கார்த்திகை சஷ்டி; செவ்வாய் தோஷம் போக்கும் கந்தன் வழிபாடு!

கார்த்திகை சஷ்டி; செவ்வாய் தோஷம் போக்கும் கந்தன் வழிபாடு!

கார்த்திகை மாதத்தின் சஷ்டி திதி நன்னாளில், கந்தகுமாரனை வழிபட்டு, மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டால், செவ்வாய் தோஷத்தை நீக்கி அருளுவார் முருகப்பெருமான். சகல தோஷங்களையு நீக்கி, நம் சங்கடங்களில் இருந்து விடுவித்துக் காப்பார் கந்தகுமாரன்.

கார்த்திகை மாதம் என்பது எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கு உரிய அற்புதமான மாதம். சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து இந்த மாதத்தில்தான் விரதம் தொடங்குவார்கள். அதேபோல், கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் நடைபெறும். சோம வார வழிபாடு அமர்க்களப்படும்.

சிவபெருமானின் அடியும் முடியும் தேடி களைத்துப் போன மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவமே பெரிது என உணர்ந்ததும் கார்த்திகை மாத நன்னாளில்தான் என்கிறது புராணம். அதேபோல், ஐயப்பனும் ஜோதி ஸ்வரூபன். சிவபெருமானும் ஜோதியாய், அக்கினியாய், அக்கினிப் பிழம்பாய் காட்சி தந்தருளினார். அதனால்தான் மலையே சிவம் சிவமே மலையெனத் திகழும் திருவண்ணாமலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்தநாளில், நம் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றிக் கொண்டாடி வணங்குகிறோம்.

அதேபோல், கார்த்திகைப் பெண்கள் வளர்த்தெடுத்த கார்த்திகையேனுக்கு உகந்த மாதமாகவும் கார்த்திகை மாதம் திகழ்கிறது. கார்த்திகை மாதத்தின் விசாக நட்சத்திரம் சிறப்பான நட்த்திர நாளாகவும் கார்த்திகை நட்சத்திரம் தீபமேற்றி வழிபடுகிற வைபவமாகவும் சஷ்டி திதியானது நம் சங்கடங்கள் போக்குகிற விரத நாளாகவும் போற்றி வணங்கிக் கொண்டாடப்படுகிறது.

பொதுவாகவே கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த மாதம். அதேபோல் சஷ்டி திதி என்பது சண்முகப் பெருமானுக்கு விரதம் மேற்கொள்ளும் மாதம். ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொள்ளத் தொடங்குவார்கள். செவ்வாய்க்கிழமை என்பது கந்தபெருமானுக்கான நன்னாள்.

கார்த்திகை மாதமும் செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்த இன்றைய நன்னாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வோம். செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் சூட்டி ஆராதனை செய்வோம். இந்த நாளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் ஸ்கந்த குரு கவசம் பாராயணம் செய்வதும் நம் பாவங்களைப் போக்கும். எதிர்ப்புகளை அழிக்கும். இன்னல்களைப் போக்கும். தொல்லைகளையெல்லாம் அழிக்கும்.

இன்று, அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று, செவ்வரளி சார்த்தி வேண்டிக்கொண்டு, நம்மால் முடிந்த அளவுக்கு நான்கு பேருக்கேனும் எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம் வழங்கி பிரார்த்தித்துக் கொண்டால், செவ்வாய் தோஷம் விலகும். சகல தோஷங்களும் நீங்கப் பெறலாம். நம் வாழ்வில் இதுவரை இருந்த சங்கடங்கள் அனைத்தையும் போக்கி சந்தோஷத்தைப் பெருகச் செய்வார் கந்தகுமாரன்.

அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு, பூஜையறையில் அமர்ந்து, ‘அரோகரா’ என்றும் ‘ஓம் சரவணபவ’ என்றும் நம்மால் முடிந்த அளவுக்கு, ஒருமுகமாகச் சொல்லி, ஆறுமுகத்தானை வழிபடுவோம். வளம் பெறலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in