடகத்தில் தேவசகாயம் பிள்ளையாகவே நடித்தேன். அப்போதுதான் அவர் பட்டபாடுகளும் அதற்கு பிறகான அவருடைய புகழும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருடைய வரலாற்றை எழுத வேண்டும் என்ற கரு இளமையிலேயே என்னுடைய மனதில் உருக்கொண்டது.

1712 ஏப்ரல் 23-ம் தேதி பிறந்த நீலகண்டன் (தேவசகாயம்) வாழ்ந்த காலகட்டத்தில் சாதிப் படிநிலை உச்சத்திலிருந்தது. மீசை வரி, முலைவரி என 108 விதமான கொடும் வரிகள் பிற்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்தது. உயர்பிரிவினரின் வீட்டில் முதல் மகனுக்கு மட்டும் அவர்களுடைய உறவில் திருமணம் நடைபெறும். அந்த வீட்டில் உள்ள மற்ற இளைஞர்கள் எந்த இடத்திற்கு கோயில் பணி செய்வதற்காக செல்கிறார்களோ, அந்த இடத்தில் நாயர் அல்லது அம்பலவாசிகள் சமூத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்த இரண்டு சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் அன்றே முழுமையாக பங்கு உண்டு. எனவே, அந்தக் குடும்பச் சொத்தில் இவர்களும் வாழ்வது வழக்கமாக இருந்தது.

அதேசமயம், அவர்கள் அந்தக் கோயிலை விட்டு பூஜை செய்வதற்கு வேறு கோயில்களுக்குச் சென்றால் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அப்படியே கவனிக்காமல் விட்டுப் போகிற பழக்கமும் இருந்தது. இத்தகைய ஓர் இக்கட்டு நீலகண்டனின் குடும்பத்திலும் ஏற்பட்டது. திருவட்டார் ஆதிகேசவன் கோயிலில் பூசாரியாக இருந்த இவருடைய தந்தை வாசுதேவன் நம்பூதிரி, தேவசகாயத்திற்குப் பத்து வயதிருக்கும் போது இவருடைய தாய் தேவகியம்மை, தங்கை லட்சுமி குட்டி ஆகிய மூவரையும் நிராதரவாக விட்டுவிட்டு போய்விடுகிறார். மாமா ராமன் பிள்ளை உதவியோடு பரைக்கோடு கரைகண்ட முத்தப்பர் ஆசானிடம் சிலம்பம், களரி போன்ற கலைகளையும் கல்வியையும், தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளையும் கற்று சிறந்த ஆளுமையாக உருவெடுத்தார் நீலகண்டன்.

இவரது கணித திறமையின் காரணத்தால் பத்மநாபபுரம் அரண்மனையில் வரவு, செலவு கணக்கு அதிகாரியாக வேலை கிடைத்தது. இதனால் இரணியல் அருகே மேய்க்கோடு பகுதியைச் சேர்ந்த பாக்கவியம்மா மனைவியாகத் கிடைத்தார். நாயர் சமூகமும் முற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தாலும், சாதிய இடுக்குகளுக்குள் தேவசகாயத்தின் குடும்பமும் இப்படியாக சிக்கியது” என்று அன்றைய காலச் சூழலை எடுத்துவைக்கிறார் குமரி ஆதவன்.

நட்டாலத்தில் உள்ள தேவசகாயத்தின் பூர்விக வீடு...
நட்டாலத்தில் உள்ள தேவசகாயத்தின் பூர்விக வீடு... படம்: ஜவஹர்ஜி

அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகளுக்குத் தான் இந்தியாவில் இருந்து இதுவரை புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு தனது சமகால சமூகத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை உடைப்பதற்காக கிறிஸ்தவம் தழுவிய சாதாரண மனிதரான தேவசகாயத்துக்கு முதன் முதலாகப் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் இருந்து முதன் முதலாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிற தமிழரும் தேவசகாயம் தான்!

இந்தக் தகுதியைப் பெற தேவசகாயம் செய்த நற்காரியங்கள் என்ன என்பது குறித்தும் விரிவாகப் பேசினார் குமரி ஆதவன்.

