ராஜராஜ சோழன் வாழ்க வாழ்கவே..!

- ஐப்பசி சதய நாயகனின் அற்புதத் திருவிழா
ராஜராஜ சோழன் வாழ்க வாழ்கவே..!

அந்தக் காலத்தில் தேசத்தை ஆட்சி செய்தவர்களை மன்னன் என்று அழைத்தார்கள். இப்படியோ எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், மாமன்னன் என்று மன்னர்களுக்கெல்லாம் மன்னன் என்று ஒரேயொருவரைத்தான் அழைத்தார்கள். இன்றைக்கும் அப்படி அழைத்துக் கொண்டிருக்கிறோம். நாட்டை ஆட்சி செய்தவர்களை ராஜா என்று அழைத்தார்கள். எத்தனையோ ராஜாக்களை சரித்திரம் குறித்துவைத்திருக்கிறது. ஆனால், ஒரெயொருவரைத்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜா எனும் ரீதியில், ராஜராஜன் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் ராஜராஜ சோழப் பெருந்தகை. விவசாயம், கலை, வணிகம், ஆன்மிகம், நிர்வாகம் என அனைத்திலும் மக்களை முன்வைத்து எவனொருவன் ஆட்சி செய்கிறானோ... அவனே மிகச் சிறந்த மன்னன்; அவனது ஆட்சிக் காலமே பொற்காலம்! அப்படி பொற்கால ஆட்சி நடத்திய ராஜராஜசோழன் கட்டிய திருக்கோயிலே தஞ்சைப் பெருவுடையார் கோயில் எனும் பெரியகோயில்.

Ramji

சோழ தேசத்தில் எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத, மறக்கவே முடியாத மன்னனாகத் திகழ்ந்தான் மாமன்னன் ராஜராஜ சோழன். கலாசாரம் வளர்த்தான், பக்தி பெருக்கினான். இலக்கியம் ஊக்குவித்தான். சிற்பக்கலைஞர்களுக்கு உரிய மரியாதை செலுத்தினான். ஓவியக் கலையை ஊக்கப்படுத்தினான். கலைகளின் நாகரிகங்களையெல்லாம் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றான். அவற்றையெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக்கினான். அதனால்தான் தஞ்சை பெரியகோயிலும் அதிசயமாகத் திகழ்கிறது இன்றைக்கும்! அதற்காகத்தான் ராஜராஜசோழனும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் ஆச்சரியமாகத் திகழ்கிறான்.

தஞ்சைத் தரணியில், கோயில்கள் ஏராளம். இத்தனை ஆலயங்களிலும் நேர்த்தி மிக்க, பிரம்மாண்டமான ஆலயம்... தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். 1010-ம் ஆண்டு கட்டப்பட்டு, இதோ... ஆயிரம் வருடங்களைக் கடந்தும் கம்பீரத்துடனும் கலைநயத்துடனும் பொலிவு மாறாமல் நின்றுகொண்டிருக்கிறது. தமிழின் பெருமையை, தமிழனின் மகத்துவத்தை, பக்தியின் மேன்மையை, இறைவனின் அருளாடல்களைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது பெரியகோயில்.

விவசாயப் பகுதி நிறைந்திருந்தால் அது ஊர் என்றும், அந்தணர்கள் வாழும் பகுதியென்றால் அதை சபை என்றும், வணிகர்கள் வாழ்ந்த இடங்களை நகரம் என்றும் மாற்றிக்கட்டி புதுக் கட்டமைப்புக்கு தேசத்தை உள்ளடக்கி வளர்த்தெடுத்தான் ராஜராஜப் பெருவுடையார் என்கிற மாமன்னன் ராஜராஜ சோழன். தஞ்சை தரணி என்று இன்றைக்கும் பெருமைபட பேசுவதற்கு அச்சாரம் போட்டதே ராஜராஜன்தான் என்கிறது சரித்திரம்.

மாமல்லபுரம் துவங்கி கேரளம் வரை, தான் கையகப்படுத்திய ஊர்களில் இருந்தெல்லாம் பெரிய கோயிலுக்கு நிதி தந்திருக்கிறான். கோயிலில் வழிபாடுகள் குறைவின்றி நடக்கவேண்டும் என்பதற்காக, தொண்டை தேசம் துவங்கி ஈழம் வரையுள்ள பல கிராமங்களை, ’தேவதானம்’ என்ற பெயரில் குறிப்பிட்டு பெரியகோயிலுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு ஊரும் 1,44,500 கலம் நெல்மணிகள் வழங்கவேண்டும் என்றும் 2,800 கழஞ்சு தங்கம் பெருவுடையார் கோயிலுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறான். அந்த உத்தரவைக் குறிக்கும் கல்வெட்டுகள் இன்றைக்கும் காணக் கிடைக்கின்றன.

