ஞானமும் யோகமும் தரும் பட்டினத்தார் கோயில்!

ஞானமும் யோகமும் தரும் பட்டினத்தார் கோயில்!

சென்னை திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலுக்குச் சென்று வழிபட்டு பிரார்த்தித்து வந்தால் ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். முக்தி தந்தருளுவார் சித்தபுருஷரான பட்டினத்தார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தவர் சிவநேசர். பேயருக்கேற்றது போலவே சிவனார் மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்தார். இவருடைய மனைவி ஞானகலா அம்மையார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக குழந்தை வேண்டும் என்பதுதான் இவர்களின் விருப்பம். பெண் குழந்தை பிறந்தது. அடுத்து ஆண் குழந்தைக்காக இறைவனை வேண்டினார்கள்.

சிவனின் சித்தமாகவும் ஆண் குழந்தை என்றிருந்தது. அதன்படி ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ந்த பெற்றோர், குழந்தைக்கு திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

திருவெண்காடனுக்கு ஐந்து வயதிருக்கும் போது தந்தையார் காலமானார். தாயாரின் அரவணைப்பிலும் அன்பிலுமாக வளர்ந்தார். நல்ல குணத்துடன் வளர்ந்தார். சதாசர்வ காலமும் இறை நினைப்புடன் வாழ்ந்தார். சிவபூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார்.

ஒருநாள்... ‘நாளைய தினம் திங்கட்கிழமை. சோமவாரம். திருவெண்காட்டுக்கு வா. அங்கே பெரியவர் ஒருவர் உனக்கு சிவலிங்கம் தருவார். அதைக் கொண்டு அனுதினமும் பூஜித்து வா’ என அவருக்கு அசரீரி கேட்டது.

விடிந்ததும் அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னார். அம்மாவை அழைத்துக் கொண்டு திருவெண்காடு திருத்தலத்துக்குச் சென்றார். வயது முதிர்ந்த முனிவர் ஒருவர், அவரை நோக்கி வந்து, ‘நான் திருவிடைமருதூரில் இருந்து வருகிறேன். என்னுடைய ஊர் அதுதான். இதனை உன்னிடம் அளித்து, உனக்கு சிவ தீட்சை அளித்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு’ என்றார்.

அந்தப் பெட்டகத்தைத் திறந்து பார்த்தார் திருவெண்காடர். உள்ளே சின்னஞ்சிறிய சிவலிங்கம். திருவெண்காடரிடம்... ‘இது என்னுடையதில்லை. முற்பிறவியில் நீங்கள் வணங்கி வழிபட்ட சிவலிங்கம்’ என்று சொல்ல வியந்து மலைத்தார் திருவெண்காடர். அவருக்கு சிவ தீட்சை அளிக்கப்பட்டது.

அதையடுத்து அனுதினமும் காலையும் மாலையும் சிரத்தையுடன் சிவபூஜை செய்து வந்தார். சிலநாட்கள் நேரமோ காலமோ தெரியாமல் பூஜையில் மூழ்கிப்போனார். உரிய வயது வந்ததும் திருமணம் நடந்தேறியது. சிவகலை எனும் பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நெடுங்காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட நிலையில், திருவிடைமருதூர் மருதவாணர் பெருமானே இவர்களுக்கு மகனாக அவதரித்தார் என்றும் 16 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து சிவ ஐக்கியமானார் என்றும் சொல்கிறது புராணம். மருதவாணர் என்று பெயரிட்டு, வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்.

மகனுக்காக திரவியங்கள் தேடிக் கொண்டு வந்தார் தந்தையார். ஆவலுடன் மகனைத் தேடினார். மருதவாணரைக் காணோம். ‘இந்தப் பெட்டியை தங்களிடம் கொடுக்கச் சொன்னார்’ என்று கொடுக்கப்பட்டது. அதில், காதற்ற ஊசியும் ஓலை ஒன்றும் இருந்தது. அந்த ஓலையில், ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என எழுதப்பட்டிருந்தது. அவர்... பட்டினத்தார் என்று புகழப்பட்டார். சித்தர் பெருமான் என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு, பூஜிக்கப்பட்டு வணங்கப்பட்டும் வருகிறார்.

பட்டினத்தாருக்கு, சென்னை திருவொற்றியூரில் திருச்சமாதி அமைந்திருக்கிறது. நல்ல அதிர்வுகள் கொண்ட இந்த அதிஷ்டானத்துக்கு வந்து நின்று பிரார்த்தனை செய்தாலே முக்தியும் அருளும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

பட்டினத்தார் உருகி உருகி வழிபட்ட திருத்தலம் திருவெண்காடு என்று போற்றப்படுகிறது. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகில் உள்ளது திருவெண்காடு. காவிரிப்பூம்பட்டினம் எனப்படும் பூம்புகாருக்கு அருகில் அமைந்துள்ளது திருவெண்காடு எனும் புண்ணிய க்ஷேத்திரம்.

இந்தத் தலத்தின் நாயகன் சிவபெருமான். அவருடைய திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். இந்தத் திருத்தலம் புதன் பரிகாரத் தலம் என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம்.

இங்கே, புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. புதன் பகவானையும் ஸ்வேதாரண்யேஸ்வரரையும் வணங்கி வழிபட்டால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வேகமும் கிடைத்து எதிலும் வெற்றி பெறலாம். குடும்பத்திலும் வியாபாரத்திலும் நிம்மதி கிடைக்கப் பெறலாம்.

அதேபோல், சென்னை திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தாரின் திருச்சமாதி ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வந்தால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். முக்தியைத் தந்தருளுவார் பட்டினத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in