சொல்லுவோம் ராமநாமம்; எழுதுவோம் ஸ்ரீராமஜெயம்!

- தம்பதி ஒற்றுமையை பலமாக்கும் ஸ்ரீராம காயத்ரி!
ஸ்ரீராமர்
ஸ்ரீராமர்

ஸ்ரீராமபிரானுக்கான காயத்ரியை தினமும் சொல்லி வந்தால், குடும்பத்தில் கணவன் மனைவி இடையேயான கருத்து வேற்றுமை மாறும். கருத்தொருமித்த தம்பதியாக வாழலாம். சகோதரர்களுக்கு இடையிலான பகைகள் மறைந்து ஒற்றுமை மலரும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது உறுதி!

பத்து அவதாரங்கள் எடுத்தவர் திருமால். பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு விதமான நெறியை உணர்த்துகின்றன. வழிநடத்துகின்றன. அவற்றில், மனிதனாகப் பிறந்தவர், வாழ்வில் எப்படி வாழவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிற மிக முக்கியமான அவதாரம் ராமாவதாரம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்! .

ராமபிரானின் வாழ்க்கையை ஒரே வரியில் சொல்லிப் பெருமிதம் கொள்கிறார்கள் ஆச்சார்ய புருஷர்கள். அதாவது, ’ஒரு வில்... ஒரு இல்... ஒரு சொல்...’ என்பதை வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்து, நமக்கெல்லாம் ’இப்படித்தான் வாழவேண்டும்’ என்பதை உணர்த்தியவர் ஸ்ரீராமபிரான். அதனால்தான் ராமாவதாரமும் சரி... ராமாயணமும் சரி... இன்றளவும் போற்றப்படுகிறது என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

ஸ்ரீராமருக்கு, தமிழகத்தில் அரிதாகவே ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. சென்னை செங்கல்பட்டை அடுத்து உள்ள மதுராந்தகம் ஏரிகாத்த ராமர், மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர், திருவள்ளூர் அருகில் உள்ள திருநின்றவூர் ராமர் என சில ஆலயங்கள் மட்டுமே இருக்கின்றன. மேற்கு மாம்பலம், சென்னை தாம்பரம் முதலான ஊர்களிலும் ஆரணிக்கு அருகில் உள்ள கிராமத்திலும் ராமருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்கு அருகிலேயே அற்புதமான திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீராமர். அதேபோல் தஞ்சையில் புன்னைநல்லூரில் மாரியம்மன் கோயிலுக்குப் பின்னே இருக்கிறது கோதண்டராமர் கோயில்.

ஸ்ரீராமர் வழிபாடு உன்னதமான பலன்களை வழங்கக் கூடியது. புதன், சனி கிழமைகளில் ராம நாமம் சொல்லி ஜபிப்பதும் ஸ்ரீராமஜெயம் எழுதி வேண்டிக்கொள்வதும் இழந்த பதவியை நமக்கு பெற்றுத் தரும். அதேபோல், இழந்த செல்வத்தையும் கெளரவத்தையும் திரும்பத் தந்தருளுவார் ராமபிரான்.

திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார், ‘’ராம நாமம் ஜபித்துக் கொண்டே இருங்கள். நானும் ராம நாமத்தை அனவரதமும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன்’’ என அருளியுள்ளார். ஸ்ரீராம ஜெயம் எழுதி, ராமநாமம் சொல்லி, ஸ்ரீராமபிரானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், அனைவரும் இழந்த நிம்மதியைப் பெறுவது நிச்சயம்!

ஸ்ரீராமபிரான் காயத்ரி :

ஓம் தசரதாய வித்மஹே

சீதா வல்லபாய தீமஹி

தந்நோ ராம ப்ரசோதயாத்

ஸ்ரீராமரின் காயத்ரியை தினமும் சொல்லுவோம். புதன் மற்றும் சனிக்கிழமைகள் மாத்திரமல்லாது புனர்பூச நட்சத்திர நாளிலும் சொல்லி வழிபடுவோம். குடும்பத்திலும் சகோதரர்கள் வகையிலும் ஒற்றுமை நீடிக்கும். இல்லத்தில் ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியை ஒன்று சேர்த்து இனிதே வாழச் செய்வார் ஸ்ரீராமர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in