மயிலாடுதுறையும் ஐப்பசி மாதமும்..!

புனித காவிரியில் புண்ணிய நீராடுவோம்!
மயிலாடுதுறை ஐப்பசி தீர்த்தவாரி
மயிலாடுதுறை ஐப்பசி தீர்த்தவாரி

ஐப்பசி மாதத்தில், சிவனாரை நினைத்துக் கொண்டும் காவிரி முதலான புண்ணிய நதிகளை நினைத்துக் கொண்டும் காவிரியில் ஒருமுறையேனும் நீராடுவது சிறப்பு. முடிந்தால், மயிலாடுதுறை ஐப்பசி துலா கட்ட ஸ்தானத்தில் நீராடுவது இன்னும் புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம்!

ஐப்பசி மாதம் என்றாலே மயிலாடுதுறை விழாக்கோலத்தில் இருக்கும். ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். சித்திரை மாதத்தை ராசி சக்கரத்தின் அடிப்படையில் மேஷ மாதமாக கொண்டால் ஆறாவது மாதமான ஐப்பசியின் பெயர் துலாமாதம் எனப்படுகிறது. மயிலாடுதுறையின் காவிரித்துறையின் பெயர் துலாக்கட்டம் எனப் போற்றப்படுகிறது.

மயிலாடுதுறையின் பெருந் திருவிழாவின் பெயர் துலா உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது. துலா மாதத்தில் வரும் கடைமுழுக்கு தீர்த்தவாரித் திருவிழா, ஸ்ரீமயூரநாதர் அபயாம்பிகையின் வருடாந்திரத் திருவிழாவில், மிக முக்கியமானதிரு வைபவமாகப் போற்றப்படுகிறது.

காவிரி நதியில் ஐப்பசி முதல்நாள் தொடங்கி முப்பதாம் நாள் வரை தேசத்தின் புனித தீர்த்தங்களும் காவிரியில் கலந்திருப்பதாக ஐதீகம்!

ஐப்பசி மாதத்தின் முதல்நாள் காவிரி துலாக்கட்டத்தில் இறைவன் எழுந்தருளி, நீராடல் செய்கிறான் என்கிறது புராணம். மறுநாள் முதல், விநாயகப் பெருமான், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசண்டிகேசர் முதலான தெய்வங்கள் தினமும் துலாகட்டத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கே தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். தீபாவளித் திருநாளில், அமாவாசை நன்னாளில், இறைவன் பஞ்சமூர்த்தியாக எழுந்தருளுகிறான்.

அதேபோல, ஐப்பசியின் கடைசிப் பத்து நாட்களும் கொடியேற்றத்துடன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மாதத்தின் இறுதி பத்து நாட்களும் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் காவிரி துலாகட்டத்தில் தீர்த்த வாரியும் நடைபெறும். ஐப்பசி 28-ம் நாள், ஸ்ரீஅபயாம்பிகை திருக்கல்யாணம் நடைபெறும். பின்னர், 29-ம் நாளில், திருத்தேரோட்டம் நடைபெறும்.

மாதம் முழுதும் காவிரியில் தீர்த்தமாடும் இறைவன் மாதத்தின் கடைசி நாளான ஐப்பசி 30-ம் நாள் கடைமுக தீர்த்தவாரி காண்பதாக ஐதீகம். இதுவே மயிலாடுதுறையில், முக்கியமான திருவிழாவாகப் போற்றி கொண்டாடப்படுகிறது.

முன்பொருமுறை, வடக்கே இருந்து நாதசர்மா- அனவித்யை என்ற தம்பதி கடைமுக தீர்த்தவாரியில் நீராட மயிலாடுதுறை நோக்கி வந்தார்கள். நாதசர்மா கால் ஊனமுற்றவர் என்பதால் அந்தத் தம்பதியால் ஐப்பசி 30-ம் நாளுக்குள் மயிலாடுதுறை வர முடியவில்லையாம். கடைமுக தீர்த்தவாரி முடிந்த பின்பு மயிலாடுதுறை வந்த அந்த எளியோர்கள் நீராட முடியவில்லையே... என்று ஏங்கினார்கள்; வருந்தினார்கள்; கண்ணீர் விட்டு அழுதார்கள்.

அவர்களின் பக்தியிலும் இயலாமையிலும் இரக்கம் கொண்ட ஈசன், ‘’நாதசர்மா, கார்த்திகை மாதம் முதல் நாளன்றும் உனக்காக தீர்த்தவாரி நடைபெறும் வருந்தாதே’’ என்று அருளினார். அதனால்தான் கார்த்திகை முதல்நாள் முடவனுக்கு முழுக்கு என்கிற தீர்த்தவாரியும் இங்கு நடைபெறுகிறது.

மயிலாடுதுறையின் முக்கிய வீதிகளான மகாதானத் தெருவும் பட்டமங்கலத் தெருவும் பெரியக்கடைத் தெருவும் மயூரநாதர் கோயிலுக்கு சொந்தமான வீதிகள். கடைவீதியில் நிற்கும் மக்களெல்லாம் இறைவனின் திருவீதி உலாவைத் தரிசித்து மகிழ்வார்கள்.

மயூரநாதர் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பரிபாலனத்திற்கு உட்பட்ட ஆலயம் என்றபோதும் உள்ளிருக்கும் முருகன் கோயில்கள் தருமபுர ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளன. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியே கந்த சஷ்டிவிழாவாக கொண்டாடப்படுவதால், தருமையாதீன குமரக்கட்டளை சார்பில் முருகப் பெருமானுக்கு சஷ்டி விழாவைக் கொண்டாடப்படும்.

ஒரே ஆலயத்தில் இருபெருந்திருவிழாக்கள் இருபெரும் சைவ மடங்களால் நடத்தப்படுகிற சிறப்பு வேறெங்கிலும் இல்லாத அதிசயம் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!

ஐப்பசி மாதத்தில், சிவனாரை நினைத்துக் கொண்டும் காவிரி முதலான புண்ணிய நதிகளை நினைத்துக் கொண்டும் காவிரியில் ஒருமுறையேனும் நீராடுவது சிறப்பு. முடிந்தால், மயிலாடுதுறை ஐப்பசி துலா கட்ட ஸ்தானத்தில் நீராடுவது இன்னும் புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in