முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் நென்மேலி கோயில்!

முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் நென்மேலி கோயில்!

நம்முடைய முன்னோருக்காக, மூதாதையர்களுக்காக, பித்ருக்களுக்காக மகாவிஷ்ணுவே சிராத்தம் முதலான திதி தர்ப்பண காரியங்களைச் செய்கிறார். அதேசமயம், சிராத்தம் செய்வதால் உண்டான பலனை நமக்கும் நம் சந்ததிக்கும் வழங்கி அருளுகிறார். அப்படியொரு திருத்தலம் சென்னைக்கு அருகில் உள்ளது.

செங்கல்பட்டுக்கு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில். சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலம் என்று போற்றப்படுகிறது. செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்தி ஸ்ராத்த ஸம்ரக்‌ஷண நாராயணப் பெருமாள் எனும் திருநாமம் கொண்டு சேவை சாதிக்கிறார். புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்று ஒருகாலத்தில் நென்மேலி திருத்தலம் அழைக்கப்பட்டதாக ஸ்தல புராணம் விவரிக்கிறது. இங்குள்ள திருக்குளம் அர்க்ய புஷ்கரணி என்றும் ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள். இந்தத் தலத்தை சௌலப்ய கயா என்றும் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

நென்மேலி பெருமாள்
நென்மேலி பெருமாள்

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா என்பவர் மிகுந்த பெருமாள் பக்தராக இருந்தார். இவரின் மனைவி சரஸ வாணியும் வைஷ்ணவ சம்பிரதாயங்களைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தார். இந்தத் தலத்தின் பெருமாளின் மீது இருவருமே மாறாத பக்தி கொண்டிருந்தனர். ஒருமுறை, இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்குச் செலவு செய்து விட்டனர். அதற்காக அரச தண்டனையை ஏற்க விரும்பாதவர்கள், திருவிடந்தை எனும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்கிறது நென்மேலி ஸ்தல புராணம்.

அந்தத் தம்பதிக்கு வாழும் காலத்தில் இருந்த ஒரேயொரு வருத்தம்... ‘நாம் இறந்துவிட்டால் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு நமக்கு வாரிசு இல்லையே...’ என்பதுதான். அதே வருத்தத்துடன் அவர்கள் மரணமடைந்தார்கள். அவர்களது எண்ணத்தை அறிந்த நென்மேலி தலத்தின் பெருமாள், அவர்களுக்காக ஈமக்கிரியைகளை செய்தார் என விவரிக்கிறது தலத்தின் வரலாறு.

’எங்களைப் போல் வாரிசு இல்லாதவர்களுக்கும் வாரிசு இருந்தும் ஈமக்காரியங்களை, ஈமக்கடன்களைச் செய்யாதவர்களுக்கும் தாங்களே ஈமக்கிரியைகளை செய்து அருளுங்கள்’ என தம்பதியர் வேண்டி நன்றியும் தெரிவித்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாதவருக்கும் சிராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் பெருமாள் தானே முன்னின்று இன்று வரைக்கும் சிராத்தம் செய்து வைத்து வருவதாகச் சொல்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

குதப காலம் எனும் பித்ரு வேளையில் (மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்! எனவே, இங்கு சிராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதையே, ’ஸ்ராத்த சம்ரக்‌ஷணம்’ என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பெருமாளுக்கு இங்கே... வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள். இதனால் பித்ருக்களின் ஆசியும் பெருமாளின் அருளும் கிடைக்கப் பெற்று, நாமும் நம் அடுத்தடுத்த தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழலாம் என்பது ஐதீகம்.

தினமும் நடைபெறும் இந்த பூஜையில் வழிபட்டுப் பிரார்த்திக்கலாம். அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி முதலான திதிகளிலோ வந்து வேண்டிக்கொள்ளலாம். அல்லது எந்த நாளில் வேண்டுமானாலும் இங்குவந்து முன்னோர்களையும் பெருமாளையும் மனதார வேண்டிக் கொண்டால், கயாவில் சென்று ஸ்ராத்தம் செய்த பலனையும் புண்ணியத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in