கொங்குநாட்டு ராணியாம் கோனியம்மனுக்கு பொட்டுத்தாலி காணிக்கை!

- மாசியில் பிரார்த்தனை செய்தால் மணமாலை தேடிவரும்!
கோவை கோனியம்மன்
கோவை கோனியம்மன்

கொங்கு நாட்டு ராணி என்றுதான் கோனியம்மனைச் சொல்லுவார்கள். ஒரு தேசத்தின் ராஜாவோ ராணியோ, எப்படி மக்களைக் காபந்து செய்து, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கி பாதுகாக்கிறார்களோ, அதேபோல், கொங்கு நாட்டில் இருந்தபடி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழிந்து வாழச் செய்துகொண்டிருக்கிறாள் கோனியம்மன்.

கோவை ரயில்நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள அழகிய திருக்கோயில். இங்கு தான் குடியமர்ந்து, உலகையே காத்தருளுகிறாள் கோனியம்மன். சுமார் 500 வருடங்கள் பழைமை மிக்க திருத்தலம் இது. பொதுவாகவே அம்மன் குடிகொண்டிருக்கும் கோயில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மரங்கள் ஸ்தல விருட்சங்களாக இருப்பது வழக்கம். கோனியம்மன் கோயிலில் வேம்பு, வில்வம், நாகலிங்கம், அரச மரம் என நான்கு மரங்கள் ஸ்தலவிருட்சங்களாக அமைந்திருக்கின்றன.

இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு... நவக்கிரகங்கள் தங்கள் துணைவியுடன் தம்பதியாக காட்சி தருகிறார்கள் இங்கே! அதேபோல் பஞ்சமுக விநாயகப் பெருமானும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார்.

கோனியம்மனிடம் நம் வேண்டுதல்களைச் சொன்னால், அவள் காது கொடுத்துக் கேட்பாள் என்பது ஐதீகம். திருமணத்தடையால் கலங்கித் தவிப்பவர்கள், கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்து புடவை சார்த்தி வேண்டிக்கொள்கின்றனர். முக்கியமாக, பொட்டுத்தாலி வாங்கி சமர்ப்பித்து, உணவு தானம் செய்து, விளக்கேற்றி பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

கோனியம்மனை, பராசக்தியின் வடிவம் என்றே ஸ்தல புராணம் சொல்கிறது. எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள் கோனியம்மன். திருக்கரங்களில், திரிசூலம், உடுக்கை, வாள், சங்கு, சூலம், வட்டு, மணி, அக்னி முதலானவற்றை ஏந்தியபடி அருள்பாலிக்கிறாள். வலது செவியில் வளையம் அணிந்தும் இடது செவியில் குண்டலம் அணிந்தும் அழகு ததும்பக் காட்சி தரும் கோனியம்மனை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

கோவை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள ஊரைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் எந்த சுப விழாக்கள் நடந்தாலும் அம்மனுக்கு பூஜையிடுகிறார்கள். அம்மனை முதல் விருந்தாளியாக அழைக்கிறார்கள். அம்மனின் அனுமதியைப் பெறுகிற விதமாகவும் இந்த பூஜை நடைபெறுகிறது.

ஒருகாலத்தில், இந்தப் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்ந்தது. இருளர் இனத்தின் தலைவன் கோவன் என்பவன், இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். இந்தக் காட்டை வளமாக்கினான். மரங்களெல்லாம் வளர்த்து செழுமையாக்கினான். ஒருசமயம் திடீரெனப் பஞ்சம் எற்பட்டது. இதனால் மக்கள் பசிக்கும் பட்டினிக்கும் ஆளானார்கள். துடித்துத் துவண்டுபோனார்கள்.

அப்போது ஆவேசத்துடன் இருளன், அங்கிருந்து ஒரு கல்லை எடுத்தான். குளிப்பாட்டினான். மஞ்சள் குங்குமமிட்டான். ‘’உன்னையே எங்க சாமியா நினைச்சு பூஜை பண்றோம். எங்களோட பசியைப் போக்கு. இந்த இடத்தோட பஞ்சத்தை நீக்கு’’ என வேண்டிக்கொண்டான். அந்தக் கல் அம்மனாக உருவெடுத்தது. அவர்களின் பிரார்த்தனையின்படி, மழை வெளுத்து வாங்கியது. காடு கரைகளெல்லாம் நிரம்பின. உணவுக்குப் பஞ்சமில்லாத நிலை உருவானது. அன்று முதல் அந்த அம்மனையே குலதெய்வமாக, இஷ்டதெய்வமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள்.

இவர்களின் ஆட்சியெல்லாம் மாறி, சேர மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினான். அம்மனின் சக்தியை உணர்ந்த இளங்கோசர் என்பவர், சேரர்களுக்கு எதிராக, உயரமான மண் மேடு ஒன்றை உருவாக்கி, அம்மனை நிறுவினார். எல்லோரும் கண் கலங்கி வழிபட்டார்கள் என்கிறது ஸ்தல புராணம்!

இந்த ஆண்டு கோனியம்மன் தேரோட்டம்...
இந்த ஆண்டு கோனியம்மன் தேரோட்டம்...

மாசி மாதத்தில் 14 நாள் திருவிழா இங்கே வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் உற்சவராக அம்மன் திருவீதியுலா வருவார். நிறைவு நாளில் தேரோட்டம் சிறப்புற நடைபெறும். இந்த சமயத்தில், உலகில் கோயம்புத்தூர்க்காரர்கள் எங்கிருந்தாலும், கோனியம்மனை மாசியில் ஒருபாட்டம் வந்து தரிசித்துவிட்டுச் செல்வார்கள். அதேபோல், மாசிப்பெருந்திருவிழாவில், கோனியம்மனைத் தரிசித்த கையுடன், உறவுக்குள் சம்பந்தம் பேசத் தொடங்கும் வழக்கமும் இன்றைக்கும் இருக்கிறது.

மாசித்திருவிழாவிலும் மாசி மாதத்திலும் கோனியம்மனுக்கு புடவை சார்த்திவிட்டு, பொட்டுத்தாலி காணிக்கை செலுத்திவிட்டு, திருமணப் பேச்சுவார்த்தை நடத்தினால், அந்தத் திருமணம் இனிதே நடந்தேறும். கருத்தொருமித்த தம்பதியாக அவர்கள் வாழ்வார்கள். அவர்களின் வம்சத்தை வாழையடிவாழையாக தழைக்கச் செய்வாள் கோனியம்மன் என்று கொங்கு நாட்டு ராணியைக் கொண்டாடி வணங்குகிறார்கள் பக்தர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in