சகல தோஷமும் போக்கும் ஆடி செவ்வாய் பிரதோஷம்!

பிரதோஷத்தில் நந்திதேவருக்கு பூஜை
பிரதோஷத்தில் நந்திதேவருக்கு பூஜை

ஆடிச் செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து பிரதோஷம் வருவது இன்னும் சிறப்பு. அம்மையையும் வணங்கி அப்பன் சிவனாரையும் தரிசித்து ஆனந்த வாழ்வு வாழலாம் என்பது ஐதீகம்.

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு முன்னதாகவும் திரயோதசி திதி வரும். இந்தநாளையே பிரதோஷ நாள் என்று வணங்கி வழிபடுகிறோம். சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் உரிய அற்புதநாள் இது.

ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கும் அப்போது நாம் செய்யும் தரிசனத்துக்கும் உகந்த பலன்கள் உண்டு என்கிறது சிவ புராணம். சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் என்பார்கள். செவ்வாய்க்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தின் போது, சிவனாரைத் தரிசித்தால், சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம், தொழில் சிக்கல்களில் இருந்து மீளலாம், உத்தியோகத்தில் உயர்வு உண்டு என்கிறார்கள் சிவனடியார்கள்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எல்லா நாளும் அம்மனை, தேவியை, அம்பாளை தரிசிக்க உகந்தநாட்கள். அம்மையை வணங்குகிற அதேவேளையில், அப்பன் சிவபெருமானையும் பிரதோஷ நாளில் வணங்குவது இன்னும் நலமும் வளமும் சேர்க்கும்.

பிரதோஷ நாளில், பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்தநாளில், சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், மங்கல காரியங்கள் இனிதே இல்லத்தில் நிகழும். மங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம்.

தஞ்சை பெரியகோயில் நந்தி
தஞ்சை பெரியகோயில் நந்தி

பிரதோஷத்தின் போது நந்திதேவருக்கும் சிவனாருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கும் அதேவேளையில், ஒருகைப்பிடி அளவேனும் வில்வம் வாங்கி சிவலிங்கத் திருமேனிக்கு சார்த்துங்கள். நம் இந்த ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் நீங்கும்; தோஷங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் சிவனடியார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in