மகா சிவராத்திரி : இம்மையிலும் மறுமையிலும் நன்மை தரும் வில்வாஷ்டகம்!

- நான்கு கால பூஜைகளும் அதை தரிசிப்பதன் பலன்களும்!
மகா சிவராத்திரி - சிவ தரிசனம்
மகா சிவராத்திரி - சிவ தரிசனம்

விரதங்களிலேயே மிக மிக எளிமையான விரதம் மகா சிவராத்திரி விரதம். மகா சிவராத்திரி நன்னாளில், காலையில் நீராடி சிவாலயத்திற்குச் சென்று ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, ‘சிவ சிவ’ என்று கண்களை மூடியபடி ஜபித்துக் கொண்டே இருந்தாலே போதும். அதேபோல், ‘நமசிவாய’ என்று ஜபித்துக்கொண்டிருந்தாலே புண்ணியம்!

மகா சிவராத்திரி நாளில், நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் திட உணவு ஆகாரம் தவிர்க்க வேண்டும் என்றும் திரவ உணவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள் ஆச்சார்யர்கள். உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் பழங்கள் சாப்பிடலாம். மாலையில் சிவாலயம் சென்று, வயதானவர்களுக்கும் விரதம் மேற்கொள்ளாமல் சிவ தரிசனத்துக்கு வந்திருப்பவர்களுக்கும், பழம், பால் முதலானவற்றை வழங்கலாம். அதேபோல், அபிஷேகத்துக்குத் தேவையான திரவியங்களை சிவனாருக்கு வழங்குவது நம் அல்லல்களையும் துன்பங்களையும் போக்கவல்லது!

மகா சிவராத்திரி அன்று இரவு நடைபெறும் நான்கு கால பூஜையில் கலந்துகொள்வது இன்னும் உத்தமம். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வீட்டிற்கு வந்து நீராடி அதிகாலை மீண்டும் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பின்னர் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

இந்த எளிய விரதத்தை தொடர்ந்து கடைபிடிப்போருக்கு வாழும் காலத்தில் செல்வ வளமும் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும் என்கிறார் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

அதேபோல், எல்லா நாளிலும் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து சிவபெருமானை வழிபடலாம். முக்கியமாக, பிரதோஷம், மாத சிவராத்திரி, மாசி மகா சிவராத்திரி முதலான நாட்களில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து சிவபெருமானைத் தரிசிப்பது. மகா புண்ணியம். பிறப்பற்ற நிலையைத் தருவார்; நமக்கு அடுத்த பிறவி என்பதை இல்லாமல் செய்வார். நம் இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை வழங்கி அருளுவார் சிவபெருமான்.

காஞ்சிபுரம் நடராஜ சாஸ்திரிகள்
காஞ்சிபுரம் நடராஜ சாஸ்திரிகள்

வில்வாஷ்டகம் பாராயணம் செய்வோம் :

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

சிவலோகமவாப்னோதி சிவேன சஹ மொததே

மாசி மகா சிவராத்திரி நன்னாளில், விரதம் மேற்கொள்வது எப்படிப் புண்ணியமோ, உண்ணா நோன்பு மேற்கொள்வது எத்தகைய பலன்களைத் தருமோ... அதேபோல் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வநாயகமாகவும் வேத நாயகனாகவும் தெய்வநாயகமாகவும் திகழும் தென்னாடுடைய ஈசனைத் தொழுவோம் என்கிறார் காஞ்சி நடராஜ சாஸ்திரிகள்!

மகா சிவராத்திரி நன்னாளையொட்டி, இன்று விடிய விடிய கோயில் நடை திறந்திருக்கும். வழக்கமாக இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் கோயிலில் நடை சார்த்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நாளில், சிவாலயங்களில், விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.

மகா சிவராத்திரியில் விரதம் இருந்து சிவாலயங்களுக்குச் சென்று பக்தர்கள், சிவ தரிசனம் செய்வார்கள். சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், ராமேஸ்வரம் திருக்கோயில், திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், பாபநாசம் 108 சிவாலயத் திருத்தலம், கங்கை கொண்ட சோழபுரம் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பள்ளிக்கரணை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் ஆலயம், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயில் முதலான தமிழகத்தின் பெரும்பாலான சிவன் கோயில்களில், இரவு விடிய விடிய சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.

