கார்த்திகை பெளர்ணமியில் காளிகாம்பாள் தரிசனம்!

கார்த்திகை பெளர்ணமியில் காளிகாம்பாள் தரிசனம்!

கார்த்திகை மாத பெளர்ணமியில், சென்னை ஸ்ரீகாளிகாம்பாளை தரிசனம் செய்து பிரார்த்திப்போம். நம் கவலைகளை காணடித்து கண்ணீரைத் துடைத்தெடுப்பாள் தேவி காளிகாம்பாள்.

கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். எல்லா தெய்வ வழிபாட்டுக்கும் உகந்த மாதம். சிவா, விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளை வணங்கி வழிபடும் மாதம். அதேபோல், சக்தி என்று போற்றப்படுகிற தேவியர் அனைவரையும் வணங்கி வழிபடக் கூடிய மாதம்.

அமாவாசையில் நம் முன்னோர்களை வணங்கவேண்டும். பெளர்ணமியில் தெய்வங்களைத் தரிசிக்க வேண்டும். இந்த இரண்டு செயல்களுமே நமக்குள் நற்சிந்தனைகளையும் பேரருளையும் தந்து, அரணெனக் காக்கும் என்பது ஐதீகம்.

பெளர்ணமியில் சித்திரை மாதத்தின் பெளர்ணமி ரொம்பவே விசேஷமானது. சித்ரா பெளர்ணமி நன்னாளில், தேவியரை வணங்கி படையலிடுவார்கள் பக்தர்கள். அதேபோல், சித்திரை மாத பெளர்ணமியைப் போலவே, கார்த்திகை மாத பெளர்ணமியும் மகத்துவம் மிக்கது.

கார்த்திகை மாத பெளர்ணமியில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அதேபோல, புற்றுக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு இருக்கும் சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

கார்த்திகை மாத பெளர்ணமி, சந்திர ஆதிக்கம் நிறைந்தநாள். மேலும், புதன் கிரகத்துக்கு உரிய புதன் கிழமை நன்னாளில் வருகிறது. இந்த நாளில், உக்கிர தேவியாகத் திகழும் தேவி, சாந்த ஸ்வரூபினியாக எங்கெல்லாம் அமர்ந்து ஆட்சி செய்கிறாளோ... அந்த ஆலயங்களுக்குச் சென்று, தரிசித்து வந்தால், நம் புத்தியைத் தெளிவாக்குவாள்.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ளது ஸ்ரீகாளிகாம்பாள் கோயில். காளிகாம்பாள் என்றாலே உக்கிரத்துடன் இருக்கிற தெய்வம், இங்கே இந்தக் கோயிலில் கருணை ததும்பக் காட்சி தருகிறாள். சாந்தமே உருவெனக் கொண்டு அழகே உருவெனக் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

காளிகாம்பாள் கோயில், ஸ்ரீசக்ர ஆதிக்கம் நிறைந்த திருக்கோயில். மராட்டிய மன்னன் சிவாஜி, வடக்கிலிருந்து இங்கே வந்த தருணத்தில் காளிகாம்பாளை வணங்கி வழிபட்டு, ஆபரணங்கள் அளித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

இன்றைக்கு ரஜினி நடித்து பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பாபா’ திரைப்படத்தில் ரஜினி வணங்குவது போல் காட்டப்படுகிற காளிகாம்பாள், இந்தத் தெய்வத்தைப் போலவே சிலை செய்து, கோயில் செட்டுகள் போடப்பட்டன. உண்மையிலேயே, மனதில் தோன்றும்போதெல்லாம் ரஜினிகாந்த் எவருக்கும் தெரியாமல் காளிகாம்பாளைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்கிறார் ஆலயத்தின் சண்முக சிவாச்சார்யர்.

கார்த்திகை பெளர்ணமியில், காளிகாம்பாளை தரிசிப்போம். நம் வாழ்வில் இதுவரையிலான தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவாள். சாந்த சொரூபியாகத் திகழும் காளிகாம்பாளையும் உக்கிர ரூபத்துடன் காட்சி தரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியையும் மனதார வழிபடுவோம். முடிந்தால், செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வோம்.

இதேபோல், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் திருக்கோயிலில், தனிக்கோயில் போல் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தரும் ஸ்ரீதுர்கையும் சாந்தநாயகியாகத் திகழ்கிறாள். பெளர்ணமியில், பட்டீஸ்வரம் துர்கையைத் தரிசிப்பதும் எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

இன்று கார்த்திகை பெளர்ணமி நாளில் இல்லத்தில், சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான நைவேத்தியங்கள் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in