பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம் பருகும்போது..!

பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம் பருகும்போது..!

துளசியில்தான் எத்தனையெத்தனை மகத்துவங்கள் இருக்கின்றன. துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். அதுமட்டுமா? துளசி இலையின் நுனியில் பிரம்மா இருக்கிறார். மத்தியில் மகாவிஷ்ணு இருக்கிறார். அடியில் சிவபெருமான் இருக்கிறார். துளசியின் மற்றைய பகுதிகளில், பனிரெண்டு ஆதித்யர்களும் பதினொரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும் அஸ்வினி தேவர்களும் எழுந்தருளியுள்ளனர் என்கிறது துளசி புராணம்.

மொத்தத்தில், துளசியில் மகாலக்ஷ்மி அருளிக்கொண்டிருக்கிறாள். அதனால்தான் பெருமாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பெருமாள் சந்நிதியில், துளசி தீர்த்தம் தரும் போது, அதைப் பெறுகிற வேளையில், இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தீர்த்தம் பருகுவது, மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சகல தோஷங்களையும் நோய்களையும் தீர்த்தருளும் என்கிறார்கள்.

துளசி தீர்த்தம் பெறும் போது...

அகால ம்ருத்யு ஹரணம்

ஸர்வ வியாதி நிவாரணம்

ஸமஸ்த பாப ஸமனம்

விஷ்ணு பாதோதகம் சுபம்

என்று சொல்லிவிட்டு, துளசி தீர்த்தம் பருகவேண்டும். பருகி முடித்ததும் ‘நாராயணா’ என்று மூன்று முறை சொல்லவேண்டும். பெருமாள் கோயிலின் துளசி தீர்த்தப் பிரசாதத்தைப் பெறும் போது இப்படியாகச் சொல்லி தீர்த்தம் பருகினால், சகல கடாட்சங்களும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மேலும், பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசியானது, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது. பெருமாள் கோயில்களில் பூஜை செய்யும் பொது அர்ச்சனைக்காகவும், அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை அதனால்தான் முக்கியத்துவம் பெறுகிறது.

துளசியால் பெருமாளை அர்ச்சனை செய்கின்றனர், துளசி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்றனர். துளசி தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதை அருந்துவதன் மூலம் நம்முடைய பாவங்கள் தீரும். நோய் நொடிகளும் அண்ட விடாமல் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாகக் கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள். துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும். துளசி உஷ்ணத்தைக் குறைக்கும் வல்லமை கொண்டதும் கூட!

பெருமாள் கோயில்களில் தரும் துளசித் தீர்த்தம் அருந்துவதும் புண்ணியம். வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதும் மகா புண்ணியம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in