அனுமன் வாலுக்கு குங்கும அலங்காரம்; வடைமாலை சார்த்தினால் ராகு, சனி தோஷமெல்லாம் விலகும்!


அனுமன் வாலுக்கு குங்கும அலங்காரம்; வடைமாலை சார்த்தினால் ராகு, சனி தோஷமெல்லாம் விலகும்!

அனுமனின் வாலுக்கு சந்தன குங்குமமிட்டு பிரார்த்தனை செய்து, வடைமாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், ராகு தோஷங்களும் சனி தோஷங்களும் விலகும். நம்மை சகல தோஷங்களில் இருந்தும் காத்தருளுவார் ஜெய் அனுமன்!

நித்திய சிரஞ்ஜீவி என்று அனுமனைப் புகழ்கிறது புராணம். அதாவது, ராமபக்தனான அனுமன், இன்றைக்கும் சூட்சும வடிவமாக நம்மிடையே இருந்து அருள்பாலித்து வருகிறார் என்கிறது அனுமன் புராணம். ஆஞ்சநேயப் பெருமானை, மனமுருகிப் பிரார்த்தித்து வந்தால், நம் எதிரே ஏதோவொரு ரூபத்தில் தோன்றி நமக்கு அருள்புரிகிறார் என்பதாக ஐதீகம்.

அனுமனுக்கு புதன்கிழமையும் வியாழக்கிழமையும் சனிக்கிழமையும் உகந்தநாட்களாகப் போற்றப்படுகிறது. அதேபோல் அனுமனுக்கு துளசிமாலை சார்த்தலாம். வெண்ணெய்க் காப்பு செய்து வழிபடலாம். அதேபோல வெற்றிலை மாலை சார்த்தி வழிபடலாம். முக்கியமாக, அனுமனுக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.

உப்பும் காரமும் கலந்து அதில் கொஞ்சம் மிளகும் சேர்த்து வடை சமைத்து, அவற்றைக் கோத்து மாலையாக்கி அதனை ஸ்ரீஆஞ்சநேயருக்கு சார்த்தி வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள். இதை ரொம்பவே மகத்துவம் வாய்ந்த வழிபாடு என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தமிழகத்தில் வடை மாலை பிரசித்தம் என்பது போல், வட இந்தியாவில், அனுமனுக்கு ஜாங்கிரியால் மாலை செய்து அலங்கரித்து வேண்டிக் கொள்கின்றனர். இந்த இரண்டிலுமே உளுந்து கலக்கப்படுகிறது. உளுந்து என்பது ராகு பகவானுக்கு விசேஷமான தானியமாக புராணங்கள் சொல்கின்றன.

ராம பக்த அனுமனுக்கு, இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நமக்கு நற்பலன்களை வாரி வழங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆஞ்சநேய பெருமானுக்கு வாலில்தான் சக்தி அதிகம் உள்ளது என்பார்கள். அதனால்தான் தன் வாலைச் சுருட்டி மிகப்பிரம்மாண்டமான மேடைபோலாக்கி அதில் அமர்ந்தார் என்று சிலாகிக்கிறது புராணம். அத்தனை சக்தி வாய்ந்த அனுமனின் வால் வழிபாடு மகிமை மிக்கது. அதாவது, ஆஞ்சநேயப் பெருமானின் வாலில், குங்குமம் வைத்து வழிபடுவார்கள் பக்தர்கள். ஸ்ரீராம பக்தியுடன், ராமநாமத்தை ஜபித்தபடியே, வால் பகுதியில் இருந்து சந்தனமிட்டு, குங்குமமிட்டு வரவேண்டும். வாலின் நுனிப்பகுதியை அடைந்ததும் கலைத்துவிட்டு, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து நுனி வரை சந்தனம் குங்குமம் இடவேண்டும். இதை ஒவ்வொரு வாரமும் செய்பவர்களும் உண்டு. அல்லது வாலில் குங்குமம் வைப்பார்கள். பிறகு அடுத்த வாரத்தில் தேர்ந்தெடுத்த கிழமையில் அடுத்த இடத்தில் சந்தனமும் குங்குமமும் இடுவார்கள். பிறகு அடுத்த வாரத்தில் அதேகிழமையில் சந்தனகுங்குமம் இட்டுக்கொண்டே வருவார்கள். வாலின் முனைப் பகுதியில் பொட்டு வைப்பதுடன் பூஜை நிறைவடைகிறது என்று அர்த்தம். பிறகு, அருகிலுள்ள அனுமன் கோயிலுக்கோ அனுமன் குடிகொண்டிருக்கும் சந்நிதிக்கோ சென்று வடைமாலை சார்த்தி வேண்டிக்கொண்டு பூஜையை நிறைவு செய்வார்கள்.

ராகுவின் தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு அனுமன் வழிபாடே சிறந்தது. அதேபோல் சனி பகவானின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கும் அனுமன் நமக்கெல்லாம் அருள்பாலித்து நம்மைக் காத்தருளுகிறார். அனுமனுக்குச் சார்த்தப்படும் வடைமாலை செய்வதற்கு, தோல் நீக்காத கறுப்பு உளுந்து பயன்படுத்துவது வழக்கம். வழிபாட்டின் போது,

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி,

தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’

என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம். ராகு தோஷத்தில் இருந்தும் சனி பகவானின் தோஷங்களில் இருந்தும் நம்மைக் காத்தருளுவார் ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in