தீராத நோயைத் தீர்க்கும் ’சப்த சிரஞ்ஜீவி’ மந்திரம்!
‘சப்த சிரஞ்ஜீவி’ மந்திரத்தைச் சொன்னால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். நமக்கு நோய் என்றாலும் நம்மைச் சார்ந்தவர்களுக்கு நோய் என்றாலும் அவர்களுக்காகவும், இந்த மந்திரத்தைச் சொல்லி வரலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆன்மிகத்தில் ஏழு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ’சப்த’ என்றால் ஏழு என்று அர்த்தம். சப்த ரிஷிகள் என்று வணங்குகிறோம். சப்த கன்னியரை வணங்குகிறோம். சப்த சாகரம் என்றால் ஏழு கடல்களைச் சொல்லுகிறோம். திருமணச் சடங்கு வைபவத்தில் கூட, சப்தபதி எனும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. சப்த ஸ்வரங்கள் என்கிறோம். இப்படி ஏழு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, சப்த சிரஞ்ஜீவிகள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீஅனுமன், விபீஷணர், மார்க்கண்டேயர், மகாபலி சக்கரவர்த்தி, வேத வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் எனும் ஏழுபேரையும் சப்த சிரஞ்ஜீவிகள் எனப் புராணம் விவரிக்கிறது. ‘சிரஞ்ஜீவிகள்’ என்றால் எப்போதும் இருப்பவர்கள் என்று அர்த்தம். முடிவே இல்லாதவர்கள் என்று பொருள். எல்லாக் காலத்திலும் இருப்பவர்கள் என்று அர்த்தம்.
’சப்த சிரஞ்ஜீவிகள்’ என்போரை வழிபடச் சொல்லியிருக்கிறது தர்ம சாஸ்திரம். மிக எளிமையான வழிபாடு இது. இந்த வழிபாட்டைச் செய்யச் செய்ய, நாம் நோயிலிருந்து விடுபடுவோம். தீராமல் பலகாலமாக இருந்து நம்மைப் படுத்தியெடுக்கும் நோய் கூட விரைவில் விலகி ஆரோக்கியத்தை இந்த மந்திரம் தந்தருளும். சப்த சிரஞ்ஜீவிகள் தந்தருளுகிறார்கள் என்பது ஐதீகம்.
ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ
ஓம் ஸ்ரீபரசுராமாய நமஹ
ஓம் ஸ்ரீமார்க்கண்டேயாய நமஹ
ஓம் ஸ்ரீமகாபலி சக்கரவர்த்தியாய நமஹ
ஓம் ஸ்ரீவேத வியாசாய நமஹ
ஓம் ஸ்ரீஅஸ்வத்தாமாயா நமஹ
ஓம் ஸ்ரீவிபீஷணாய நமஹ
என்பது ‘சப்த சிரஞ்ஜீவி’ மந்திரம்.
‘’இந்த மந்திரம் மிக எளிமையானது. காலையும் மாலையும் குளித்துவிட்டு, வடக்குப்பார்த்து நின்று கொள்ளலாம். அல்லது உட்கார்ந்து கொள்ளலாம். ஒரு சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு மூன்று அருகம்புல்லைப் போட்டுக்கொண்டு, கையில் வைத்துக்கொள்ளவும். பிறகு ‘சப்த சிரஞ்ஜீவி’ மந்திரத்தை 21 முறை ஜபிக்கவேண்டும். ஜபித்து முடித்த பின்னர், இந்த தண்ணீரை அருந்தி வந்தால், தீராத நோயும் தீரும். அதேபோல், நம் வீட்டில் எவரேனும் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தாலோ அக்கம்பக்கத்தில் நமக்கு வேண்டப்பட்டவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் தீராத நோயால் அவதிக்குள்ளாகி இருந்தாலோ, அவர்களுக்காகவும் நாம் இந்த ‘சப்த சிரஞ்ஜீவி’ மூலமந்திரத்தை இதேபோல் ஜபிக்கலாம். பிறகு, சொம்பில் உள்ள அருகம்புல் கலந்த தண்ணீரை, அவர்களுக்கு அருந்தக் கொடுக்கவேண்டும். விரைவில் அவர்கள் நோயில் இருந்து விடுபடுவார்கள்; ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்’’ என்கிறார் நங்கநல்லூர் பாலாஜி வாத்தியார்.
மேலும், அனுமன் கோயிலுக்கோ அனுமன் குடிகொண்டிருக்கும் சந்நிதிக்கோ சென்று அனுமனுக்கு முன்னே நின்றுகொண்டும் இந்த மந்திரத்தைச் ஜபிக்கலாம். புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளிலும் ஆஞ்சநேயரைத் தரிசித்துவிட்டு, அவருக்கு முன்னே அமர்ந்துகொண்டோ நின்று கொண்டோ இந்த மந்திரத்தை சொல்லி வந்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். நம்முடைய முன் ஜென்ம வினைகளும் இந்த ஜென்மத்துப் பாவங்களும் நீங்கப் பெறும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.