பொங்கலோ பொங்கல்: சோழர் காலத்தில் நன்றி சொல்லும் திருநாள்!

பகிர்ந்துண்டு வாழச் சொல்லித் தரும் தைத்திருநாள் பண்டிகை
பொங்கலோ பொங்கல்: சோழர் காலத்தில் நன்றி சொல்லும் திருநாள்!

பண்டிகைகளும் விழாக்களும் மகிழ்ச்சிக்கு உரியவை. அதன் தாத்பரியங்களை முழுமையாக அறிந்து கொண்டாடும்போது கிடைக்கிற மனநிறைவு இன்னும் அளப்பரியது. தொன்மையான பண்டிகை என்றால், பொங்கல் திருநாள் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

‘‘தமிழ் கூறும் நல்லுலகில், பொங்கல் விழாவுக்கு முக்கியமான இடம் உண்டு. சோழர்கள் காலத்திலேயே பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது அதை பொங்கல் விழா என்று குறிப்பிடவில்லை. ஆனால், அந்தக் கொண்டாட்டத்தைத்தான் பிற்பாடு தமிழர்கள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்று பெயர் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். வழிபட்டு வருகிறார்கள், குதூகலத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்’’ என்று தெரிவிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

மேலும் ”சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி, பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி... எந்தவொரு இடத்திலும் பொங்கல் என்ற சொல்லை உபயோகிக்கவே இல்லை. ஆனால், தைமாதத் திருநாளை விசேஷ நாளாக, அற்புத விழாவுக்கு உரிய நாளாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது, உத்தராயன சங்கராந்தி என்கிற பெயரில் அன்றைக்குப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது’’ என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

‘சங்கரம்’ என்றால் ‘நகரத் தொடங்குதல்’ என்று அர்த்தம். உத்தராயன சங்கராந்தி என்பது, வருடந்தோறும் தை மாதம் முதல் நாளன்று, சூரியனானது தென் திசையில் இருந்து வட திசை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குகிறது என்று பொருள். இதையே உத்தராயன புண்ய காலம் என்றும் உத்தராயன சங்கராந்தி என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

இதனால்தான் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, அதாவது மார்கழி மாதத்திலேயே குளிர்காலம் துவங்கிவிடுகிறது. மார்கழி மாதத்தில் பூமியெங்கும் குளிர் பரவி, அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் காற்று மண்டலத்தில் ஓசோன் அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் காற்றைச் சுவாசித்தால், ஆயுள் பலமும் ஆன்ம பலமும் பெருகும் என்பதற்காகத்தான், மார்கழி மாதத்தில் காலையில் சீக்கிரமே எழுந்து, வீட்டு வாசலில் பெரிய கோலங்களை இடச் சொன்னார்கள். மேலும், ஆலய வழிபாட்டுக்கும் சென்று வர வலியுறுத்தினார்கள்!

தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடி நகர்வலம் வரச் செய்தார்கள். இந்த நாளில், அதிகாலை நேரத்தில் அந்தக் காற்றைச் சுவாசித்தால், உடலில் ரத்த ஓட்டம் வேகமாகும்; ஞாபக சக்தி அதிகரிக்கும். மார்கழியிலும் தை மாதத்திலும் குளிர் நிரம்பியிருக்கிற வேளைகளில், அதிகாலை வழிபாடுகளை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பாலசுப்ரமணியன்

மழைக்காலம் முடிந்து, குளிர்காலம் நிறைவுறும் வேளையில், தை மாதத்தை அறுவடைக் காலமாகக் கணக்கிட்டு விவசாயத்தில் ஈடுபட்டனர் மக்கள். இந்தியாவில், தமிழகம் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களிலும் தை மாதப் பிறப்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அதனை ‘அறுவடைத் திருவிழா’ என்கிறார்கள். விவசாயத்துக்கு உறுதுணையாகவும் முழுமுதற் காரணமாகவும் திகழும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இந்தத் தை மாதத்தைக் கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள். அதைத்தான் தொன்றுதொட்டு, நாம் கடைப்பிடித்து வருகிறோம்.

இன்னொரு விஷயம்... தை நீராடல் எனும் சம்பிரதாயம், அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. குறிப்பாக, சோழர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதாவது, உத்தராயன சங்கராந்தி அன்று அதிகாலையில் எழுந்து, காவிரியில் நீராடிவிட்டு, 108 அல்லது 1,008 குடங்களால் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அபிஷேகம் செய்து, சிவபெருமானை வணங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம், அதிகாலையில் காவிரிக்கரைகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகத்தான் இருக்கும். அந்தந்த ஊர்மக்கள், காவிரியில் குளித்துவிட்டு, குடங்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சோழ தேசத்தை காவிரியின் வடகரை ஆலயங்கள், தென்கரை ஆலயங்கள் என்றே கணக்கிடப்படுகிற அளவுக்கு கரையோரங்களில் ஏராளமான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

கோயிலில் அபிஷேகத்துக்கு காவிரி நீர் கொடுத்த கையுடன், வீட்டுக்கு வருவார்கள். அறுவடை முடிந்து மணம் மாறாமல் இருக்கிற அரிசியை, புதிய பானையில் இட்டு, உணவில் சூரிய வெளிச்சம் படுவதுபோல் வாசலில் அடுப்பு பற்ற வைத்துப் படையலிடுவார்கள்.

’’இந்த உணவு நீ எங்களுக்குக் கொடுத்தது. உணவின் ஒவ்வொரு அரிசியிலும் உன் சக்தி படர்ந்திருக்கிறது. அந்தச் சக்தி எங்களுக்கு உள்ளேயும் சென்று பரவி, எங்களை ஆரோக்கியமாகவும் ஆனந்தத்துடனும் வாழ வைக்கும் சூரிய பகவானே உனக்கு எங்களின் நன்றி!’ என்று வணங்குவார்கள். அந்த உணவை எல்லோருக்கும் பகிர்ந்து சாப்பிடுவார்கள்.

இவ்வாறு குடவாயில் குடவாயில் பாலசுப்ரமணியன் விவரித்தார்.

பொங்கல் நன்னாளை பக்தியுடன் கொண்டாடுவோம். நன்றி சொல்லும் விழாவாகக் கொண்டாடுவோம். பகிர்ந்துண்டு வாழ்வோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in