சுப்ரபாதம் அருளிய அண்ணங்கராச்சார்யரை வணங்குவோம்!

சுப்ரபாதம் அருளிய அண்ணங்கராச்சார்யரை வணங்குவோம்!

திருப்பதி-திருமலையில் தினந்தோறும் அதிகாலையில் நடை திறக்கும்போது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுவார்கள். நம்மில் பல வீடுகளிலும் கூட, ஸ்ரீவெங்கடே சுப்ரபாதத்தை ஒலிக்கவிட்டுக் கொண்டே, அன்றாட வேலைகளில் ஈடுபடுவோம். திருப்பதியில், அதிகாலையில் சுப்ரபாதம் பாடுகிற போது நடைபெறுகிற தரிசனத்தை சுப்ரபாத தரிசனம் என்றே போற்றுவார்கள். இதற்கு ‘விஸ்வரூப தரிசனம்’ என்றும் பெயருண்டு. பொதுவாகவே பல வைஷ்ணவக் கோயில்களில், காலையில் நடை திறக்கப்படும் வேளையில், நடைபெறும் தரிசனத்தை விஸ்வரூப தரிசனம் என்று அழைப்பது வழக்கம்.

இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின் கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான பட்டாச்சார்யரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி எடுத்து ஆராதனைகள் மேற்கொள்வார்.

மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சந்நிதியில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், 'பிரதிவாதி பயங்கரம்' அண்ணங்கராச்சார்யர் எனும் வைணவப் பெரியவரால் இயற்றி அருளப்பட்டது. சுமார் 500 வருடப் பழைமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துகளை ஆதாரமாக வைத்துக் கொண்டும் இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் அண்ணங்கராச்சார்யர். ஸ்ரீமந் ராமாநுஜரின் மறு அவதாரமாக வணங்கப்படும், மணவாள மாமுனிகள் என்ற வைணவ குருவின் சீடர் இவர். தம் குருவின் வேண்டுகோளை ஏற்று, திருவேங்கடமுடையானுக்கு அவர் இயற்றியதே இந்த சுப்ரபாதம் என்கிறது சரிதம்.

இயற்கை வர்ணனைகளும், ஆழ்வார் பாசுரங்களில் இருந்து பல குறிப்புகளும் கொண்டுள்ளதாக அழகுற இயற்றப்பட்டுள்ளது சுப்ரபாதம். சுப்ரபாதம் - பள்ளி எழல், ஸ்தோத்திரம் - துதி, போற்றி, பிரபத்தி - திருமகளைப் பற்றியும், திருவடிகளில் சரணாகதி பற்றியும், மங்களம் - சுபம் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியதாகக் கொண்டிருக்கிறது சுப்ரபாதம் என விவரிக்கிறார் கோவிந்த பட்டாச்சார்யர்.

சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு உரியவர் மட்டுமல்ல அண்ணங்கராச்சார்யர். அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சந்நிதியில் நீண்டகாலமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது. தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சார்யர் குரலில், ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும்.

இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக் காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சார்யரின் குரலுடன் இணைந்து மெய்யுருக சுப்ரபாதத்தைக் கேட்டு உய்யுவார்கள்.

வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவருக்கு பட்டப் பெயராகத் திகழ்ந்தது. எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் அமைந்தது.

அண்ணங்கராச்சார்யருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவப் பெருமக்களால், ஆழ்வார்களில் ஒருவராகவே வணங்கப்பட்டு வந்தார். இவர், 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்கிருதத்திலும் எழுதும் வல்லமையும் இவருக்கு உண்டு என்று சரித்திரம் குறித்து வைத்திருக்கிறது.

சுப்ரபாதத்தை நம் வீடுகளில் ஒலிக்கவிட்டுக் கேட்கும்போது, எம்.எஸ்.சுப்புலட்சுமி எனும் கானக்குயிலில் கரைந்து பக்திக்குள் நுழைகிற அதேவேளையில், அண்ணங்கராச்சார்யர் எனும் குருமகானையும் வேண்டிப் பிரார்த்தித்து, திருமாலின் திருவடி தொழுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in