மகா சிவராத்திரி: வில்வம் கொடுத்தால் விசேஷம்!

சிவனுக்கு வில்வார்ச்சனை
சிவனுக்கு வில்வார்ச்சனை

இன்று 18.02.2023 மகா சிவராத்திரித் திருநாள்.

சிவபெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே நமக்கு முக்தி நிச்சயம் என்பார்கள். முக்கியமாக, மகா சிவராத்திரி நன்னாளில் சிவனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறலாம். நமக்கு முக்தியைத் தந்தருளுவார் ஈசன்!

மகா சிவராத்திரி நாளில் விரதம் அனுஷ்டிப்போம். நீண்ட ஆயுள் தந்தருளுவார் ஈசன். ஆரோக்கியம் அதிகரிக்கும். இல்லத்தில் ஐஸ்வர்யம் நிறைக்கச் செய்வார் தென்னாடுடைய சிவனார்!

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ அதை சிவராத்திரி என்கிறோம். இதை மாத சிவராத்திரி என்று சொல்லுகிறோம். மாசிமாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் உண்டு. மார்கழி மாத ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்கிறோம். அதேபோலத்தான், மாசி சிவராத்திரி, மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

சிவனை மகாசிவன் என்று அழைப்பது இல்லை. அதே சமயம் சிவராத்திரியை ‘மகா’ என்கிற அடைமொழியுடன் அழைக்கிறோம். இதில் இருந்தே இந்த இரவின் மகிமையை நாம் அறிந்து உணரலாம். ஈசனை சதாசிவன் என்றும் சொல்கிறோம். வேறு எந்த தெய்வத்தையும் ’சதா’ என்று அதாவது ‘எப்போதும்’, ‘சர்வகாலமும்’ என்கிற அர்த்தத்துடன் சேர்த்துச் சொல்வதில்லை. ‘சதா’ என்றால் ‘எங்கும் எப்போதும்’ என்று அர்த்தம். எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் சிவன் என்கிறது சிவ புராணம்.

’அமரகோசம்’ என்ற சம்ஸ்கிருத நூலில் சிவம் என்றால் மங்கலம், சுபம் என்று அர்த்தங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியான சிறப்புமிக்க சிவனுக்கு உகந்த ராத்திரியே சிவராத்திரி. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி. அன்று சிவன் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். அதாவது, அன்றைய இரவில், விடிய விடிய, சிவனுக்கு குளிரக் குளிர அபிஷேகங்கள் நடைபெறும்.

அன்றைய தினம், மாலையில் துவங்கி, இரவு முழுவதும் விடிய விடிய பாராயணம், பஜனை, பூஜை, அபிஷேகம் என சிவாலயங்களில் அமர்க்களப்படும். இதில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால் சிவனருளைப் பெறுவது உத்தமம்.

மகா சிவராத்திரி நன்னாளில், இரவு சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்து கொள்வது புண்ணியம். அப்போது, நம்மால் முடிந்த அளவுக்கு வில்வம் வாங்கிச் சென்று பூஜைக்கு சமர்ப்பிப்பது, நம் பாவத்தையெல்லாம் போக்கித் தரும். அந்த நாளில், நாம் தரும் ஒவ்வொரு வில்வமும் மகா புண்ணியம் என்கிறார் சங்கர குருக்கள்!

தஞ்சை பெரியகோயில் பெருவுடையார்
தஞ்சை பெரியகோயில் பெருவுடையார்

ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கங்கை நதியைக் கடக்க உதவி செய்தவன் குகன். இவன் முன்பிறவியில் வேடனாகப் பிறந்து மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் மிருகங்கள் ஏதும் சிக்கவில்லை. இருள் கவியத் தொடங்கியது. இரவானாலும் ஏதாவது மிருகத்தை வேட்டையாடிவிட்டுத்தான் செல்லவேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பார்கள் என்று காட்டில் அலைந்து கொண்டிருந்தான்.

அவனுக்கும் கடும்பசி. காலையில் இருந்தே சாப்பிடவில்லை. இருட்டிவிட்டதால் விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். பசி மிகும் போது, தன் இடுப்பில் கட்டியிருந்த குடுவையில் இருந்து நீரை குடித்துக் கொண்டான். தூங்காமல் இருக்க வேண்டும் என்று அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்து கீழே போட்டபடியே இருந்தான். அவன் குடிக்கும் போது தண்ணீர் கீழே சிந்தியது. இப்படி விடிய விடிய விழித்தபடியே இருந்தான் வேடன்.

பொழுது விடிந்தது. பொலபொலவென வெளிச்சம் வரத்தொடங்கியது. மரத்தடியில் பார்த்தான். அங்கு சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதன்மேல் வில்வ இலைகளை பறித்துப் போட்டிருந்தான். ஆனால், இவன் அதையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்டான்.

அவன் தன்னையறியாமல் விழித்திருந்து சிவனை வழிபட்ட தினம் மகா சிவராத்திரி நன்னாள் என்கிறது புராணம். இதனால் அவனுக்கு சிவனின் கடாட்சம் கிடைத்தது. மறுபிறவியில் அவன் குகனாக பிறந்தான். ராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் கிடைத்து. ’குகனோடு ஐவரானோம்’ என்று ஸ்ரீராமனின் சகோதரன் எனும் நிலைக்கு உயர்ந்தான்.

தன்னை அறியாமல் கடைபிடித்த எளிய விரதத்துக்கே குகனுக்கு இந்த அளவு மிகப்பெரிய பலன் கிடைத்தது என்றால், இத்தனை மகோன்னதம் மிக்க விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டித்து, சிவதரிசனம் செய்து வந்தால், அதன் மூலம் கிடைக்கும் பலன்களுக்கு எல்லையே இல்லை!

குரங்கு ஒன்று மரத்தில் இருந்தபடி, வில்வ இலைகளை விளையாட்டாகப் பறித்துப் போட்ட கதையும் தெரியும்தானே. அந்த இலைகள், மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. அந்த இலைகள், சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமான வில்வ இலைகள். இதனால் குரங்கு சாப விமோசனம் பெற்றது. குரங்கு முகமும் மனித உடலும் கொண்ட முசுகுந்த சக்கரவர்த்தியாகிற வரமும் கிடைத்தது என்கிறது புராணம்.

தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in