தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமிய மக்கள், ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தினர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

தமிழகம், புதுச்சேரியில் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகையையொட்டி அனைத்து மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது. ஈகையை வாழ்க்கையின் பாகமாக்குகிறது. சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என்கிறது. உலக நாடுகளின் கொடிகளிலெல்லாம் சமாதானப் பூக்களையே யாசிக்கிறது. ரமலானை வகுத்தவர்களையும் வாழ்கிறவர்களையும் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.