தை கடைசி செவ்வாய்: சகலமும் தரும் சக்தி தரிசனம்!

அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் (உற் சவர்)
அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் (உற் சவர்)

தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில், சக்தி வடிவமாகத் திகழும் அம்மனைத் தரிசிப்போம். நம் தரித்திரங்களைப் போக்கி சுபிட்சத்தை நிலைநாட்டி அருளுவாள் அம்பிகை.

சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். ரவி என்றால் சூரியன் என்று அர்த்தம். அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப் பக்க வழி, வடக்கு வாசல் என்று அர்த்தம். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும், தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார்

அதாவது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆறு மாதங்களும் உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. இந்த உத்தராயன காலம் என்பது தேவர்களின் பகல் காலம் என்றும் அதன் பிறகான தட்சிணாயன புண்ய காலம் தேவர்களின் இரவுக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கலகரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம் என்று போற்றுகிறது புராணம்.

ஆகவே, உத்தராயன புண்ய காலமான, தை மாதத் தொடக்கத்தில் எல்லாக் கிழமைகளுமே வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. குறிப்பாக, எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்மன் என்று அழைக்கப்படுகிற சக்தியின் வீரியம் நிறைந்த நாட்களாக, சக்தியை வணங்குகிற நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

எனவே, இந்தக் கிழமைகளில் அம்பிகை வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள். நாமும் செவ்வாய், வெள்ளிகளில் அம்மனை வழிபடுகிறோம். குறிப்பாக, உத்தராயன புண்ய காலத் தொடக்க மாதமான தை மாதத்தில், ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் அம்பாளை ஆத்மார்த்தமாக வழிபட்டுப் பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தால், நம் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

தை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையான இன்று

தை கடைசிச் செவ்வாய்க்கிழமையில், பால் பாயசம் நைவேத்தியம் செய்து, அம்பாளைப் பிரார்த்தனை செய்து, அபிராமி அந்தாதி, ஸ்ரீதேவி மகாத்மியம், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் என பாராயணம் செய்வதும், அல்லது அவற்றை ஒலிக்கவிட்டுக் கேட்பதும் இல்லத்தில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்.

தை கடைசி செவ்வாய்க்கிழமையில், அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசிப்போம். சிவாலயத்தில் உள்ள அம்பாளைக் கண்ணாரத் தரிசிப்போம். துர்காதேவிக்கு ராகு கால வேளையில் (மாலை 3 முதல் 4.30 மணி வரை) எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம். நம் இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையைப் போக்கி அருளுவாள் அம்பிகை. வீட்டில் சகல சுபிட்சங்களையும் மங்கல காரியங்களையும் ஈடேற்றித் தந்திடுவாள் தேவி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in