நம் தோஷம் தீர்க்கும் நட்சத்திர மரங்கள்... ஸ்தல விருட்சங்கள்!

நம் தோஷம் தீர்க்கும் நட்சத்திர மரங்கள்... ஸ்தல விருட்சங்கள்!

நம் நட்சத்திரத்துக்கு உரிய மரங்களை வளர்ப்பதும் அதைக் கண்ணாரப் பார்ப்பதும் அந்த மரத்தின் மீது பட்டு நாம் சுவாசிக்கிற காற்றும் பாவங்களையும் தோஷங்களையும் போக்கும் என்பது ஐதீகம். புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கும் என்பது உறுதி!

மொத்தம் 12 ராசிகளும் அந்த ராசிகளுக்குள் மொத்தம் 27 நட்சத்திரங்களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அதாவது ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கின்றன. அதேபோல், நட்சத்திரத்துக்கு உரிய மரங்கள் இவையிவை என ஜோதிட சாஸ்திரம் தெரிவித்துள்ளது.

அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் அந்த மரங்களை வீட்டில் அந்தக் காலங்களில் வளர்ப்பார்கள். ஆனால், இன்றைக்கு வீடுகள், அபார்ட்மென்டுகளாகிவிட்டன. மரங்கள் வைக்கக் கூட இடமில்லாமல் போய்விட்டன. எனவே, இந்த மரங்களை கோயில்களுக்கு வழங்கி வளர்க்க உதவலாம். அல்லது அந்தந்த நட்சத்திரக்காரர்கள், அவர்களுக்கு உரிய மரங்கள் எங்கே இருக்கின்றனவோ அவற்றைப் பார்க்கலாம். அல்லது அந்த மரங்களை நம் செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ, வாகனங்களிலோ படமாகவோ ஸ்டிக்கராகவோ ஒட்டிவைத்து அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் எட்டி மரம். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய மரம் நெல்லிமரம். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கான மரம் அத்தி மரம். ரோகிணி நட்சத்திர அன்பர்களுக்கான மரமாக, நாவல் மரம் சொல்லப்பட்டுள்ளது. மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு கருங்காலி மரமும் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு செங்கருங்காலி மரமுமும் புனர்பூச நட்சத்திர அன்பர்களுக்கு மூங்கில் மரமும் சொல்லப்பட்டிருக்கின்றன.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அரச மரமும் ஆயில்யம் அன்பர்களுக்கு புன்னைமரமும் மகம் நட்சத்திர அன்பர்களுக்கு ஆலமரமும் பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு புரசு (பலா) மரமும், உத்திர நட்சத்திர அன்பர்களுக்கு அரளியும் அஸ்த நட்சத்திர அன்பர்களுக்கு வேலமரமும் சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு வில்வ மரமும் ஜோதிட சாஸ்திரம் விவரித்திருக்கின்றன.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு மருதமரம், விசாக நட்சத்திர அன்பர்களுக்கு விளாமரம், அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு மகிழமரம், கேட்டை நட்சத்திரம் கொண்டவர்களுக்கு பிராய் என்று சொல்லப்படும் பராய் மரம், மூலம் நட்சத்திர அன்பர்களுக்கு மராமரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு வஞ்சி மரமும் சொல்லப்பட்டிருக்கின்றன.

உத்திராட அன்பர்களுக்கு பலா மரம், திருவோண அன்பர்களுக்கு எருக்கு மரம், அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு வன்னி மரம், சதயம் நட்சத்திர அன்பர்களுக்கு கடம்ப மரம், பூரட்டாதி நட்சத்திர அன்பர்க்ளுக்கு தேத்தா மரம், உத்திரட்டாதி அன்பர்களுக்கு வேப்பமரம், ரேவதி நட்சத்திர அன்பர்களுக்கு இலுப்பை மரம் என ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன.

27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை, அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி பார்த்து வந்தாலும் அந்த மரத்தின் மீது பட்டு வருகிற காற்றை சுவாசித்து வந்தாலும் நட்சத்திரத்தின் யோகமானது கூடும். தோஷ தாக்கங்கள் நம்மை அண்டாது என்பது உறுதி என்கிறார் ஜோதிடர்’ ஜெயம் சரவணன்.

திருச்சி ஐயப்பன் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்கள் இருக்கின்றன. உங்கள் நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயிலுக்குச் சென்று அடிக்கடி தரிசித்து வருவதும் பாவங்கள் அனைத்தையும் போக்கி, புண்ணியங்களைப் பெருக்கித் தரும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in