கார்த்திகை திருவாதிரை; சிக்கல் தீர்க்கும் சிவ வழிபாடு!

கார்த்திகை திருவாதிரை; சிக்கல் தீர்க்கும் சிவ வழிபாடு!

கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திர நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவ பூஜைகளைத் தரிசிப்பதும் மகா புண்ணியம். தென்னாடுடைய சிவனை வணங்கி வழிபட்டால், நம் சிக்கல்களையெல்லாம் தீர்த்துவைப்பார் சிவனார்.

சிவபெருமானின் திருநட்சத்திரம் திருவாதிரை. மாதந்தோறும் வருகிற திருவாதிரையில் சிவ வழிபாடு செய்வதும் சிவ புராணம் பாராயணம் செய்வதும் நமக்குள் அமைதியைத் தந்தருளும்.

ஏகாதசி பெருமாளுக்கு உரிய விரத நாளாகப் போற்றி வணங்கப்படுகிறது. மார்கழியில் வருகிற ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்படுகிறது. அதுபோல மார்கழி திருவாதிரையில் சிவபெருமானுக்க் களியமுது படைத்து வேண்டிக்கொள்வோம். முன்னதாக கார்த்திகை மாதத்தில் வரும் திருவாதிரையும் விசேஷமானது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். அம்பாளையும் மகாலட்சுமித் தாயாரையும் மனதார வழிபடும் நாள். இந்தநாளில் திருவாதிரை நட்சத்திரமும் கூடியிருப்பது இன்னும் பல சத்விஷயங்களை நமக்குக் கொடுத்தருளுவார்கள் சிவனாரும் பார்வதி தேவியும்!

அருகில் உள்ள திருக்கோயிலுக்குச் சென்று அம்பாளையும் சிவலிங்கத் திருமேனியையும் கண்ணாரத் தரிசித்து வழிபடுவோம். அதேபோல், கார்த்திகை வெள்ளிக்கிழமையாகவும் இருப்பதால், மகாலட்சுமி தாயாரை மனதில் நினைத்து, வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்குகளேற்றி வைப்போம். சிவபுராணமும் நமசிவாய மந்திரமும் சொல்லி, மனதார வேண்டிக்கொண்டால், நம் சிக்கல்கள் அனைத்தையும் சிவபெருமான் தீர்த்து அருளுவார்.

முடிந்தால், சிவபெருமானுக்கு கார்த்திகை திருவாதிரை வெள்ளிக்கிழமை நன்னாளில், வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வில்வத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்.

கார்த்திகை எனும் புனிதமான மாதத்தில், வெள்ளிக்கிழமையும் திருவாதிரையும் கூடிய நன்னாளில், சிவ - பார்வதியையும், மகாலட்சுமித் தாயாரையும் மனதாரப் பிரார்த்திப்போம். முடிந்தால் குழந்தைகளைக் கொண்டு வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வோம். அது இல்லத்தில் சத்விஷயங்களைத் தந்தருளும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in