
மார்கழிச் செவ்வாய்க்கிழமையும் கிருத்திகையும் இணைந்த நாளில் அழகன் முருகனைத் தரிசிப்போம். அல்லல்களையெல்லாம் போக்கியருளுவான் வேலவன்!
மார்கழி மாதம் குளிர்ந்த மாதம். மனதை ஒருநிலைப்படுத்தி ஜபதபங்கள் செய்வதற்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் சிவ வழிபாடு செய்வதும் பெருமாளைத் தரிசித்துப் பிரார்த்திப்பதும் மிகுந்த பலன்களைத் தரும்.
அதேபோல், மார்கழி மாதத்தில் மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் வெண்ணிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானின் ஆதிக்கம் நிறைந்த நன்னாள். செவ்வாய் முதலான தோஷங்களைப் போக்கியருளும் முருகக் கடவுளை, செவ்வாய்க்கிழமை தோறும் வணங்கிவந்தால், நம் வாழ்வில் வந்துள்ள சகல தோஷங்களையும் முக்கியமாக செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று நிம்மதியாக வாழலாம் என்கிறார் வயலூர் முருகன் கோயில் குருக்கள்.
அதேபோல், ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர நாளில், கந்தபெருமானை நினைத்து, விரதம் மேற்கொண்டு முருகன் கோயிலுக்குச் சென்று அழகன் முருகனைத் தரிசித்து வந்தாலே, நம் பாவங்கள் அத்தனையும் பறந்தோடும். கவலைகள் மொத்தமும் காணாமல் போகும்.
செவ்வாய்க்கிழமையும் முருகக் கடவுளுக்கு உகந்த நாள். கிருத்திகை விரதமும் முருகப்பெருமானை நினைத்து இருக்கக் கூடிய விரதம். இந்த இரண்டும் சேர்ந்து அமைந்திருக்கும் அற்புதமான நன்னாளில் (03.01.2023 செவ்வாய்க்கிழமை) முருகப்பெருமானை நினைத்து வணங்குவோம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வோம்.
அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, முத்துக்குமரனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வோம். சிக்கல்களையெல்லாம் தீர்த்துவைப்பான் சிங்காரவேலன். தடைகளையெல்லாம் போக்கி வெற்றிகளைத் தருவான் வெற்றி வடிவேலவன்.
கிருத்திகை நட்சத்திர நாளில், செவ்வாய்க்கிழமையில் வள்ளி மணவாளனை வணங்குவோம். வளமும் நலமும் பெறுவோம்!