மகாளயபட்ச மத்யாஷ்டமி: முன்னோர் வழிபாடு செய்யத் தவறியவரா நீங்கள்?

மகாளயபட்ச மத்யாஷ்டமி:  முன்னோர் வழிபாடு செய்யத் தவறியவரா நீங்கள்?

இதுவரை முன்னோர் வழிபாடு, திதி, தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்யாதவர்கள், மகாளயபட்ச புண்ணிய காலத்தில் வரும் அஷ்டமியில் முன்னோர் வழிபாடு செய்தால், இதுவரை செய்யாமல் இருந்த பாவங்கள் விலகும்; முன்னோர்களின் ஆசி கிடைக்கப் பெறலாம்.

புரட்டாசி மகாளய பட்ச காலம் என்பது முன்னோர் வழிபாட்டுக்கான மிக முக்கியமான காலம். வருடந்தோறும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது போல, மகாளயபட்ச காலத்தில் நம்மால் முடிந்த பித்ரு வழிபாடுகளைக் குறைவறச் செய்யவேண்டும் என்றும் செய்யத் தவறினால் அதுவே பித்ரு தோஷமாகவும் பித்ரு சாபமாகவும் ஆகிவிடும் என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.

புரட்டாசி அமாவாசைக்கு முன்னதாக வரும் நாட்கள் மகாளய பட்ச நாட்கள். இந்த நாட்கள் அனைத்திலுமாக முன்னோர் ஆராதனை செய்தால், இதுவரை முன்னோர் ஆராதனை செய்யாமல் விட்டதை ஈடுகட்டும் வகையில் ஆகிவிடும் என தர்மசாஸ்திரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, மகாளயபட்ச காலத்தில் வரும் ஏகாதசி திதியிலோ, அஷ்டமி திதியிலோ மறக்காமல் முன்னோர் ஆராதனை செய்துவிட்டால், பித்ருக்களின் சாபத்தில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்.

மகாளயபட்ச காலத்தில் வரும் அஷ்டமி மகத்துவமானது. இதை மத்யாஷ்டமி என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள். ஆகவே செப்டம்பர் 18ம் தேதி மகாளயபட்ச நாளின் அஷ்டமி திதியில், நம் முன்னோர்களை வணங்கி ஆராதிப்போம். வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு, தீபதூப ஆராதனைகள் செய்து ஆத்மார்த்தமாக வழிபடுவோம்.

18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று நதியிலோ ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ இருந்தபடி பித்ருக்கள் வழிபாடு செய்வது என்பது இன்னும் நம்மைத் தூய்மைப்படுத்தும்; நமக்கு வலிமையைக் கொடுக்கும்; கஷ்டநஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு நம் முன்னோர்கள் அருளுவார்கள் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

நம் முன்னோரை நினைத்து, நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மகா புண்ணியம். அந்த உணவை முன்னோர்கள் சூட்சுமமாக வந்து பெற்றுக் கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.

புரட்டாசி மகாளயபட்சத்தின் மத்யாஷ்டமி நாளில், மறக்காமல் முன்னோர்களை ஆராதனை செய்யுங்கள். எள்ளும் தண்ணீரும் விட்டு சாஸ்திரப்படி வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். இதுவரை பித்ருக் கடமையைச் செய்யாத குறைகள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். நம் சந்ததிகள் குறைவின்றி வளருவார்கள்; வாழ்வார்கள் என்பது உறுதி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in