“1741-ல் டச்சு படைக்கும், திருவிதாங்கூர் படைக்கும் குளச்சலில் யுத்தம் நடந்தது. அதன் முடிவில் டச்சுப் படையினர் திருவிதாங்கூர் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர்தான் டச்சுத் தளபதி எஸ்தாக்கியூஸ் பெனடிக்ட் டிலனாய். ஆயுதங்கள் தயாரிப்பதிலும் போர்முறைகளை வகுப்பதிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த டிலனாயை மன்னர் மார்த்தாண்ட வர்மா தனக்கு நண்பராக மாற்றிக் கொண்டார். இந்த நட்பின் நீட்சியாக திருவிதாங்கூர் அரசுக்குத் தேவையான நவீன ஆயுதங்களை தயாரித்து கொடுப்பதற்கும், அதோடு போர் வீரர்களுக்கு நவீன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான போர் பயிற்சியை வழங்குவதற்கும் மன்னர் கேட்கிறார். இதை ஏற்றுக் கொண்ட டிலனாய், உதயகிரி கோட்டையை உருவாக்குகிறார். இதற்கான செலவுகளுக்கும், வேலையாட்களுக்கு சம்பளம் வழங்கவும் இங்கு வந்து போகிறார் நீலகண்டன். இதனால் டிலானாயுடன் அவருக்கு ஆழமான நட்பு உருவாகிறது.

தன் குடும்ப கஷ்டங்கள் குறித்து வேதனையோடு டிலனாயிடம் நீலகண்டன் பகிர்ந்து கொள்கிறார். அவரை ஆறுதல் படுத்துவதற்காக விவிலியத்திலிருந்து யோபுவினுடைய வாழ்க்கையை அவருக்கு கதையாகச் சொல்கிறார் டிலனாய். அவரிடமிருந்து விவிலியத்தை வாங்கி படிக்க ஆரம்பிக்கிறார் நீலகண்டன். திருவிதாங்கூரில் சாதியப் படிநிலைகளை உடைப்பதற்காக, தான் கிறிஸ்தவராக மாறவேண்டும் என்று முடிவு செய்கிறார் நீலகண்டன். திருவிதாங்கூரில் நாயர் சமூகத்தினர் கிறிஸ்தவத்தை தழுவக் கூடாது என்கிற சட்டம் இருந்த காரணத்தால் திருவிதாங்கூருக்கு வெளியே இருந்த வடக்கன் குளம் சென்று அருட்தந்தை புத்தாரி அடிகளாரை சந்தித்து 1745 மே மாதம் 14 -ம் தேதி கிறிஸ்தவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நீலகண்டன் தேவசகாயமாக மாறினார்.

ஆரல்வாய்மொழியில் தேவசகாயம்பிள்ளை மறைந்த இடம்
ஆரல்வாய்மொழியில் தேவசகாயம்பிள்ளை மறைந்த இடம்

அதன்பிறகு தனது மனைவியையும் அதே வழியில் கிறிஸ்தவராக்குகிறார். தேவசகாயம் கிறிஸ்தவராக மாறியதை அறிந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா அவரை கைது செய்து மனம் மாற்ற அதிகாரிகளை அனுப்பினார். ஆனால், யார் சொல்லியும் பின்வாங்கவில்லை தேவசகாயம். கொடிய தண்டனைகளை அளித்தபோதும் அவர் மனம் மாறவில்லை. அவர்கள் இழுத்துச் சென்ற இடமெல்லாம் கூடிய மக்களிடம் கிறிஸ்தவத்தை போதிக்கவும், சமஸ்தானத்தில் நிலவிய சாதிய கொடுமைகளைச் சாடவும் செய்தார்.

1752 ஜனவரி 14-ல் தேவசகாயத்திற்கு ஆரல்வாய்மொழி மலைப் பகுதியில் ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கும் முன்பே முட்டடிச்சான் பாறை என்னும் இடத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது அற்புதங்களை நிகழ்த்தினார். பாறையிலும் கருணை வெள்ளத்தில் நீர் சுரக்கச் செய்தது வரலாறு. சாதிப் படிநிலைகளை உடைத்ததும் அந்தச் சிந்தனையை அவரிடம் விதைத்த கிறிஸ்தவத்தை பரப்பியதும் அவர் மரணத்திற்கும் காரணமானது” என்று சொன்னார் ஆதவன்.

நிறைவாக அவரிடம், “தேவசகாயம் கனவு கண்ட சாதியற்ற சமூகம் கிறிஸ்தவத்தில் உருவாகியிருக்கிறதா?” என்று கேட்டோம். “மிகச் சொற்பமானவர்களிடம் மட்டுமே அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. கிறிஸ்தவம் சாதி படி நிலையற்ற சமூகத்தை விரும்பினாலும், மிதிப்பதற்கு தனக்கு கீழே ஒருவன் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க மனநிலை மனிதர்களை விட்டு மறையவில்லை. இந்த சாதிச் சண்டைகள் கிரீடங்களிலிருந்து மாற்றமடைய வேண்டும். ‘போதகரைப் பார்க்காதே; போதனையைக் கேள்’ என்பது ஏமாற்று வித்தை. போதகரைப் பார்த்து படிக்கிற காலம் இது. தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நாளில் கிறிஸ்தவம் சாதி வேறுபாடுகள் அற்றது என நிரூபிக்க உறுதியேற்க வேண்டும்” என்று அழுத்தமாக முடித்தார் குமரி ஆதவன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in