திங்கட்கிழமையில் திருச்சேறை செல்வோம்!

- ஒரே கோயிலில் மூன்று துர்கையர்
திங்கட்கிழமையில் திருச்சேறை செல்வோம்!

நம் பிறவிக்கடனையும் லெளகீக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்ட கடனையும் தீர்த்து வைத்து அருளுவார் திருச்சேறை ருணவிமோசனேஸ்வரர்.

கும்பகோணத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது திருச்சேறை. புராணகாலத்தில், இத் தலம் உடையார் கோயில் என இருந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

தேவாரம் பாடல் பெற்ற தென்காவிரித் திருத்தலங்களில் இது 95-வது திருத்தலம் எனும் பெருமை கொண்டது. இங்கே உள்ள மூலவருக்கு செந்நெறியப்பர் என்றும் சார பரமேஸ்வரர் என்றும் திருநாமங்கள் உள்ளன. அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஞானாம்பிகை.

அற்புதமான தலம். அழகிய திருக்கோயில். தலம், தீர்த்தம், மூர்த்தம் மூன்றும் விசேஷமானவை. இங்கே மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம் என அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் மூன்று துர்கைகள் காட்சி தருகின்றனர் என்பது மற்றுமொரு சிறப்பு. பொதுவாக சிவாலயங்களில் உள்ள துர்கையை, சிவ துர்கை என்பார்கள். பெருமாள் கோயில்களில் உள்ள துர்கையை விஷ்ணு துர்கை என்பார்கள். இங்கே சிவ துர்கை, விஷ்ணு துர்கை, வைஷ்ணவி துர்கை என மூன்று துர்கையர் தரிசனம் தருகின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகுகால வேளைகளில், மூன்று துர்கையரையும் தரிசித்து, எலுமிச்சை தீபங்களை ஏற்றி வந்தால், நம் துக்கத்தையெல்லாம் பறந்தோடச் செய்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

அதேபோல, இங்கே ருணவிமோசனேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளது. மூலவர் சாரபரமேஸ்வரர் என்றாலும் ருணவிமோசனேஸ்வரரை தரிசித்துப் பிரார்த்திக்க, எல்லா ஊர்களில் இருந்தும் வந்து வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள்.

’பூவுலகில் உள்ள அனைவருமே கடன்பட்டவர்களே’ என விவரிக்கிறது தர்மசாஸ்திரம். “அய்யய்யோ... நான் இதுவரைக்கும் ஒருரூபா கூட யார்கிட்டயும் கடன் வாங்கினதே இல்லியே...” என்று எவரேனும் சொல்லலாம். ஆனால், நாம் எல்லோருமே கடன்பட்டவர்கள். பிறவிக்கடன் பட்டிருக்கிறோம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். பிறவி என்பதே கடன்தான்.

அந்தக் கடனை அடைப்பதற்காகத்தான் பிறவி என்கிற ஒன்றே இருப்பதாகச் சொல்கிறது சாஸ்திரம்! நம் பிறவிக்கடன் மொத்தத்தையும் அடைத்துவிட்டோமென்றால், இனி நமக்குப் பிறவி என்பதே கிடையாது என ஜோதிட சாஸ்திரமும் அறிவுறுத்துகிறது.

திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார வேண்டிக்கொண்டால், பிறவிக்கடனில் இருந்தும் விடுபடலாம். லெளகீகம் எனப்படும் குடும்பத்துக்காக வாங்கிய கடனில் இருந்தும் விடுபடலாம். கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்குவதற்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்குமாக சில நியமங்களை வைத்திருக்கின்றன ஞானநூல்கள்.

நாம் ஒருவரிடம் கடன் வாங்குவதாக இருந்தால் திங்கட்கிழமைகளில் கடன் வாங்குவது நல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். திங்கட்கிழமையில் கடன் வாங்கினால், அந்தக் கடன், மிகப்பெரிய பிரச்சினையாகவோ தீராக்கடனாகவோ இருக்காது. விரைவில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்திவிடுகிற சூழல் ஏற்படும். கடனையெல்லாம் அடைத்து பொருளாதாரத்தில் மேன்மை அடையலாம் என்கிறார்கள்.

சூரியன் பூஜித்து வழிபட்ட, வழிபடுகின்ற தலங்களில் திருச்சேறை திருத்தலமும் ஒன்று. இங்கு மாசி 13, 14, 15-ம் தேதிகளில், சூரியக் கிரகணங்கள் சிவலிங்கத் திருமேனி மீதும் அம்பாளின் திருப்பாதத்திலும் விழும் காட்சியை கண்ணாரத் தரிசிக்கலாம்!

அதேபோல், வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதை செவ்வாய்க்கிழமை நாளில் செய்ய வேண்டும் என்கிறார்கள். செவ்வாய்க்கிழமையன்று கடனைத் திருப்பிக் கொடுத்தால், கடனில் இருந்து மீள்வது விரைவிலேயே நிகழும். கடனில் முழுத்தொகை கொடுக்க இயலாவிட்டாலும் கூட, கொஞ்சம் கொஞ்சமாக செவ்வாய்க்கிழமைகளில் கடனைக் கொடுத்தால், விரைவில் எல்லாக் கடன்களையும் அடைக்கலாம். சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம். திருச்சேறை திருத்தலத்தின் சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் நலம் பெறலாம் என்கிறது ஸ்தல புராணம்.

மார்க்கண்டேயன், இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து சிவ வரம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம். பதினாறாவது வயதில் மரணம் என்று சொன்னதில் இருந்து விடுபட்டு, என்றும் பதினாறு எனும் வரத்தைப் பெற்றான் மார்க்கண்டேயன். திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீருணவிமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் எந்தப் பிறவியிலோ, நமக்கு அறிந்தோ அறியாமலோ ஏற்பட்ட பிறவிச் சாபத்தில் இருந்தும் கடன் தொல்லையில் இருந்தும் மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.

சோம வாரம் என்று சொல்லப்படும் ஏதேனும் திங்கட்கிழமை நன்னாளில், கும்பகோணம் - திருச்சேறை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திலும் ஸ்ரீருண விமோசனர் சந்நிதி அமைந்திருக்கிறது. அங்கு சென்றும் தரிசித்துப் பிரார்த்திக்கலாம்.

திருச்சேறை ருண விமோசனேஸ்வரரை திங்கட்கிழமையில் தரிசித்து ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். கடன் முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் குழப்பங்களில் இருந்தும் நம்மை மீட்டெடுத்து அருளுவார் சிவனார்! செல்வ வளமும் நல்ல ஆரோக்கியமும் தந்து நோய்நொடியிலிருந்து நம்மைக் காத்தருளுவார் ருணவிமோசனேஸ்வரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in