மருத்துவச்சி அக்கா; பெண்களே பல்லக்குத் தூக்கிகள்!

கம்பம் கெளமாரியம்மனே கண்கண்ட தெய்வம்!
படங்கள் உதவி : மு. ஆதவன்
படங்கள் உதவி : மு. ஆதவன்

கம்பம் கெளமாரி அம்மனை ஒருமுறையேனும் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் போதும்; காலம் முழுக்க நம் தாலியைக் காத்தருளுவாள் அம்மன். நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தந்தருளுவாள் தேவி.

கம்பம் கெளமாரியம்மன் கோயிலுக்கு சரிதம் உண்டு. அதை இன்றைக்கும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

விவசாயம் செழித்துக் கிடக்கும் ஊர் அது. ஊர்மக்களை, திடீர் திடீரென ஏதேனும் நோய் தாக்கியது. மலை, மழை, குளிர், பனி, வயல், தோப்பு என பசுமை போர்த்திய ஊருக்கு என்னாச்சு? குழப்பத்திலும் பீதியிலுமாக தவித்துக் கலங்கினார்கள் மக்கள்.

சிலருக்கு கை-கால்கள் செயல்படவில்லை; சிலருக்கு உடலில் அதீத உஷ்ணம் பரவியது. எலும்பும் தோலுமாக உருக்குலைந்து போனார்கள் சிலர். இன்னும் சிலர், படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள்.

‘உயிர் பிழைக்க வேண்டும் எனில் ஊரை விட்டுச் செல்வதே வழி’ என முடிவு செய்தார்கள். பாத்திர- பண்டங்களை எடுத்துக் கொண்டும் ஆடு- மாடுகளை ஓட்டிக் கொண்டும் கிளம்பினார்கள். அப்போது அந்த ஊருக்குள் நுழைந்த பெண்மணி ஒருத்தி, ‘’இந்த மருந்தைச் சாப்பிடுங்கள். குணமாகிவிடுவீர்கள்’’ என்று வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்தெடுத்துக் கொடுத்தாள்.

‘எத்தனையோ வைத்தியம் பாத்தும் குணமாகலை. இதனாலதான் குணமாகப் போகுதாக்கும்‘ என்று எண்ணியபடி, ‘சரி... சாப்பிட்டுத்தான் பாப்போமே...’ என்று வாங்கினார்கள். சாப்பிட்டார்கள். அடுத்த நிமிடத்தில் உடலில், கண்களில், கை-கால்களில், மூளையில் மெள்ள மெள்ள மாற்றங்கள் ஏற்பட்டன. சுருண்டு கிடந்தவர்கள் சுறுசுறுப்பானார்கள். படுக்கையில் கிடந்தவர்கள், மருந்து கேட்டு ஓடிவந்தார்கள். மஞ்சளும் வேப்பிலையும் மாபெரும் மருந்தானது. ஊர்மக்கள் அனைவரும் பூரண குணம் அடைந்தனர். அந்தப் பெண்மணியை, மருத்துவச்சி என்றே அனைவரும் அழைத்தார்கள்.

ஊர்மக்களில் சிலர், அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் அவளிடம் வந்தனர். ‘’. நீ யாரும்மா? எந்த ஊரு உனக்கு?’’ என்று விசாரித்தனர். அந்தப் பெண், ஊரே அதிரும்படிச் சிரித்தாள். அது மலையைத் தொட்டு எதிரொலித்தது. மாரியம்மனாக, கௌமாரித் தாயாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தந்தருளினாள். எல்லோரும் வியந்து பார்த்தார்கள். பலரும் அருள் வந்து ஆடினார்கள். அவளின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கினார்கள். அந்த அம்மன் சட்டென்று மறைந்து போக... அங்கே, கல்லாக-, சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினாள் அம்மன். இந்த சுயம்பு மூர்த்தத்தைத்தான் கௌமாரியம்மன் எனும் பெயர் சூட்டி, கோயில் எழுப்பி, வழிபட ஆரம்பித்தார்கள். இன்றைக்கும் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ளது கம்பம். இங்குதான் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகௌமாரியம்மன். கருவறையில் சுயம்பு மூர்த்தத்தையே அம்மனாக, ஆதிஅம்பாளாக வணங்குகின்றனர் பக்தர்கள். அருகில், அமர்ந்தபடி காட்சி தரும் கௌமாரியம்மனின் திருவுருவ விக்கிரகத்தை பிறகு வந்த காலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார்கள்.

ஆதிஅம்பாளான சுயம்பு மூர்த்தத்துக்குத்தான் முதல் பூஜை, வழிபாடு, சடங்கு சாங்கியங்கள் எல்லாமே! கல்லில் சந்தனக்காப்பிட்டு, அதில் முகம், புருவம், கண்கள் எழுதி அலங்கரிக்கப்பட்டிருக்கும் அம்பாளை ஒருநிமிடம் பார்த்தாலே, சிலிர்த்துவிடுவோம்!

தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள ஸ்ரீகௌமாரியம்மன், கம்பம் ஸ்ரீகௌமாரியம்மனுக்கு தங்கை என்கிறது கோயில் ஸ்தல வரலாறு. எனவே, கம்பத்தில் குடிகொண்டிருக்கும் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரையில் திருவிழா நிறைவுற்ற பிறகே வீரபாண்டியில் திருவிழா நடைபெறுகிறது. எனவே கம்பம் ஆலயத் திருவிழாவை, ‘அக்கா மாரியம்மன் திருவிழா’ என்கிறார்கள்.

