பொங்கலோ பொங்கல் : ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

பொங்கலோ பொங்கல் : ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

- சூரியனைக் கொண்டாடுவோம்!

பொங்கல் பண்டிகையான மகர சங்கராந்தித் திருநாள் இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரைச் சொல்லி இந்த வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. பண்டிகையின் பெயரும், வழிபாட்டு முறைகளும் வெவ்வேறாக இருக்கும். வித்தியாசங்கள் விழாவிலும் பெயரிலும் இருந்தாலும், பண்டிகைக்கு உரிய நாயகன் சூரிய பகவான்தான்!

ஆந்திராவில், வயல், பயிர், சூரியன் ஆகியவற்றுடன் மழையையும் தெய்வமாகப் போற்றி வணங்குகிற வைபவமாக, திருவிழாவாகு மகர சங்கராந்தியைக் கொண்டாடுகின்றனர். கேரளத்தில், பொங்கல் சாயலைக் கொண்ட திருவிழாவை, மார்கழி மாதத்திலேயே கொண்டாடி விடுகின்றனர். மார்கழி மாதத்தில் கேரளத்தில் பெண்கள் ‘திருவாதிரைக்களி’ நாளில், கைதட்டி ஆடும் நடன விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அதையடுத்து தை பிறக்கும் போதும் சூரிய வழிபாடு செய்து படையலிடுகிறார்கள். இந்த விழாவைக் கொண்டாடினால், மகா சக்தியின் பேரருள் கிடைக்கப் பெறலாம் என்பது கேரளத்தின் ஐதீகம்!

கர்நாடக மாநிலத்தில் நம்மூரைப் போலவே, பாலில் அரிசியிட்டு, பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்கிறார்கள்! காஷ்மீரில் பொங்கல் திருநாளானது, அறுவடை விழாவாக ‘கிச்சடி அமாவாசை’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. காஷ்மீரைப் போலவே, ஹரியாணாவிலும் பொங்கலை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் அந்த மக்கள். விவசாயிகள் அந்தநாளில், தானியங்களை ஒருவருக்கொருவரும் அக்கம்பக்கத்திலும், உறவுக்காரர்களிடமும் பரிமாறிக் கொள்வார்கள்.

பஞ்சாபில் ‘லோரித் திருநாள்’ என்று பொங்கல் பண்டிகையைச் சொல்கிறார்கள். குளிருக்கு விடை கொடுக்கும் விதமாக, பெரிய அக்னி குண்டங்கள் மூட்டி, யாகம் வளர்த்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசுப் பொருட்கள் கொடுத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள். மேற்கு வங்கத்தில் பொங்கலின் மறுபெயர் ‘கங்கா சாகர் மேளா’. அன்று கங்கைக் கரையில் கும்மியடித்து, ஆடிப் பாடி நதியில் நீராடி சூரிய வணக்கம் செலுத்துவார்கள்! நாம் நதியைப் போற்றுகிற ஆடிப்பெருக்கு போலவே பொங்கல் திருநாளில் அதையும் இணைத்துக் கொண்டாடி குதூகலிக்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையை அஸ்ஸாமில் ‘போகலி பிஹீ’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அப்போது, அவர்களுக்கே உரிய பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்கிறார்கள். நம் பக்கம் எப்படி பண்டிகை, நல்லநாள் திருநாள் என்றால் ஆண்கள் வேட்டியும் பெண்கள் புடவையும் அணிந்துகொள்கிறார்களோ, அதேபோல், அவர்களின் பாரம்பரிய உடையணிந்து பண்டிகையைக் கொண்டாடி உணவுகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அன்றிரவு முழுக்க உறவினர்கள், நண்பர்களுடன் ஆட்டமும் பாட்டமுமாக கூடிக் களித்து எல்லாத் துக்கங்களையும் போக்கிக் கொள்கின்றனர். அறுசுவை விருந்தும் இருக்கும். விடியும் வேளையில் பெரிய அளவில் தீ மூட்டி, அந்த அக்னியையே கடவுளாக பாவித்து வணங்குவதுடன் விழாவையும் வழிபாட்டையும் நிறைவு செய்கிறார்கள் என்கிறார் விஜய் சர்மா சாஸ்திரிகள்.

வடமேற்கு மாநிலங்களில் மழைப் பண்டிகைதான் பொங்கல். இந்திர விழா என்று மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அன்று சூரிய பகவானை மட்டுமில்லாமல், கிருஷ்ண பரமாத்மாவையும் இணைத்து வேண்டிக்கொண்டு, படையலிட்டு, அன்னதானம் வழங்கி மகிழ்கிறார்கள். வீட்டுக்குத் தேவையான பாத்திரம் பண்டங்களை இந்த நாளில் வாங்கினால், அரிசி பருப்பு முதலானவற்றை வாங்கி வைத்தால், இல்லத்தில் தனம் தானியம் பெருகும். அந்த வருடம் முழுவதும் இல்லத்தில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைந்திருக்கும் என்கிறது சாஸ்திரம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in