ராகு - கேது தோஷம் விலகும்; நாக சதுர்த்தியில் புற்றுக்கு பால்!

ராகு - கேது தோஷம் விலகும்; நாக சதுர்த்தியில் புற்றுக்கு பால்!

இன்று ஆகஸ்ட் முதல் தேதி நாக சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தநாளில், புற்று வழிபாடு செய்வதும் புற்றுக்குப் பாலிடுவதும் நம் சர்ப்ப தோஷங்களையெல்லாம் போக்கும்; ராகு கேது முதலான தோஷங்களில் இருந்தும் நாம் விடுபடலாம்.

ஆடி மாதம் என்றாலே பூஜைகளுக்கும் பண்டிகைகளுக்கும் பஞ்சமிருக்காது. விரதங்களுக்கும் வேண்டுதல்களுக்கும் குறைவிருக்காது. சக்தி என்று தேவியைப் போற்றுகிறோம். சக்தியைக் கொண்டாடுகிற மாதமாகத் திகழ்கிறது, ஆடி. அதேபோல் சக்தி மிக்க கிரகங்களாக, ராகுவையும் கேதுவையும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இரண்டுமே பாம்புக் கிரகங்கள். இந்த ஆடி மாதத்தில் தான் நாக சதுர்த்தி எனும் விரதநாளும் அமைந்திருக்கிறது. ஆடி மாதத்தில் அமாவாசைக்குப் பின்னர் வருகிற நான்காம் நாள், நாக சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நிறைந்திருக்கும். அதேபோல், புற்றுக்கோயில்களில் பெரும்பாலானவை, அம்மன் கோயிலாகத்தான் இருக்கும். நாக சதுர்த்தி நாளில், புற்றுக் கோயிலில் கொலுவிருக்கும் அம்மனையும் புற்றையும் வணங்கி வழிபடுவது நம் கிரக தோஷங்கள் அனைத்தையும் போக்கும். கால சர்ப்ப தோஷங்களையெல்லாம் நீக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாதத்தில் அம்மன், அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் இருப்பது போலவே, ஆண்டாளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆடிப்பூரம் நன்னாளை, அம்பாள் ருதுவான நாளாகவும் ஆண்டாள் அவதரித்த நாளாகவும் போற்றுகிறது புராணம். அப்பேர்ப்பட்ட ஆடிப்பூர நன்னாளிலேயே நாக சதுர்த்தி விரத நாளும் அமைந்திருக்கிறது.

இந்தநாளில், நாக வழிபாடு செய்வது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தால், ‘ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். நாக சதுர்த்தி என்பது நாகருக்கு, அதாவது சர்ப்பத்துக்கு உண்டான முக்கியமான நாள். நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரும் ஆலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்துகொள்ளலாம். புற்றுக் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

புற்றுக்கு மஞ்சளிட்டு, குங்குமமிட்டு, பால் வார்த்து, முட்டைகள் வழங்கி பிரார்த்தனை செய்துகொண்டால், சர்ப்ப தோஷங்கள், கண் திருஷ்டிகள் முதலானவை நீங்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். முக்கியமாக, ராகு கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in