நல்ல திருப்பமெல்லாம் தருவாள் தில்லைக்காளி!

வீட்டுக்குச் செய்யும் எலுமிச்சை திருஷ்டி
நல்ல திருப்பமெல்லாம் தருவாள் தில்லைக்காளி!

எப்போதெல்லாம் துயரம் நம்மைத் துரத்துகிறதோ அப்போதெல்லாம் தில்லைக்காளியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். துன்பங்களை பறந்தோடச் செய்வாள் என்பது ஐதீகம்.

தில்லையம்பல நடராஜா என்றும் ஆனந்தக்கூத்தன் என்றும் நடராஜபெருமானுக்குத்தான் எத்தனை திருநாமங்கள். நடராஜபெருமானுக்கு பார்வதிதேவிக்கும் நடனத்தில் போட்டி வந்தது. ‘நீயா நானா?’ என்கிற போட்டியில் இருவரும் முழு முனைப்புடன் நடனமாடினார்கள். சபையே கூடியிருந்தது. தேவர்களும் முனிவர்களும் இருந்தார்கள்.

அப்போது சிவபெருமான் ஆடிய ஆட்டத்தை, தானும் அவ்விதமாகவே ஆடினார் தேவி . ஆனால், தன்னுடைய காலை சிரசுக்கு அருகே தூக்கி ஆடினார் சிவனார். அதைப் போல ஆடமுடியாமல் வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள் தேவி. சிவனே ஜெயித்தவர் என முடிவானது என்பது புராணம் சொல்லும் சேதி!

இந்த ‘போங்கு’ ஆட்டத்தால் கடும் உக்கிரமானாள் தேவி. காளியெனக் கொண்டு, தில்லையில் ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள். அப்படி அவள் நின்ற இடத்தில், பின்னாளில் கோயில் எழுப்பப்பட்டது. இன்றைக்கும் கோயில் கொண்டிருக்கிறாள் தேவி. தில்லைக்காளி என்றே அழைக்கப்படுகிறாள்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் தன்னை மனதால் நினைத்து வேண்டுபவர்களுக்கும் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறாள் தில்லைக்காளி. தில்லை என்பது ஒருவகை மரம். தில்லை எனும் மரங்கள் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது சிதம்பரம் பகுதி. எனவே, அது தில்லைக்காடு என்றும் தில்லைவனம் என்றும் சொல்லப்பட்டது. இந்தத் தில்லையே இன்றைக்கு சிதம்பரம் எனும் ஊராகப் போற்றப்படுகிறது.

சிதம்பரத்தின் பிரம்மாண்டக் கோயிலில் ஆடல்வல்லான் குடிகொண்டிருக்கிறார். இங்கே... ஊரின் ஒரு எல்லையில் கோயில் கொண்டிருக்கிறார் தில்லைக்காளி. இவர் வரங்களை அள்ளித்தருவதில் வள்ளல் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

உக்கிரத்துடன் இருப்பவள்தான் தில்லைக்காளி. முதலில் அவளை வணங்கிவிட்டு, நடராஜர் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். தீயவர்களிடமும் துஷ்ட சக்திகளிடமும்தான் உக்கிரத்தைக் காட்டுவாள். நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு கருணையையும் அருளையும் மழையெனப் பொழிவாள்!

செவ்வாய், வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எப்போதெல்லாம் தோன்றுகிறதோ... அப்போதெல்லாம் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே, வீட்டிலிருந்தே தில்லைக்காளியை வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் அம்மனின் படத்தையே தில்லைக்காளியாக பாவித்துக்கொள்ளுங்கள். அவளுக்கு குங்குமமிடுங்கள். குங்குமத்தால் அர்ச்சனை செய்யுங்கள். கல்யாணத் தடைகளைத் தகர்ப்பாள். தடைபட்ட சுபகாரியங்கள் எல்லாவற்றையும் நடத்தித் தருவாள்.

செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகுகால வேளையில், (செவ்வாய்க்கிழமை மாலை 3 முதல் 4.40, வெள்ளிக்கிழமையில் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை) தில்லைக்காளியை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். தில்லைக்காளியை நினைத்து மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். எலுமிச்சை தீபமேற்றி வேண்டிக்கொள்ளுங்கள். எலுமிச்சையால் வீட்டுக்குத் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். தீய சக்தியை விரட்டியடிப்பாள்! நல்லன அனைத்தையும் தந்து காப்பாள்! வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களைத் தந்து அருளும் தில்லைக்காளியை மனதார வேண்டுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in