பாதியில் நிற்கும் மீனாட்சி அம்மன் கோயில் ராயகோபுரம்!

இப்போதாவது பணிகளை முடிக்க கோரிக்கை
பாதியில் நிற்கும் மீனாட்சி அம்மன் கோயில் ராயகோபுரம்!
அடித்தளத்துடன் நிற்கும் ராயகோபுரம்...

தமிழகத்திலேயே மிக உயரமான கோபுரமாக அமைந்திருக்க வேண்டியது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ராயகோபுரம். ஆனால், இந்தக் கோபுரத்தைப் பற்றிய புரிதல் மதுரைக்காரர்களுக்கே சரிவர இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னர் தனது தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றினார். மதுரையை தலைநகராகக் கொண்டு அவர் ஆட்சிசெய்த காலத்தில் வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் போன்ற ஏராளமான வரலாற்று அடையாளங்களையும் கூடல் மாநகருக்கு கொடையாகக் கொடுத்தார்.

இப்படியெல்லாம் சிந்தித்தவர், எதிர்காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலின் மற்ற கோபுரங்கள் எல்லாம் கட்டிடங்களால் மறைக்கப்படும் என்பதையும் அப்போதே கணித்திருக்க வேண்டும். அதனால்தான் மிகப்பிரம்மாண்டமாக ராயகோபுரத்தை கட்டத் தொடங்கி இருக்கிறார். ஆனால், அந்தக் கோபுரம் அவராலும், அவருக்குப் பின் வந்தவர்களாலும் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட முடியாமலேயே நின்று போனது.

ராயகோபுரம் அடித்தளம்...
ராயகோபுரம் அடித்தளம்...

மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரங்களுக்கு எல்லாம் மகுடமாக அமையும் விதத்தில் 16-ம் நூற்றாண்டில் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டதுதான் ராயகோபுர பணி. அதற்காக, புதுமண்டபம் எதிரே நந்தி சிலைக்கு அருகில் அடித்தளம் அமைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் தற்போதுள்ள உள்ள 14 கோபுரங்களில் மிக உயரமானது தெற்கு கோபுரம் தான். இதன் உயரம் 170 அடி. இதற்காக அமைக்கப்பட்ட அடித்தளத்துடன் ராயகோபுரத்தின் கல்ஹாரம் எனப்படும் அடித்தளத்தை ஒப்பிடும்போது, சுமார் 3 மடங்கு பெரியதாகும். இதை வைத்து, ராயகோபுரம் முழுமைபெற்றிருந்தால் அதுதான் தமிழகத்திலேயே மிக உயரமான கோயில் கோபுரமாக இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிற்ப சாஸ்திர பயிற்றுநரும், கோயில் கட்டிடக்கலைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான தேவி அறிவுச்செல்வம், “மீனாட்சியம்மன் கோயில் ராயகோபுரமானது அதன் பிரம்மாண்டத்தில் மட்டுமல்ல, மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்காகவும் பெரும் வியப்பைத் தருவதாக உள்ளது. இதன் அடித்தளமான கல்ஹாரத்தின் உயரம் மட்டும் 50 அடி உள்ளது. 170 அடி நீளமும், 110 அடி அகலமும் கொண்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கையில், இந்தக் கோபுரம் முழுமையாகக் கட்டிமுடிக்கப் பட்டிருந்தால், அதன் உயரம் 300 அடிகளாக இருந்திருக்கலாம் என கணிக்க முடிகிறது. கடைகள் சூழ்ந்துள்ளதால், இந்தக் கோபுரத்தின் பிரம்மாண்டத்தை நம்மால் முழுமையாக உணரமுடியவில்லை.

நந்தி சிலை
நந்தி சிலை

இந்தக் கோபுரத்தின் 4 நிலைக்கற்களிலும் மிக நுணுக்கமாக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பூத கணங்கள், பெண் தெய்வங்கள், தாமரை மாலைகள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிற்ப சாஸ்திரத்தின்படி சாலை விமானங்கள், கூடு ஆகியவற்றை அழகாகவும், பெரிதாகவும் அமைத்துள்ளனர். ஒரு விரல் அளவுள்ள சிவலிங்கங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் அதில் முக அலங்காரம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேவி அறிவுச்செல்வம்
தேவி அறிவுச்செல்வம்

ராயகோபுரத்தைச் சீரமைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.2.60 கோடி ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபோல முற்றுப்பெறாத ராயகோபுரங்கள் மதுரைக்கு அருகில் அழகர்கோயில் மற்றும் திருவேடகத்திலும் உள்ளன” என்றார்.

விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கவிருக்கும் நிலையில், கும்பாபிஷேக திருப்பணி வேலைகளுடன் ராயகோபுரத்தை முழுமையாகக் கட்டியெழுப்பும் பணிகளையும் தொடங்கி முடிக்க வேண்டும் என்பதே சிற்பக் கலை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “முன்பெல்லாம் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை மதுரைக்குள் எங்கிருந்து பார்த்தாலும் பார்க்கமுடியும். பக்கத்து கிராமங்களுக்கேகூட தெரியும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தற்போது, கட்டிடங்களுக்கான உயரக் கட்டுபாடு விதிகளை யாருமே பின்பற்றாததால் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பார்த்தால்கூட கோயில் கோபுரங்கள் தெரிவதில்லை. ராயகோபுரம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டால் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மதுரையின் அடையாளமாக மீட்கப்படும். எனவே, கோயில் நிர்வாகமும் அரசும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் நல்லது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in