பிள்ளையாரப்பா..!

பிள்ளையாரப்பா..!

விநாயகப் பெருமான் அவதாரம் நிகழ்ந்த தினத்தையே விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். முழுமுதற்கடவுள் எனும் பெயரும் பெருமையும் பிள்ளையாருக்குத்தான் அமைந்திருக்கிறது. சிவாலயமோ அம்மன் கோயிலோ முருகன் கோயிலோ எதுவாக இருந்தாலும் நாம் முதலில் தரிசிப்பது ஆனைமுகத்தானைத்தான்.

ஒருமுறை பார்வதிதேவி நீராடச் செல்லும்போது, தனக்குத் துணையாக, காவலாக, சந்தனத்தைக் குழைத்து ஒரு உருவத்தை உண்டுபண்ணி கரையில் வைத்தார் என்று சொல்கிறது புராணம். மண்ணை எடுத்து உருவம் அமைத்தார் என்றும் புராணம் தெரிவிக்கிறது. அந்த உருவமே, பார்வதிதேவியின் சக்தியால் உயிர் பெற்றது. அவரே பிள்ளையார் என விநாயக புராணம் தெரிவிக்கிறது.

அப்போது அங்கே வந்தார் சிவபெருமான். அவரைக்கூட அப்போது உள்ளே விடவில்லை பிள்ளையார். உடனே கோபம் கொண்ட சிவனார், பிள்ளையாரின் சிரத்தை அறுத்து வீசினார். குளித்துவிட்டு வந்த பார்வதிதேவி, சிரம் துண்டிக்கப்பட்ட பிள்ளையாரைக் கண்டார். அழுதார். ஆவேசமானார். கடும் உக்கிரத்துடன் காளியாக உருவெடுத்தார்.

மூவுலகிலும் புகுந்து, கண்ணில் தென்படும் உயிர்களை அழித்தாள், தாவரங்களையும் மரங்களையும் வெட்டிவீழ்த்தினாள். காளியின் வெறியாட்டத்தைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் வெலவெலத்துப் போனார்கள். சக்தியின் உக்கிரம் கண்டு விதிர்த்துப் போனார்கள்.

தேவர் பெருமக்கள், சிவனாரைச் சரணடைந்தனர். ‘எங்களையும் உலகையும் காத்தருளுங்கள்’ என வேண்டினார்கள். இதைக் கேட்ட ஈசன், தன் சிவகணங்களை ஏவினார். அந்த சிவகணங்கள் சென்ற பாதையில், மதங்கொண்டது போல் யானை வந்தது. அந்த யானையைக் கொன்றனர்.

அதைக் கண்ட சிவனார், பிள்ளையாரின் உடலில் யானையின் தலையைப் பொருத்தினார். இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்து உணர்ந்தாள் பார்வதிதேவி. அதன் பின்னரே சாந்தமானாள்; கோபம் தணிந்தது. இதனால், விநாயகப் பெருமானுக்கு கணபதி என்றும் திருநாமம் அமைந்தது. கணங்களையெல்லாம் காப்பவர் ஆனைமுகன். கணங்களுக்கெல்லாம் தலைவனாகத் திகழ்பவர். கணங்களையே ஆள்பவர் என்றெல்லாம் கணபதிக்கு பொருள் சொல்கின்றன புராணங்கள்!

மேலும், சிவபூஜையோ, வேறு பூஜைகளோ... வீடுகளிலோ ஆலயங்களிலோ எந்த பூஜைகள் மேற்கொண்டாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகுதான் எல்லா தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்கிறது புராணம். அதேபோல் எந்த தெய்வத்தின் மந்திரங்களைச் சொல்லி ஜபிப்பதாக இருந்தாலும் முதலில் விநாயகர் காயத்ரியையோ அல்லது விநாயகரின் மூல மந்திரத்தையோ விநாயகர் அகவலையோ படித்துவிட்டுத்தான் மற்ற தெய்வங்களின் மந்திரங்களை ஜபிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆவணி மாத சுக்கில பட்ச சதுர்த்தி நாளில், விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதுவே விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.

விநாயக சதுர்த்திநாளில் அல்லல்கள் தீர்க்கும் ஆனைமுகத்தை வழிபடுவோம்! நம் துன்பங்களையும் தூர விரட்டியருளுவான் தொந்தி கணபதி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in