மழை தருவாள் மணலூர் மாரி:

நெல், கேழ்வரகு, அரிசியை காணிக்கையாகத் தரும் சிறப்பு!
மழை தருவாள் மணலூர் மாரி:

நெல், கேழ்வரகு, அரிசி முதலான தானியங்களை காணிக்கையாக வழங்கி மணலூர் மாரியம்மனிடம் வேண்டிக்கொண்டால், மழை பொழியும், விவசாயம் செழிக்கும், தனம் தானியம் பெருகும் என்பது ஐதீகம்.

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சும் தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், காவிரி மற்றும் கொள்ளிட நதிக்கரைகளுக்கு நடுவே ஒருசமயம் பயணித்தான். நதிகளைத் தழுவி வரும் காற்று அந்த இடத்தைக் குளுமைப்படுத்தியது. அதில் மனம் குளிர்ந்த மன்னன், அங்கே... அந்த இடத்தில் இளைப்பாறினான்.

அதுவொரு வனப்பகுதியாக இருந்தது. இந்த இடத்தை ஊராக்கினால் என்ன என்று மன்னன் யோசித்தான். அப்படி ஊராக மாற்ற வேண்டுமெனில், வீடுகள் வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் உழைத்துப் பிழைக்க நிலம் வேண்டும். முக்கியமாக, ஊர்கூடி வழிபட அந்த இடத்தில் ஓர் கோயில் எழுப்பவேண்டும் என திட்டமிட்டான்.

தன் திட்டத்தை செயல்படுத்தும்விதமாக முதலில் கோயில் எழுப்பினான். இந்த வனப்பகுதி, கிராமமாக மாறும் போது அங்கே சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்திருக்கவேண்டும் என விரும்பினான். அதற்காக அம்மன் கோயில் கட்டுவது என முடிவு செய்தான். மணல் பகுதியாகவும் மேட்டுப்பகுதியாகவும் இருந்த அந்தக் கிராமம் மணலூர் என்றே அழைக்கப்பட்டது. இன்றைக்கும் இந்த ஊருக்கு மணலூர் என்றுதான் பெயர்.

திருவையாறிலிருந்து 10-வது கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது மணலூர் கிராமம். அம்மனின் திருநாமம் மாரியம்மன். தலையில் அக்னிக்கிரீடம். எட்டுத் திருக்கரங்கள். எல்லா கரங்களிலும் ஆயுதங்கள். வலது காலை மடக்கியபடி வைத்துக் கொண்டு, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த திருக்கோல நாயகியாகக் காட்சி தருகிறாள் அன்னை. மன்னனின் ஆசைப்படு மணலூரில் மக்கள் குடிபுகுந்தார்கள். காலையும் மாலையும் அம்மனை வழிபட்டார்கள்.

காலங்கள் ஓடின. மணலூர்ப் பகுதியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது நல்லூர் எனும் சின்னஞ்சிறிய கிராமம். அங்கிருந்த வயலில் மக்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூமிக்குள் ஏதோ தட்டுப்பட்டது. தோண்டிப்பார்த்தால்... அம்மன் விக்கிரகம். ஒரு சேலையை எடுத்து அம்மனை அதில் வைத்துச் சுற்றி பத்திரமாக வைத்தார்கள். அன்றிரவு ஊர்ப்பெரியவரின் கனவில் வந்தாள் அம்மன்.

“என்னை மணலூரில் கொண்டுவிடுங்கள். நான் அந்த ஊர்க்காரி” என அசரீரி கேட்டது. விடிந்ததும் கிராமத்தினருக்குச் சொல்லப்பட்டது. சேலையில் சுற்றிவைத்திருந்த அம்மன் சிலையை எடுத்தார்கள்; அதிர்ந்து போனார்கள். அம்மன் முகமெல்லாம் தழும்புகள். “சாமி குத்தம் ஆயிரும்பா. வாங்க மணலூர்ல கொண்டு விட்டுடலாம்” என்று பெரியவர்கள் சொல்ல, கிராமமே ஊர்வலமாக எடுத்துச் சென்று, மணலூரில் அம்மனை விட்டது. இந்த அம்மனே, கோயிலின் உற்சவ அம்மனாக இப்போது கொலுவிருக்கிறாள்.

முத்து முத்துத் தழும்புகள். கரங்களில் உடுக்கை, கத்தி, பாசம், கபாலம். அம்மை முதலான நோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சியாகவே இந்த மாரியம்மனை பூரிப்புடன் சொல்லி வணங்குகிறார்கள் பக்தர்கள்.

மணலூருக்கும் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மணலூர் மாரியம்மன் தான் இஷ்ட தெய்வம். வீட்டில் இருப்பவர்களுக்கோ வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கோ ஏதேனும் ஆரோக்கியக் குறைபாடென்றால், மணலூர் மாரியம்மனிடம் தான் கோரிக்கையாக தங்களின் பிரார்த்தனையை வைக்கிறார்கள். அவளும், நாடி வருவோருக்கெல்லாம் சகல நோய்களையும் தீர்த்து அருள்மாரி பொழிந்து வருகிறாள்.

இங்கே, பச்சைக்காளி, பவளக்காளிகளும் இருக்கிறார்கள். இவர்களை வணங்கிவிட்டு, மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டால்,கேட்டதெல்லாம் தருவாள்; நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மாசி சிவராத்திரி இங்கே விசேஷம். சித்திரை மாதத்தில் திருவிழா களைகட்டும். ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் அம்மன் வீதியுலா வைபவம் விமரிசையாக நடந்தேறும். ஆடி மாதத்தில், விவசாயம் செழிக்கவும் காடு கழனியெல்லாம் நிறைந்திருக்கவும் வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். அதையடுத்து ஐப்பசியில் மழை தப்பாமல் பெய்யும். காடு கழனியெல்லாம் நிறையும். வீட்டில் தனம் தானியம் பெருகும்!

அம்மனுக்கு நெல்லையும் அரிசியையும் கேழ்வரகு முதலான தானியங்களையும் காணிக்கையாகத் தருவதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in