பெருவுடையார் சிவபெருமான், ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் உள்ள தெய்வங்களுக்கு, 39,925 (179 கிலோ) கழஞ்சு பொன் ஆபரணங்கள், 155-க்கும் மேற்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடையாக அளித்தான் ராஜராஜ சோழன். குந்தவை நாச்சியார், 8993 (40.46 கிலோ) கழஞ்சு பூஜை பாத்திரங்களையும் 2,343 கழஞ்சு நகை ஆபரணங்களையும் ஆலயத்துக்கு வழங்கினார் என்கின்றன கல்வெட்டுகள்!

’நகரேஷு காஞ்சி’ என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஸ்ரீகயிலாசநாதர் கோயிலில் மனதைப் பறிகொடுத்தான் ராஜராஜ சோழன். இந்த ஆலயத்தின் தாக்கத்தில் எழுப்பப்பட்டதே தஞ்சை பெரியகோயில்! தஞ்சை கோயில் அமைந்துள்ள பகுதியை 'ராஜராஜீச்சரம்' எனக் குறிப்பிட்டுள்ளான் ராஜராஜன். அடுத்து ஆட்சிக்கு வந்த ராஜேந்திர சோழன், 'ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்' என்று தஞ்சை பெரியகோயிலைக் குறிப்பிடுகிறான்.

நவீன உலகில் கட்டுமான முன்னேற்றங்களும் மாற்றங்களும் வந்தாலும்கூட, ஆயிரம் வருடங்களைக் கடந்தும் பிரம்மாண்டம் குறையாமல் அப்படியே இருக்கிறது பெரிய கோயில். வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இந்தக் கோயிலைக் கட்டிய மாபெரும் கலைஞன்! இவனுக்கு பக்கபலமாக, மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய இருவரும் இருந்தார்கள்.

எல்லாக் கோயிலிலும் ராஜ கோபுரம் பிரம்மாண்டமாக இருக்கும். சுவாமி சந்நிதியின் விமானம் சிறிதாக இருக்கும். ஆனால், ராஜராஜ சோழன், சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சந்நிதியின் விமானத்தை பெரிதாகவும், கோயில் கோபுரத்தை சிறிதாகவும் அமைத்தான். பெரியகோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரம்மாண்டமானது! சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம் என்கிறார்கள். ‘ஈசனே மிகப்பெரியவன்’ என்று உலகுக்கு இப்படியாக அறிவித்த ராஜராஜனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது... சிவபாதசேகரன்.

சுமார் 216 அடி உயரம் கொண்ட விமானமே பெரும் சாதனை; அதிலும் தங்கத்தால் வேய்ந்து அழகு பார்த்திருக்கிறான். இதை தெரிவிக்கும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சிவபெருமான் குடிகொண்டிருக்கும் மேரு பர்வதம் எப்படி பொன்மலையாக தகதகக்குமோ... அதேபோல் தட்சிணமேருவான தஞ்சைக் கோயிலும் பொன்மலையாகவே தகதகத்துள்ளது. ஒட்டக்கூத்தர் இதுகுறித்துப் பாடியுள்ளார். கருவூர்ப்புராணமும் 'பொற்கிரி' என்றே பெரியகோயிலைப்போற்றுகிறது.

இந்தக் கோயில் சிறப்புற விளங்க, 196 பணியாளர்களை நியமித்தான் ராஜராஜன். நிலம் மற்றும் தொழில் நிமித்தமாக அதிகாரிகளையும், கருவூலதாரர்களாக இரண்டு அந்தணர்களையும், ஏழு கணக்கர்களையும், எட்டு துணை கணக்கர்களையும் நியமித்தவன், 178 பிரம்மச்சாரிகளை மாணியக்காரர்களாக வேலைக்கு அமர்த்தினான். தவிர, 400 ஆடல் மகளிரையும் உடுக்கை, வீணை, மத்தளம் முதலான வாத்தியங்களை வாசிப்பதற்காக 258 இசைக் கலைஞர்களையும் நியமித்து ஆன்மிகமும் கலையும் தழைக்கவும் கலைஞர்கள் செழித்தோங்கவும் வழிவகைகள் செய்தவன் மாமன்னன்.