மொத்தம் நான்கு கால பூஜைகள் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி நாளில், இரவில் நடைபெறுவது வழக்கம். அதாவது இரவு 9 மணிக்குள் நடைபெறும் முதல் கால பூஜையானது, சிவபெருமானுக்கு ஸ்ரீபிரம்மா செய்யும் என பூஜை என்கிறது ஆகமம். அப்போது, சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தாமரை மலர்களாலும் வில்வத்தாலும் அர்ச்சனை செய்யப்படும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பிரம்மாவுக்கு உகந்த மஞ்சள் வஸ்திரத்தை சிவலிங்கத்துக்கு சார்த்தி வழிபடுவார்கள்.

இந்த பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்தால், நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார்கள் சிவுனும் பிரம்மாவும் என்பது ஐதீகம்! பிரம்மாவின் பேரருளும் சிவ கடாட்சமும் கிடைக்கப் பெறலாம்.

இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடைபெறும். சிவபெருமானுக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு செய்யும் பூஜை இது. அப்போது, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும். வில்வத்தாலும் துளசியாலும் அர்ச்சனை செய்யப்படும். அரளிப்பூ கொண்டும் அர்ச்சனை செய்து பூஜிப்பார்கள். சிவனாருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இதில் மனம் குளிர்ந்து போவாராம் சிவனார். தன்னைத் தரிசிக்க வந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் முக்கியமாக சந்ததியினருக்கும் பேரருள் புரிந்து காத்தருளுவார்.

இரண்டாம் கால பூஜையில், சிவனாருக்கு பஞ்சாமிர்த நைவேத்தியம் படைப்பார்கள். வெண்மை நிற ஆடையை அணிவித்து பூஜை செய்வார்கள். இந்த பூஜையை தரிசித்தால், சிவபெருமாளின் அருளும் மகாவிஷ்ணுவின் அருளும் கிடைக்கப் பெறலாம். வில்வத்தில் மகாலட்சுமி குடிகொண்டிருக்கிறாள் என்பதாக ஐதீகம். ஆகவே சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெற்று இனிதே வாழச் செய்வார் ஈசன்!

அதன் பிறகு அதிகாலை 3 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெறும். சக்தியாகத் திகழும் உமையவளே தன் கணவரான உமையொருபாகனுக்கு இந்த பூஜையைச் செய்து வழிபடுவதாக ஐதீகம். அப்போது தேன் முதலானவை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அம்பாளுக்கு உகந்த செந்நிற ஆடையை சிவத்திருமேனிக்கு அணிவிப்பார்கள். மல்லிகை முதலான வெண்மை நிற மலர்களும் வில்வமும் சூட்டி வழிபடுவார்கள். பிட்டு நைவேத்தியம் படைப்பது சிறப்பு. மூன்றாம் கால பூஜையை தரிசித்தால், தரித்திரம் விலகும்., தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கருத்துவேற்றுமையால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

இதையடுத்து, அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெறும். சிவனாருக்குச் செய்யப்படும் இந்த பூஜையை, முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகான்களும் மக்களுமாக சேர்ந்து செய்கிறார்கள் என சிவாகமம் தெரிவிக்கிறது.

அப்போது, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். வெண்மை நிற ஆடைகள் அணிவித்து, பல நிறங்கள் கொண்ட பூக்களாலும் வில்வத்தாலும் அர்ச்சித்து வழிபடுவது வழக்கம். அதேபோல், கனிகளைக் கொண்டு சிவலிங்கத் திருமேனிக்கு அலங்காரம் செய்வதும் நடைபெறும். வெல்லம் மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் உணவால் நைவேத்தியம் படைப்பது வழக்கம்.

மகா சிவராத்திரி நன்னாளில், வீணைக் கச்சேரி, சங்கீதப் பாடல்கள், உபன்யாசம், பஜனைகள், பதிகப் பாராயணங்கள் முதலானவை நடந்தேறும்.

மகோன்னதம் மிக்க, மகா சிவராத்திரியில் வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்வோம். வில்வாஷ்டகம் பாராயணம் செய்து பிரார்த்தனைகள் செய்வோம். யோகமும் ஞானமும், தனம் தானிய பாக்கியமும் தந்து அருளுவார் சிவகுருநாதப் பெருமான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in