’பொங்கலோ பொங்கல்’ : பொங்கல் வைக்கும் நேரம் இதுதான்!

உத்தராயன புண்ய காலத்தின் மகிமை!
’பொங்கலோ பொங்கல்’ : பொங்கல் வைக்கும் நேரம் இதுதான்!

நம் இந்திய தேசத்துக்கு தனித்ததொரு பெருமையும் அடையாளமும் இருக்கிறது. உலக நாடுகளில், இந்தியாவை ‘ஆன்மிக பூமி’ என்றே அழைக்கிறார்கள். எந்த தேசத்துக்கும் இல்லாத பெருமை இது! வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், சடங்குகள் என தழைத்தோங்கியிருக்கிற புண்ணிய பூமி இது!

இங்குதான் வழிபாடுகளும் அதிகம். வழிபாட்டு முறைகளும் வணங்கும் தெய்வங்களும் ஏராளம். சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருக வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு) என ஆறு வகையான வழிபாட்டு முறைகள் கொண்டவை நம் பண்பாடும் கலாச்சாரமும்!

இவற்றில் ஒன்றை பின்பற்றி, அதன்படி ஒரே தெய்வத்தின் திருவடியை நாடி வழிபடுபவர்கள் உண்டு. ஆனால், ஆறு வகை வழிபாட்டுக்காரர்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தெய்வம்... சூரிய பகவான்! சொல்லப் போனால், நாம் அன்றாடம் கண்ணால் தரிசிக்க முடிகிற தெய்வமும் இவர்தான். விடியலுடன் தொடர்பு கொண்ட சூரியனாரை முன்னிறுத்திக் கொண்டாடுகிற பண்டிகைகளில் மிக மிக முக்கியமான பண்டிகைதான் பொங்கல் திருநாள்!

விடியலுக்கும் சூரியனாருக்கும் தொடர்பு உண்டு. அதேபோல், தை மாதப் பிறப்பின் போதே பொங்கல் பண்டிகை நன்னாளும் பிணைந்தும் இணைந்துமாக வருகிறது. சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். ’ரவி’ என்றால் சூரியன் என்று அர்த்தம். அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப்புற வழி, வடக்கு வாசல் என்று பொருள். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும் கூட, தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்றே வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார் சூரிய பகவான் என்கின்றன சாஸ்திரங்கள். விஞ்ஞானமும் இதை ஆமோதிக்கிறது.

அதாவது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயன புண்ய காலம் என்றும் இந்த மாதங்கள் அனைத்தும் தேவர்களுக்கு பகல் காலம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கலகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இறப்பு கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும் என்பது தர்மசாஸ்திர விளக்கம். அதனால்தான், தட்சிணாயன காலத்தில், பாரதப்போரில் அடிபட்டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ய காலம் வரும் வரை காத்திருந்தார். பின்னரே இறந்தார் என்கிறது மகாபாரதம்!

பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாக, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப் படுகிறது. பொங்கலன்று வரக்கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக, பொங்கலுக்கு முதல் நாளன்று அதாவது மார்கழி மாதக் கடைசி நாளன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

முன்னதாக, வீட்டில் இருக்கிற பழைய, தேவையற்ற பொருட்களை தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். நம்மை வாழ விடாத, நமக்கு உதவாத, கெடுதல் செய்யக் கூடிய தீய குணங்களை எல்லாம், தூய்மையான அறிவு எனும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் தாத்பரியம் என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர். தீயவற்றைப் போக்குவதால், இது ‘போக்கி’ எனப்பட்டு, பிறகு ‘போகி’ என மருவியது என்கிறார்.

மறுநாள். தை மாதப் பிறப்பு. பொங்கல் திருநாள். உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்துகிற அற்புத நன்னாள். தை மாதம் தொடங்கும் வேளையில், அறுவடை முடிந்திருக்கும். விளைந்த பொருட்களைக் கொண்டு, எல்லா உயிர்களும் வாழ அருள்புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதே பொங்கல் வழிபாட்டின் முதல் விஷயம்!

இந்தநாளில், காலையில் எழுந்ததும் நீராடி, பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண்டும். புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி, பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள். இன்னும் பலர், பாரம்பரியமாக, பொங்கல் வைப்பதற்கென்றே வெண்கலப் பானை ஒன்றை பத்திரமாக தலைமுறைகள் கடந்தும் வைத்திருப்பார்கள்.

பொங்கல் பொங்கி வழியும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவி மகிழ்வோம். நைவேத்தியப் பொருட்களை வைத்து சூரிய பூஜை செய்வோம். முன்னதாக, பிள்ளையாரப்பனை வணங்கிவிட்டு, சூரிய பூஜை மேற்கொள்ளவேண்டும். பூஜை செய்யும் இடத்தில், திறந்த வெளியில், அரிசி மாவால் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து பூஜை செய்ய வேண்டும். இப்போதெல்லாம், கியாஸ் ஸ்டவ்வில், சமையலறைக்குள்ளேயே பொங்கல் வைக்கவேண்டிய சூழல் இருப்பதால், இதுவொன்றும் தோஷமில்லை என்கிறார் பாஸ்கர சிவாச்சார்யர்.

தலைவாழை இலையில், சமைத்தவற்றை பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போட்டு வணங்குகிற வழக்கமும் உண்டு. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல் கொடுத்து வணங்குவோம். முக்கியமான விஷயம்... பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானை அல்லது பாத்திரத்தை காலி செய்யக் கூடாது. அதில் சில பருக்கைகளேனும் இருக்கவேண்டும். அப்படி வைத்திருந்து, மறுநாள் தேய்த்து, அலம்பி வைக்கவேண்டும். இதனால், வீட்டில் தனம், தானியம் பெருகும். நிலம் வைத்திருப்பவர்கள் வரக்கூடிய வருடத்திலும் அமோக விளைச்சலைக் காண்பார்கள். அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்லிவைத்தார்கள்.

இந்த முறை ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாள். சூரிய பகவானை வணங்கும் திருநாள், ஞாயிற்றுக்கிழமையில் வருவது ‘ஒருநாள் லீவு போச்சே...’ என நினைத்தாலும் சூரிய ஆதிக்கம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமையில், சூரியனாரை வணங்கி வழிபடுகிற பொங்கல் திருநாள் வருவது இன்னும் சிறப்புக்கு உரியது, மகத்துவம் வாய்ந்தது.

பொங்கல் வைக்கும் நேரமும் குறிப்ப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. உத்தராயன புண்ய காலம் 14-ம் தேதி சனிக்கிழமை இரவே பிறந்துவிடுகிறது. மாதப் பிறப்பு தர்ப்பண காரியங்களைச் செய்பவர்கள் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் முன்னோர் வழிபாட்டை மேற்கொண்டு முடித்துவிடலாம். பிறகு பொங்கல் வைக்கும் நேரம் : காலை 7.40 மணி முதல் 9.40 மணிக்குள்ளாக பொங்கல் வைத்து சூரிய பகவானை நமஸ்கரித்து, மற்ற கடவுளருக்கும் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நைவேத்தியமாகப் படைத்து, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி, நமஸ்கரித்து வழிபடவேண்டும். பிறகு, வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து, ஆசி பெறலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in