வேதனைகள் போக்கும் நெல்லை வேங்கடநாதன்!

நெல்லை திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில் மகிமை
திருவேங்கடநாதபுரம் உத்ஸவர்
திருவேங்கடநாதபுரம் உத்ஸவர்

திருவேங்கடநாதபுரத்தில் குடிகொண்டிருக்கும் வேங்கடநாதனை வணங்கி பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நம் வாழ்வையே இனிக்கச் செய்வார் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்று பல வைஷ்ணவத் தலங்களைச் சொல்லுவார்கள். போற்றுவார்கள். வணங்குவார்கள். திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயிலைக் கடந்து உள்ளே பிரிந்து செல்லும் பாதையில் சுமார் 3 கி.மீ. பயணித்தால், திருவேங்கடநாதபுரம் திருத்தலத்தை அடையலாம். இதை திருப்பதிக்கு நிகரான தலம் என்றும் தென் திருப்பதி என்றும் கொண்டாடி வணங்குகின்றனர் பக்தர்கள்.

திருப்பதியில் ஆகாய கங்கையே நீர்வீழ்ச்சியாக வருவது என்பது ஐதீகம். இங்கே அருகிலேயே சலசலவென பளீரென ஓடுகிறது தாமிரபரணி. வெண்மை நிறக்கற்கள் கொண்ட குன்றின் மீது ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

அற்புதமான திருத்தலம். திருமணத் தடைகளை நீக்கியருளுகிறார் பெருமாள் என்றும், நம் பாவங்களையும் போக்கி புண்ணியத்தைப் பெருக்கி அருளுகிறார் என்றும், நாகதோஷம் நீங்கச் செய்கிறார் என்றும் திருவேங்கநாதபுரம் நாயகனான திருமாலைக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள். இங்கு வந்து பெருமாளை வேண்டிக் கொண்டால், வியாபாரம் சிறந்துவிளங்கும்; இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். உத்தியோகத்தில் மேன்மை அடையலாம் என்பது ஐதீகம்.

தாமிரபரணியின் வடகரையில் அமைந்திருக்கும் அற்புதமான வைணவத் திருத்தலம் இது. இங்கே வீற்றிருக்கும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு பன்னிரண்டு ஆழ்வார்களும் திருப்படிகளாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள் என்றும் அதன்படியே பெருமாளை ஸேவிக்கும் இடத்தில், கருவறையில் 12 திருப்படிகள் அமைந்திருக்கின்றன என்றும், அந்த திருப்படிகள் 12 ஆழ்வார்களைக் குறிக்கிறது என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

பொதுவாக, பெருமாள்தானே சங்கு சக்கரத்துடன் வீற்றிருக்கும் கோலத்துடன் திகழ்வார். இந்தத் தலத்தில், பெருமாளைப் போலவே கருடாழ்வாரும் சங்கு சக்கரத்தை திருக்கரங்களில் ஏந்தியபடி காட்சி தருவது சிறப்பு வாய்ந்தது.

இங்கே உள்ள பெருமாளுக்கு திருவோண நட்சத்திரத்தில் பாயசம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு, பாயசம் நைவேத்தியம் ஏற்பாடு செய்து, பக்தர்களுக்கு வழங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்றும் கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என்பது நம்பிக்கை.

மூலவரின் திருநாமம் ஸ்ரீதிருவேங்கடமுடையான். உற்சவரின் திருநாமம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலமேலுத் தாயார். திருவேங்கடநாதபுரம் தலத்தின் விருட்சமாக நெல்லி அமைந்திருக்கிறது. இங்கே உள்ள தீர்த்தம் ஸ்ரீநிவாஸ தீர்த்தம் என்று போற்றப்படுகிறது. வைகானஸ முறைப்படி பூஜைகள் நடைபெறும் திருவேங்கடநாதபுரம் திருத்தலத்துக்கு வந்து, தாமிரபரணி நதியில் நீராடி, வேங்கடமுடையானை மனதார வேண்டிக்கொண்டால், நம் வேதனைகளையெல்லாம் போக்கியருளுவான் தென் திருப்பதி நாயகன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in