முன் ஜென்ம பாவம் தீர்க்கும் சிவ தரிசனம்!

முன் ஜென்ம பாவம் தீர்க்கும் சிவ தரிசனம்!

வழிபாடுகளில் சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய வழிபாடு. முக்கியமான வழிபாடு. சிவ வழிபாடு என்பது ஞானத்துக்கான வழிபாடு என்றும் சிவலிங்க தரிசனத்தை தொடர்ந்து செய்து வருவோருக்கு, பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும் என்றும் பித்ருக்கள் தோஷம் விலகும் என்பதும் உறுதி என்கிறார்கள் சிவபக்தர்கள்.

நம் இந்தப் பிறவியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும், கவலைகளுக்கும் கடன் முதலான தொல்லைகளுக்கும் முந்தைய பிறவியின் பாவ புண்ணியக் கணக்குகளே காரணம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இப்படியான கர்மவினைகளை அகற்றிக் கொள்வதற்குத்தான், பூஜைகளில் ஈடுபடுகிறோம். வழிபாடுகளில் மனதைச் செலுத்துகிறோம். ஆலயங்களுக்குச் சென்று அங்கே உருவேற்றி வைக்கப்பட்டிருக்கும் சக்தியில் இருந்து வெளிவரக்கூடிய நல்ல அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ள ஆலய வழிபாட்டையும் சிவ தரிசனத்தையும் மேற்கொள்ளச் சொன்னார்கள் முன்னோர்கள் என்கிறார் விஸ்வநாத குருக்கள்.

இந்திர லோகம் என்று சொல்வது போல, பித்ரு லோகம் என்று சொல்வது போல பூலோகம் என்று நம் உலகைச் சொல்லுகிறோம். உண்மையில் இந்த பூமியானது கர்மபூமி என்றே சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நாம் அனைவரும் கர்ம வினைகளை அகற்றிக் கொள்வதற்காகவே, தொலைப்பதற்காகவே இந்த பூமியில் பிறப்பெடுத்திருக்கிறோம். எனவே இந்த வாழ்க்கையில் அதனால்தான் ஒவ்வொரு தருணத்திலும் விரதங்களை மேற்கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம். பித்ருக்கடன்களை அடைக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. மந்திரங்களை ஜபிக்கச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வயதில் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதும் சிறியவர்களிடம் அன்பு காட்டி வழிநடத்தவும் சொல்கின்றன ஞானநூல்கள். அதேபோல், நம்மால் முடிந்த தர்மங்களையும் தானங்களையும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார் விஸ்வநாத சாஸ்திரிகள்.இதுவே நாம் பூமிக்கு வந்ததற்கான மிக முக்கியமான வேலை.

நல்வினை என்றும் தீவினை என்றும் இருக்கின்றன. வினை என்றால் செயல் என்று அர்த்தம். வாழ்வில் அனைவருமே நல்வினை மற்றும் தீவினை ஆகியவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். இதைத்தான் விதி என்கிறோம். அதேசமயம் ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்றும் முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். மதி என்பது இங்கே அறிவைச் சொல்லவில்லை. மதி என்று சந்திரனுக்கு மற்றொரு பெயர் உண்டு. நவக்கிரகங்களில் சந்திர பகவானும் ஒரு கிரகம். சந்திர பகவான் நம் மனோகாரகன். நம் மனதில் நல்லெண்ணங்களையோ துர்குணங்களையோ புகுத்துகிறவர். அவரைத் தொடர்ந்து வணங்கிவந்தாலே, நற்குணங்களையும் நல்ல விளைவுகளையும் நமக்குத் தந்தருளுவார். முக்கியமாக நம் முன் ஜென்மத்துப் பாவங்களைப் போக்கியருளுவார்.

திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். திங்கட்கிழமை சந்திரபகவானுக்கு உரிய நாளாகப்போற்றப்படுகிறது. அதேசமயம் சிவபெருமானுக்கு உரிய நாளாகவும் வழிபடப்படுகிறது. சந்திரனை, பிறையாகவே சூடிக்கொண்டிருப்பவர் சிவபெருமான். திங்கட்கிழமைகளில், நவக்கிரத்தில் உள்ள சந்திரபகவானை மனதில் இருத்தி வழிபட்டு வருவதும் அவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் புண்ணிய பலன்களைக் கொடுக்கும். மனதில் உள்ள குழப்பங்களைப் போக்கும். முக்கியமாக, சிவ வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.

திங்கட்கிழமைகளில், சிவன் கோயிலுக்குச் சென்று லிங்கத் திருமேனியை மனதார வேண்டிக்கொண்டு, பிராகார நிறைவிலுள்ள நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து வேண்டிவந்தால், முன் ஜென்ம பாவங்கள் தொலையும் என்கிறார் விஸ்வநாத குருக்கள்.

சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்ல துணை நிற்பார்.

மதி என்கிற சந்திரனைச் சூடிய கடவுளர்களை வழிபாடு செய்வது நமக்கும் நம் சந்ததியினருக்கும் நற்பலன்களை வழங்கவல்லது. பிறை சூடிய தெய்வங்கள், சிவ அம்சங்கள் நிறைந்தவை.

சந்திர பகவான்
சந்திர பகவான்

லிங்கத் திருமேனியராக காட்சி தரும் சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வருவது அவசியம். அதேபோல், சிவனாரின் இன்னொரு வடிவமான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் தொடர்ந்து பிரார்த்தனை செய்வது ஞானத்தையும் தெளிவையும் கொடுக்கும். சிவனாரின் இன்னொரு வடிவமான ஸ்ரீபைரவ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடு. மேலும் சிவ வடிவங்கள் 64 வடிவங்கள் உள்ளன என்கிறது சிவபுராணம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோரையும் சிவனாரையும் நவக்கிரகத்தில் உள்ள சந்திரனையும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆலயம் சென்று பிரார்த்தனை செய்து வந்தால், முன் ஜென்ம பாவங்களை விலக்கி அருளுவார் சிவபெருமான்.

இதேபோல், மூன்றாம் பிறை தரிசனமும் நம் பாவம் போக்கவல்லது என்கிறார்கள்.

திங்கட்கிழமைகளில், காலையும் மாலையும் ‘நமசிவாய’ மந்திரம் ஜபித்து வருவதும் நன்மைகளைத் தரும். திங்கட்கிழமைகளில், சிவாலயம் செல்வோம். சிவனாரையும் தட்சிணாமூர்த்தியையும் பைரவரையும் வணங்கிவிட்டு, நவக்கிரக சந்திர பகவானையும் வணங்கி வருவோம். பாவங்கள் போக்கி புண்ணியங்களைத் தருவார் சிவபெருமான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in