நவராத்திரி: பட்டீஸ்வரம் துர்கைக்கு 9 நாளும் சிறப்பு அலங்காரம்!

பட்டீஸ்வரம் துர்கை
பட்டீஸ்வரம் துர்கை

பட்டீஸ்வரம் துர்கைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரமும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நவராத்திரி காலத்தில், வெள்ளிக்கிழமையில் ராகுகாலத்தில் துர்கையை வணங்குவதும் வழிபடுவதும் மகத்துவம் மிக்கது என்கிறார் சித்தநாத குருக்கள்.

சக்தியின் வடிவங்களில், அம்பாள் வடிவங்களில், ஸ்ரீதுர்கைக்கு முக்கியமான இடம் உண்டு. அதனால்தான் சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் ஸ்ரீதுர்கைக்கு சந்நிதி உள்ளது.

சிவாலய துர்கையை சிவதுர்கை என்றும் பெருமாள் கோயில் துர்கையை விஷ்ணு துர்கை என்றும் போற்றுவார்கள். ஒருநாளில் உள்ள காலநேரங்களில், ராகுகாலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படியான ராகுகால வேளையில், ஸ்ரீதுர்கையை தீபமேற்றி வழிபடுவது, வாழ்வில் சகல நன்மைகளையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்! அதிலும் நவராத்திரி காலங்களில், துர்கையை வணங்கி வழிபடுவது இன்னும் பல நன்மைகளை நமக்கு வழங்கும்.

பட்டீஸ்வரம் துர்கை
பட்டீஸ்வரம் துர்கை

துர்கை என்றால் ‘அகழி’ என்றும் பொருள். அதாவது, அடியார்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள் என்று அர்த்தம். துர்க்கமன் என்ற அரக்கனைக் கொன்று அடியார்களைக் காத்ததால், துர்கை என்று தேவி பெயர் பெற்றாள் என்கிறது புராணம்.

மூன்று சக்திகளின் இணைந்த வடிவமாகத் தோன்றியவள் துர்கை. துர்கையைத் தமிழில் ‘கொற்றவை’ என்பர். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியது. இந்த மூன்று நாட்களும் ஸ்ரீதுர்கை வழிபாடு செய்யச் செய்ய, வீட்டில் உள்ள தரித்திரம் விலகும். தீய சக்திகள் காணாமல் போகும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். அதேபோல், நவராத்திரி காலத்தில் வருகிற வெள்ளிக்கிழமையில், ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும் துர்கைக்கு எலுமிச்சை மாலையோ அல்லது எலுமிச்சை தீபமோ ஏற்றி வழிபடுவதும் திருஷ்டி முதலானவற்றைப் போக்கும். தீமைகளில் இருந்து நம்மைக் காத்தருளுவாள் துர்காதேவி.

கோயில் நகரம் கும்பகோணம் அருகில் உள்ளது பட்டீஸ்வரம். காமதேனுவின் குழந்தை பட்டி எனும் கன்று சிவவழிபாடு செய்து, சிவபெருமானின் பேரருளைப் பெற்ற திருத்தலம் இது. இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர்.

இந்தத் திருத்தலத்தில் மூன்று கண்களுடனும் எட்டுத் திருக்கரங்களுடனும் காட்சி தரும் ஸ்ரீதுர்கை, கொள்ளை அழகு. மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று போற்றப்படுகிறாள் பட்டீஸ்வரம் துர்கை. பக்தர்களைக் காக்க உடனே புறப்படும் தயார் நிலையில் உள்ள சிற்ப நுட்பம் வியக்கச் செய்கிறது. இவரது எட்டுக் கரங்களில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு.

பட்டீஸ்வரம் கோயில்
பட்டீஸ்வரம் கோயில்

நவராத்திரி காலங்களில், பட்டீஸ்வரம் துர்கைக்கு தினமும் விசேஷமான அலங்காரம் செய்யப்படுகிறது. கோயிலின் சித்தநாத குருக்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்வதில் வல்லவர். இவருக்கு அலங்கார குருக்கள் என்றே இன்னொரு பெயர் உண்டு.

நவராத்திரி காலமான ஒன்பது நாட்களும் பட்டீஸ்வரம் துர்கையை தரிசித்து வழிபடுவதற்கு தமிழகம், கர்நாடகம் என பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in