கோகுலாஷ்டமியில் ’கிருஷ்ணாஷ்டகம்’ படித்தால் குபேர யோகம்!

கோகுலாஷ்டமியில் ’கிருஷ்ணாஷ்டகம்’ படித்தால் குபேர யோகம்!

கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்து, பகவான் கிருஷ்ணரை வணங்கித் தொழுதால், குபேர யோகத்தை அருளுவார் கிருஷ்ண பரமாத்மா.

கிருஷ்ண ஜெயந்தி என்பது, குழலோன் உதித்து, குழலின் இசையால் ஆவினங்களையும் நம்மையும் குளிர்வித்த புண்ணிய நன்னாள். இந்த அற்புத நாளில், இல்லத்தில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கிருஷ்ணரின் படங்களை அலங்கரித்து, அவரை வணங்குவோம். கண்ணபிரானுக்குப் பிடித்த சீடை, அதிரசம், அவல் பாயசம் என நைவேத்தியம் படைத்து கிருஷ்ணரை ஆராதிப்போம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கோகுலாஷ்டமி பூஜையை மிகுந்த சிரத்தையுடன் செய்தால், குழந்தையாக கிருஷ்ணனே வந்து பிறப்பான் என்பது ஐதீகம். குசேலருக்கு உதவியது போல் நமக்கும் குபேர யோகத்தை அருளுவான் கிருஷ்ணன்; சகல ஐஸ்வர்யமும் தந்து வாழச் செய்வான் என்கிறது புராணம்..

முக்கியமாக... கோகுலாஷ்டமியில், கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் செய்யுங்கள். தெய்வ அனுக்கிரகம் இல்லத்தில் நிறைந்திருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். .

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. ஸ்ரீகிருஷ்ணர் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படுகிறது. இந்த எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது எண்ணற்ற பலன்களைத் தரும். மனதில் இருக்கும் குழப்பங்களையெல்லாம் தீர்க்கும். மங்கல காரியங்களை நடத்தித் தரும். மங்காத செல்வதை வழங்கி அருளும்!

'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது.

கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

கிருஷ்ணாஷ்டகம்

வசுதேவ ஸூதம் தேவம்

கம்ஸ சாணூர மர்த்தனம்

தேவகீ பரமானந்தம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: வசுதேவரின் குமாரன்... கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன். தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாகத் திகழ்பவன். சகல லோகத்துக்கும் குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

அதஸீ புஷ்ப ஸங்காசம்

ஹாரநூபுர சோபிதம்

ரத்ன கங்கண கேயூரம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன். மாலை, தண்டை, சலங்கை இவற்றை அணிந்து அழகாகத் திகழ்பவன். ரத்தினம் இழைத்த கையில் அணியும் அணிகலன்களை தோள்களில் அணிந்தவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

குடிலாலக ஸம்யுக்தம்

பூர்ண சந்த்ர நிபானனம்

விலஸத் குண்டல தரம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன். முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன். பளீர் என ஒளிரும் குண்டலங்கள் அணிந்தவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

மந்தார கந்த ஸம்யுக்தம்

சாருஹாஸம் சதுர்ப்புஜம்

பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் திகழ்பவன். அழகான புன்னகையைத் தவழவிடுபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்... உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்

நீல ஜீமூத ஸந்நிபம்

யாதவானாம் சிரோ ரத்னம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள் : மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்... தாமரைக் கண்ணன். நீருண்ட மேகத்தைப் போன்றவன். யாதவர்களின் ரத்தினமாகவும் முடிசூடா மன்னனாகவும் திகழ்பவன். உலகுக்கே குருவாகத் திகழும் கிருஷ்ணரை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம்

பீதாம்பர ஸூசோபிதம்

அவாப்த துளசீ கந்தம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன். பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன். துளசியின் பரிமளத்தைக் கொண்டிருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

கோபிகாநாம் குசத்வந்த்வ

குங்குமாங்கித வக்ஷஸம்

ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பின் அடையாளத்தை மார்பில் கொண்டவன். ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடம் தந்தவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன். லோகத்துக்கு பரமகுருவாகத் திகழும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம்

வநமாலா விராஜிதம்

சங்க சக்ரதரம் தேவம்

க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவன். அகண்ட மார்பை உடையவன். வனமாலையைச் சூடிக் கொண்டிருப்பவன். சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன். உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன் என்று அர்த்தம்.

க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம்

ப்ராதருத்தாய ய படேத்

கோடி ஜந்ம க்ருதம் பாபம்

ஸ்மரணேன விநச்யதி

பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு ஸ்லோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும் என்று அர்த்தம்.

அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் பாராயணம் செய்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும். வீடு மனை யோகம் கிடைக்கப் பெறலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in