நம் பாவக்கணக்கு தீர்க்கும் காஞ்சி சித்ரகுப்தர்!

நம் பாவக்கணக்கு தீர்க்கும் காஞ்சி சித்ரகுப்தர்!

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயிலுக்கு வந்து தரிசித்தால், நம் பூர்வ ஜென்ம பாவமெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

எந்த ஊருக்கும் இல்லாத பெருமை, காஞ்சி மாநகருக்கு உள்ளது. காஞ்சியைச் சொல்லும் போது நகரேஷூ காஞ்சி என்பார்கள். அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி நகரம் என்று போற்றுகிறது புராணம்.

இத்தனை பெருமை வாய்ந்த காஞ்சியம்பதி மாநகரில், மொத்த சக்தி பீடங்களில் தலையாய பீடமாக, தலைமைப் பீடமாகத் திகழும் காஞ்சி காமாட்சி குடிகொண்டிருக்கும் இந்த ஊரில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றும் அழகிய ஊரில், சித்ரகுப்தருக்கு ஆலயம் உள்ளது. தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு இங்கு மட்டுமே ஆலயம் உள்ளது என்பார்கள்!

இந்தத் தலத்தில் செல்வ விநாயகர் சந்நிதி, ராமலிங்க அடிகள் சந்நிதி, ஐயப்பன் சந்நிதி, விஷ்ணு துர்கை சந்நிதி, நவக்கிரகங்களின் தனிச்சன்னதி என அமைந்து உள்ளன.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கில், நெல்லுக்காரத் தெருவின் மையத்தில் மெயின் ரோட்டிலேயே அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே கோயிலை அடைந்துவிடலாம்.

Ramji

மூலவர் சித்ரகுப்தர் தெற்கு பார்த்தபடி எழுந்தருளியுள்ளார். யார்யாரெல்லாம் சந்நிதிக்கு வருகிறார்கள் என்பதைப் பார்த்துப் பார்த்து, நமக்கு அருள்கிறார் சித்ரகுப்தர் என்கிறது ஸ்தல புராணம்.

எமதர்மன் ஒருமுறை, கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து, பிரம்மதேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்கென்று தனக்கு ஒரு உதவியாளர் மிக மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.

உடனே சிவபெருமான், பிரம்மதேவனை வரவழைத்தார். எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார்.

ஒருநாள் சூரியன் ஆகாய மார்க்கமாகத் தன் பயணத்தை தொடரும்போது, ஒளிக் கதிர்கள் கடல் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை ஏற்படுத்தின. அப்போது கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி எனும் பெண் தோன்றினாள். சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள். இதனால் அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள்.

அந்தக் குழந்தை பிறந்த நேரம் -சித்திரை மாதம் பௌணர்மி தினம். அதாவது சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் உதித்த அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் என்கிறது புராணம். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்று சித்ரகுப்தரை விவரிக்கின்றன ஞானநூல்கள்.

இமயமலையில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார். பிறகு தந்தை சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்கிறது புராணம்!

தென்னிந்தியாவில் சித்ரகுப்தருக்கு உள்ள ஒரே திருக்கோயில் என்று பெருமையைப் பெறுகிறது காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் திருத்தலம்!

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பார்கள். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர்தான் சித்ரகுப்தர்! மிகச்சிறந்த ராகு-கேது பரிகார தலமாகவும் திகழ்கிறது இந்தத் தலம் என்கிறார் ஆலயத்தின் விஸ்வநாத குருக்கள்.

கொள்ளு, உளுந்து பசுவுக்கு வழங்குவது மகா புண்ணியம். கொள்ளு- கேது பகவானுக்கு உரிய தானியம். உளுந்து ராகு பகவானுக்கு உகந்த தானியம். அவரவர் சக்திக்கு ஏற்ப தட்டில் கொள்ளு, உளுந்து வைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம். கொள்ளு, உளுந்தை பசுவிற்கு வழங்கிவிடவேண்டும். இதனால் ராகு, கேது, தோஷம் அகலும். நம் பாவங்கள் அனைத்தும் அகலும் என்கிறார் விஸ்வநாத குருக்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in