முப்பாத்தம்மன் வந்த கதை தெரியுமா?

முப்பாத்தம்மன் வந்த கதை தெரியுமா?

சென்னையின் இதயப்பகுதியாகத் திகழும் தி.நகர் ஒருகாலத்தில் கிராமமாக இருந்தது என்றால் எவருமே நம்பமாட்டார்கள்? இன்றைக்கும் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து கூட, தி.நகருக்கும் பாண்டிபஜாருக்கும் ரங்கநாதன் தெருவுக்குள்ளேயும் வந்து, லட்சக்கணக்கான மக்கள், பொருட்களையும் துணிமணிகளையும் வாங்கிச் செல்கிறார்கள். டூவீலரில் வந்தாலோ, காரில் வந்தாலோ நிறுத்துவதற்கு இடம் தேடுவதே பெரும்பாடாகிப் போகிறது. ஆனால், ஒருகாலத்தில் இந்தப் பகுதி அழகிய கிராமம்.

கிராமம் என்றால் வயல்கள் இல்லாமல் இருக்குமா. வயல்கள் இருந்தால் கிணறுகளும் பசுக்களும் இல்லாமல் இருக்குமா? நெல் விளையும் பூமியாக இருந்த கிராமம் இது. வாழை பயிரிட்டார்கள். கனிகள் விளையும் மரங்களும் செடிகளும் இருந்தன. எங்கு பார்த்தாலும் பசுக்களின் வாசமும் நெல்மணிகளின் வாசமும் நாசி தொட்டன.

இன்றைக்குத்தான் தி.நகர் இந்தப் பக்கமும் தண்டவாளத்தைக் கடந்தால் மாம்பலம் அந்தப் பக்கமும் என்றிருக்கிறது. அப்போது மொத்தப்பகுதியுமே மாம்பலம் என்றுதான் அழைக்கப்பட்டது.

அப்படி கிராமமாக இருந்தது தொடங்கி, நகரத்தின் மையமாக இன்றைக்கு பரபரப்புடன் காட்சி அளித்து வரும் தி.நகர் பகுதியில், அப்போதும் இப்போதும் அருள்பாலித்து வருகிறாள் முப்பாத்தம்மன்.

தி.நகரின் முக்கிய அடையாளமாகத் திகழும் பனகல் பார்க்கிற்கு பின்புறம் உள்ள தெருவில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் முப்பாத்தம்மன். ஒருகாலத்தில், வேம்பு வனமாகத் திகழ்ந்த இடம். அரசமரமும் மாமரங்களும் சூழ்ந்திருந்த பகுதிதான் இது. புற்றுவடிவில் ஆதியில் அருளாட்சி செய்து, தன் அருளாடல் மூலம் மக்களுக்கு தன்னை வெளிப்படுத்தினாள் முப்பாத்தம்மன்!

வயல்களுக்கு நடுவே, வேப்ப மரமும் அரச மரமும் இருக்க... அழகிய புற்று. அந்தப் புற்றுக்கு நடுவே கம்பீரமும் சாந்தமும் ஒருசேர, குடிகொண்டு அருளினாள் முப்பாத்தம்மன்! அம்மனுக்குப் படையல் போட்டுவிட்டுத்தான், விதைக்கத் தொடங்குவார்கள் மக்கள்.

கால வேகத்தில், வயல்கள் காணாமல் போக, மரங்கள் அழிந்து போக, தான் மட்டும் கம்பீரம் காட்டி நின்றது புற்று. முப்போகமும் விளைச்சல் தருகிற பூமியில் இருந்து புற்றுக்குள் இருக்கும் அம்மனைக் கண்டெடுத்ததால், முப்போகத்து அம்மன் என்று அழைக்கப்பட்டு, பிறகு முப்பாத்தம்மன் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

வெட்டவெளியே கூரையாக இருந்த அம்மனுக்கு கூரை வேய்ந்து வழிபட்டார்கள். அதன் பின்னர் அடுத்தடுத்த தலைமுறைக்கும் அம்மன் தன் அருளை அள்ளித்தர, கோயில் வளர்ந்தது. மண்டபங்கள் உருவாகின. ஐந்தாவது தலைமுறையில் சந்நிதிக்கு விமானமெல்லாம் எழுப்பி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது என்கிறார்கள் பக்தர்கள்.

சுமார் 300 வருடப் பழைமை மிக்க திருக்கோயில். சுற்றியுள்ள சிறிய கோயில்களுக்கெல்லாம் முப்பாத்தம்மன் தான் தலைவி. எனவே, அங்கெல்லாம் அம்மனின் உத்தரவுக்குப் பின்பே வைபவங்கள் நடக்கின்றன. கிழக்குப் பார்த்த சிறிய ஆலயம்தான். அம்மன் சக்திக்கு எல்லையே இல்லை. உள்ளே நுழைந்ததும் சூலம், சிம்மம். கருவறையில் சாந்தமும் கருணையுமாக, அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அருளாட்சி நடத்துக்கிறாள் அம்மன்!

பின்னிரு கரங்களில் உடுக்கை- பாசம். முன்னிரு கரங்களில் சூலம்- கபாலம் ஏந்தியபடி காட்சி தருகிறாள். பூக்களால் கோக்கப்பட்ட மாலைகளும் எலுமிச்சையால் சேர்க்கப்பட்ட மாலைகளும் அம்மனை எப்போதும் அலங்கரிக்கின்றன. பிராகாரமாக வலம் வந்தால், நவக்கிரகம் மற்றும் ஸ்ரீவிநாயகர் சந்நிதி. அடுத்து புற்று, அரச மரம், வேப்ப மரம். செவ்வாய், வெள்ளி என்றில்லாமல், தினமும் இந்தப் புற்றுக்கு மஞ்சள் தூவி பால் ஊற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள். சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, அம்மனை வேண்டிக் கொண்டால், காலசர்ப்ப தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!

இந்தக் கோயிலில், இரண்டு விநாயகர்கள் அருகருகே அமர்ந்து அருள்பாலித்து வந்தனராம். பிறகு, ஒரு விநாயகரை கன்னி மூலையில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள். கன்னிமூல கணபதியை வேண்டிக் கொண்டால், நல்ல வேலை இல்லையே எனத் தவிப்பவர்களுக்கு படிப்புக்கேற்ற உத்தியோகம் கிடைக்கும்; கல்யாண வரம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்!

அடுத்து வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர். அருகில் ஸ்ரீஆஞ்சநேயர். சனிக்கிழமைகளில், ஆஞ்சநேயரை தரிசிப்பதற்கு என்றே பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இவருக்கு வெண்ணெய்க் காப்பு சார்த்தி, வெற்றிலை மாலையும் அணிவித்து பிரார்த்தித்துக் கொள்கிறார்கள் பக்தர்கள்.

எலுமிச்சையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வழிபடுகிறார்கள். இதில் ஏதோவொரு கிழமையைத் தேர்வு செய்து அந்தக் கிழமைகளில், ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், திருமண வரம் கிடைக்கும் என்றும் வீடு மனை யோகம் தந்தருளுவாள் என்றும் மனை வாங்கும் யோகத்தை அருளுவாள் என்றும் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்!

முப்பொழுதும் அருளிக்காக்கும் முப்பாத்தம்மனை தரிசித்து வணங்குவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in