மருத்துவச்சியாக வந்து, ஊர் மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்றியவள் என்பதால் நோய் அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் தன் தாயிடம் சொல்வது போல, அம்மனிடம் வந்து முறையிடுகிறார்கள் ஊர்மக்கள்.

சித்திரை மாத செவ்வாய்க்கிழமை அன்று ‘சாட்டு கொட்டுதல்’ எனும் நிகழ்ச்சியுடன் துவங்கும் திருவிழா 21 நாட்கள் நடைபெறும். ஊருக்குள் வீதிக்கு வீதி வந்து, தண்டோரா போடுவார்கள். தண்டோரா போட்டுத்தான் விழாவை அறிவிப்பார்கள். இதையே சாட்டு கொட்டுதல் என்கின்றனர். இதையடுத்து, ஊர்க்காரர்கள் அனைவரும் திருவிழா முடியும் வரை வெளியூரில் தங்கமாட்டார்கள் என்பது ஐதீகம்!

மறுநாள் புதன் கிழமையில் இருந்து துவங்குகிறது விழா. 8-ம் நாள் விழாவில், கோயில் பூசாரி அக்னிச்சட்டி ஏந்தியபடி வீதியுலா வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். அடுத்து, 15-ம் நாள் அலகு குத்தியபடி வீதியுலா வருவார் பூசாரி. இதையடுத்து 21-ம் நாள் வரை எண்ணற்ற பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனை தரிசிப்பார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தோளில் தூளி கட்டிக் கொண்டும், கையில் அக்னிச் சட்டி ஏந்திக்கொண்டுமாக வருவார்கள். இந்த வேண்டுதல், அனுதினமும் நடைபெறுகிறது. .

அம்மனுக்கு எதிரே வேம்புக் கம்பம் இருப்பது பல ஆலயங்களில் வழக்கம். ஆனால் இங்கே, கல் கம்பம் அமைந்துள்ளது. கௌமாரியம்மன், அந்தணப் பெண் போல் இந்த ஊரில் இருக்க... அவளை வேறோர் இனத்தைச் சேர்ந்தவர் திருமணம் செய்து கொண்டு, ஏமாற்றி விட்டாராம்! இதனால் அந்தணப் பெண் வெகுண்டாள். கோபமானாள். மாரியம்மனாக காட்சி தந்து சுயம்பு மூர்த்தமானாள். எதிரே அந்தக் கணவனை கல்கம்பமாக நிற்க வைத்துவிட்டாள் கம்பத்து மாரியம்மன். இதனால்தான் ஊருக்கு கம்பம் என்று பெயர் வந்தது என்று காரணம் சொல்கிறார்கள் பக்தர்கள்.

பிள்ளை வரம், திருமண பாக்கியம், சுகப்பிரசவம் அருள்வதில் கண்கண்ட தெய்வம் கம்பம் கௌமாரியம்மன். கௌமாரியம்மன் ஆலயத்தின் விசேஷம்... வெள்ளிக் கிழமை தோறும், இரவு சிறப்பு பூஜையும் அதையடுத்து உற்ஸவ மூர்த்தத்தின் வீதியுலாவும் நடைபெறுகிறது. பல்லக்கில் வீதியுலா வரும் அம்மனை தரிசிக்க ஏராளமானோர் கூடியிருப்பார்கள். இன்னொரு சிறப்பு... பல்லக்கில் அம்மன் அழகுற அமர்ந்திருக்க, அந்தப் பல்லக்கை பெண்கள் மட்டுமே தூக்கிக் கொண்டு வருவது வேறெங்கும் இல்லாத சிறப்பு! ஆண்களுக்கு அனுமதி இல்லை. எனவே, பல்லக்கு தூக்கி, அம்மனின் அருளைப் பெற ஏராளமான பெண்கள் கூடுவது வழக்கம்!

அம்மை, வெப்பு நோய் மற்றும் தீராத நோயால் அவதிப்படுவோருக்கு, அம்மனுக்கு அபிஷேகித்த தீர்த்த நீருடன் வேப்பிலையும் கலந்து தருவார்கள். இந்த தீர்த்தத்தை அருந்தலாம்; குளிக்கும்போது இந்த தீர்த்தத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் விரைவில் நலம் பெறலாம் என்பது ஐதீகம். அப்படி பூரண குணம் பெற்றதும், அடிப் பிரதட்சணம் மற்றும் அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

வயிற்று வலி தீருவதற்காக மாவிளக்கு ஏற்றுவதும், கண் பார்வைக் கோளாறு நீங்குவதற்காக ஆயிரம் கண் பானையில் தண்ணீர் நிரப்பி, மூன்று முறை பிராகார வலம் வருவதுமாக அம்மனை வழிபடுகின்றனர் பக்தர்கள் பலர்!

திருமணத் தடை உள்ள பெண்கள், கௌமாரி அம்மனுக்கு வளையல் சார்த்திவிட்டு அதைப் பெற்றுக்கொண்டு அணிந்து கொள்ள, விரைவில் கெட்டிமேளச் சத்தம் வீட்டில் கேட்கும் என்பது ஐதீகம். இதேபோல், கர்ப்பிணிகளின் வளைகாப்பின் போது, அம்மனுக்கும் வளையல் அணிவித்துவிட்டு, அந்த வளையலைப் பிரசாதமாக எடுத்துச் சென்று, கர்ப்பிணியின் கையில் அணிவிக்கிறார்கள். இதனால், பிரவசத்தின்போது ஸ்ரீகௌமாரியம்மனே அந்தப் பெண்ணுக்கு பக்கத் துணையாக இருந்து காக்கிறாள் என்றும் சுகப்பிரசவம் நிகழச் செய்கிறாள் என்றும் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பெண்கள் மெய்சிலிர்க்கத் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in