மகத்துவம் மிக்க மார்கழி, பீடை மாதமா?

சாஸ்திரங்கள் சொல்லும் விளக்கம் இதுதான்!
மகத்துவம் மிக்க மார்கழி, பீடை மாதமா?

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புக்கு உரியதாகவும் வழிபாடுகளுக்கு உரியதாகவும் போற்றப்படுகிறது. வருடம் முழுக்க இறை வழிபாடு செய்துகொண்டிருக்கிறோம். இறைவன் நமக்கு சூட்சுமமாக அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் பகவான் கிருஷ்ணர், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என அருளியுள்ளார்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பார்கள். அவர்களின் அதிகாலைப் பொழுதுதான் மார்கழி மாதம் என்று சொல்கிறது புராணம். அதனால்தான் மார்கழியில் அதிகாலையில் எழுந்து கோலமிடுகிறோம். கோயிலில் சென்று வழிபடுகிறோம். ஆக, மார்கழியின் அதிகாலைப் பொழுதும் விசேஷம். பிரம்ம முகூர்த்த நேரமும் நல்ல அதிர்வுகளைக் கொடுக்கக் கூடியது!

தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால். இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று நின்றாலே, நமக்கு சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று அர்த்தம். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்றும் சொல்லலாம். ஐப்பசி, கார்த்திகையில் அடைமழை என்பார்கள். அவை முடிந்ததும் மார்கழி. பனிக்காலம். குளிரானது நம் உடலையும் மனதையும் ஜில்லிடச் செய்து, சிலிர்க்கவைக்கும் காலம். உடலின் உஷ்ணம் குறைய, அதிகாலையில் நீராடுகிற, குளிர்ந்த நீரில் நீராடுகிற மிக முக்கியமான மாதம் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ண பரமாத்மா அருளியிருந்தாலும் இங்கே, மார்கழி மாதத்தில் சைவ வைணவ பேதங்களில்லாத மாதம் என்றும் சொல்லலாம். சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில், சூரிய உதயத்துக்கு முன்னதாகவே பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

மேளதாள வாத்தியங்கள் அமர்க்களப்படும். சிவன் கோயில்களில் திருவெம்பாவை பாடுவார்கள். பெருமாள் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடுவார்கள். திருப்பாவை என்றதும் அதன் நாயகி ஆண்டாள்தானே நம் நினைவுக்கு வருவாள். பகவானை நினைத்து, காதலித்து, உருகி உருகிப் பாடிய திருப்பாவையை பாடப்பாட, பெருமாளை தரிசித்துப் பிரார்த்திக்க, நம் வீட்டில் உள்ள திருமணத் தடைகள் உடனே விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஆண்டாள், அரங்கனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். திருப்பாவை ஆண்டாளின் வழிபாட்டை வெளிப்படுத்தும் காதலாகி பக்தியில் கசிந்ததன் வெளிப்பாடு என்றே போற்றுகிறது புராணம்.

மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு. சூன்யம் என்றால்,பயந்துவிடவேண்டாம். ஒன்றுமில்லாதது என்று அர்த்தம். ’’நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது. அதாவது நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், கடவுளைச் சரணடைவதே மார்க்கம்’ எனும் தத்துவம் சொல்லும் மாதமாக மார்கழி போற்றப்படுகிறது.

மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்" என்று சம்ஸ்கிருதம் சொல்கிறது. ‘மார்க்கம்’ என்றால் வழி என்று அர்த்தம். ’சீர்ஷம்’ என்றால், உயர்ந்த என்றும் வழிகளுக்கெல்லாம் தலைசிறந்ததான, மேன்மை உடையதான வழி என்று அர்த்தம். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில், இந்த மாதம் மார்கழி, மார்க்க வழி என்று இருந்து மார்கழி என்றானதாகவும் சொல்வார்கள்.

மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம் என்று சொல்கிறோம். மாதங்களில் நான் மார்கழியாகவே இருக்கிறேன் என்கிறார் திருமால். அப்படியிருக்க பீடை மாதம் என்று சொல்கிறார்களே என்று பலரும் கேட்கிறார்கள். அதைத் தவறாக புரிந்துகொண்டிருக்கிறோம். அதாவது, பீடுடைய மாதம், மேன்மையான மாதம், உயர்ந்ததான மாதம் என்பதே மருவி பீடை மாதம் என்ற சொல்லாகிவிட்டது. உண்மையில் எந்த மாதமும் பீடை மாதம் இல்லை என்கிறார் பாலாஜி வாத்தியார். பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய என்று அர்த்தம். சிறப்புகள் நிரம்பியிருப்பது என்பது பொருள்.

பெருமைக்கு உரிய மார்கழி மாதத்தை, தபஸ், யோகா, கல்வி, கலை முதலானவற்றைக் கற்றுக் கொள்வதற்கும் விரதங்களை அனுஷ்டிப்பதற்குமாக சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான், இறை வழிபாட்டு மாதமாகவே சைவமும் வைணவமும் நமக்கு போதித்துத் தந்திருக்கிறது.

இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடுகள் பாதிக்கும், பூஜைகளைத் தரிசிக்கத் தவறிவிடுவோம். கலைகளைக் கற்பதில் நாட்டம் இருக்காது. கேளிக்கை சிந்தனைகளில் மனம் போகத் தொடங்கிவிடும் என்பதால்தான், மார்கழி மாதம் முழுவதையும் பூஜைக்கும் வழிபாட்டுக்கும் விரதங்களுக்குமான மாதமாக நமக்கு அறிவுறுத்தியிருக்கிறது சாஸ்திரம்.

மார்கழி மாதம் பிறந்திருக்கும் நன்னாளில் இருந்து நம்மால் முடிந்த அளவுக்கு, அதிகாலையில் குளித்து ஆலய தரிசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம். திருப்பாவையும் திருவெம்பாவையும் பாராயணம் செய்து பெருமாளின் அருளையும் சிவனாரின் அருளையும் பெறுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in