நாளை ரத சப்தமி : குடும்ப மேன்மைக்கு கோல வழிபாடு!

சூரியக் கோலம்
சூரியக் கோலம்

ரத சப்தமி நன்னாளில் சூரிய பகவானை பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரிய பகவானைப் போற்றி வணங்கும் மிக முக்கியமான நாளாக ரத சப்தமி வைபவம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் (28.01.2023 சனிக்கிழமை) ரதசப்தமி.

ரத சப்தமி நாளில், சூரிய உதயத்தின் போது விரதத்தை மேற்கொள்ளவேண்டும். வீட்டில் அல்லது நதிக்கரைகளில் சுத்தமான இடத்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். அங்கே சூரிய ரதத்தை கோலமாக வரைந்து கொள்ள வேண்டும். அதேபோல், வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ சூரிய ரதத்தைப் போல வரைந்து கொள்வதும் வழக்கம். அந்த ரதத்தில் சூரிய சந்திரர்கள் அமர்ந்து பவனி வருவதாக பாவித்துக் கொள்ளவேண்டும்.

அடுத்து, அந்தக் கோலத்தை, சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, செந்நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். அப்போது, ஆதித்ய ஹ்ருதயம் முதலான ஸ்லோகங்கள் படிப்பது நம் பாவங்களையெல்லாம் போக்கவல்லது என்றும் புண்ணியங்கள் அனைத்தையும் தந்தருளும் என்றும் விவரிகிறது தர்மசாஸ்திரம்.

அதாவது ரத சப்தமி நாளில், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்து, சூரியனாரை வணங்கினால், ஏழு பிறவியிலான பாவங்களும் விலகும். ஏழு தலைமுறை சந்ததியினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

சூரியன் குறித்த ஸ்லோகங்களைச் சொல்லி முடித்ததும் சர்க்கரைப் பொங்கல், கோதுமை ரவா பாயசம், உளுந்து வடை முதலானவற்றை நைவேத்தியம் செய்து பூஜித்துப் பிரார்த்திக்கலாம். கோதுமை கலந்த உணவு மற்றும் அன்னம் ஆகியவற்றை பசுவுக்கு வழங்குவது நம் அடுத்த தலைமுறையான நம் சந்ததிக்கு பலம் சேர்க்கும். தலைமுறை இடைவெளியே இல்லாமல், வாழையடி வாழையென வம்சத்தை விருத்தியாக்கும். வாழ்வாங்கு வாழச் செய்யும். வியாபாரத்தில் விருத்தியை ஏற்படுத்தித் தரும். குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும்.

ரத சப்தமி நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள் எதுவாக இருந்தாலும் அவை தடையின்றி நடந்தேறும். நமக்கு நல்லதொரு லாபத்தையும் உயர்வையும் கொடுக்கும். ரத சப்தமி நாளில், செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்.

முக்கியமாக, இந்த ரத சப்தமி நன்னாளில், நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குவதாக ஒரு நம்பிக்கை. இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்குக் கிடைத்து நம்மை இன்னும் இன்னுமாக மேன்மைப்படுத்துகிறது.

சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு சேர்ப்பது மிக மிக நல்லது. அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து சூரியனாரை வழிபடுவது சிறப்புக்கு உரியது.

ரத சப்தமி நன்னாளில், ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசிப்பதும் நற்பலன்களை வழங்கும். நம் பாவங்களையெல்லாம் போக்கும்.

ரத சப்தமித் திருநாளில் ஆதவனையும் நம் முன்னோர்களையும் வழிபடுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in