ஆலயத்தை தூய்மைப்படுத்துவது, இறைவனுக்கு பூமாலைகள் தொடுப்பது என ஒவ்வொன்றுக்கும் ஆட்களை நியமித்தான். அவர்களுக்கு வீடுகளை வழங்கினான். நெல் அளந்து மாதந்தோறும் கொடுத்தான், சம்பளத்தை மாதாமாதம் கொடுத்தான் என சகல வசதிகளையும் தந்தான் ராஜராஜன். மேலும்... குடை தாங்கிகள், தண்ணீர் தெளிப்பவர்கள், விளக்கேற்றுபவர்கள், மடப்பள்ளியில் உணவு சமைப்பவர்கள், உணவு சமைப்பதற்கான பானையைச் செய்பவர்கள், நாவிதர்கள், 50-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் என தஞ்சை பெரியகோயிலை மட்டும் அல்ல... அந்த நிர்வாகத்தையும் பிரம்மாண்டாக கட்டமைத்து நிர்வகித்தான் ராஜராஜ சோழன்.`

ராஜராஜன் வைத்த பிரம்மாண்ட நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட... பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து, மண்டபம் எழுப்பினார்கள். அந்த நந்தியைத்தான் இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

அசைவப் பிரியரான ராஜராஜன், மூன்று வேளையும் அசைவம் சாப்பிடுவானாம். அசைவமின்றி உணவு இறங்காது மன்னனுக்கு. ஆனால், கோயில் கட்டப்பட்ட ஆறு வருடங்களும் முழு சைவத்துக்கு மாறினான். இன்னொரு தகவல்... திருப்பணிக்கு, நிதியுதவி செய்த ஒருவரது பெயரையும் விட்டுவிடாமல் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளான். கோயில் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மோர் வழங்கிய கிழவி உட்பட பலரின் பெயர்களும் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல்வெட்டை இன்றைக்கும் கோயிலில் பார்க்கலாம்.

கோயில் கட்டும் முன், அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டி, சுமார் ஒரு வருடம்வரை விட்டு வைத்தனர்! இதனால் குழியில் உள்ள மண் சூரிய ஒளி பட்டு, பாறைக்கு நிகராக மாறிவிடுமாம். பிறகு அஸ்திவாரம் அமைத்தால், ஆண்டாண்டு காலத்துக்கும் நிமிர்ந்து நிற்குமாம் கட்டிடம். அப்படித்தான்... அதனால்தான்... இன்றைக்கும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது தஞ்சை பெரியகோயில்!

ஒரு ஆட்சியை எப்படி அமைக்கவேண்டும், பக்தியை எப்படியெல்லாம் வளர்க்கவேண்டும், எதிரிகளை என்னவெல்லாம் செய்து வீழ்த்தவேண்டும், மக்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சிப்படுத்தவேண்டும், கலைஞர்களையும் கலைகளையும் என்னவெல்லாம் செய்து வளரச் செய்யவேண்டும் என்று ஒட்டுமொத்த மன்னர்களுக்கும் ராஜாக்களுக்கும் அரசர்களுக்கும் வாழ்ந்துகாட்டி, தன் வாழ்க்கையையே பாடமாக்கி, ‘ரோல்மாடல்’ போல் தந்திருக்கிற ராஜராஜன்... உண்மையிலேயே ராஜராஜன்தான்! நிச்சயமாக மாமன்னன்தான்!

அதனால்தான் வருடந்தோறும் ஐப்பசி மாதத்தில் அவன் பிறந்த சத்ய நட்சத்திர நாளை, ஐப்பசி சதய விழாவாகக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறோம்.

இன்னும் பல்லாயிரம் கழித்தும் தஞ்சை பெரியகோயிலை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கும் இந்த உலகம். அதேபோல், இன்னும் பன்னெடுங்காலம் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை, ஐப்பசி சதயப் பெருந்திருவிழாவை கொண்டாடி இருப்பார்கள் மக்கள்!

இன்று நவம்பர் 3- ம் தேதி வியாழக்கிழமை, ஐப்பசி சதய விழா நன்னாள்! 1037-வது சதயத் திருவிழா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in