வீடு மனை யோகம் தரும் கார்த்திகை சஷ்டி!

வீடு மனை யோகம் தரும் கார்த்திகை சஷ்டி!

கார்த்திகை மாத சஷ்டியில் கார்த்திகேயனை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் போக்கியருளுவான் ஞானவேலன்.

கார்த்திகை மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம். அதிலும் சிவபெருமான் வழிபாடு, பெருமாள் வழிபாடு, ஐயப்ப தரிசனம் போலவே முருகக் கடவுளை வணங்குவதற்கு உரிய மாதமாக கார்த்திகை போற்றப்படுகிறது.

சஷ்டி என்பது சக்திவேலனுக்கு உரிய நாள். தை மாத பூசம், பங்குனி உத்திரம், வைகாசியின் விசாகம், ஆடியின் கிருத்திகை முதலான நாட்களெல்லாம் முருகனுக்கு உகந்த அற்புதமான நாட்கள். இந்த நாட்களில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும். இதனைக் கண்ணாரத் தரிசித்தாலே நம் பாவங்கள் விலகும் புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் அற்புத மாதம். கார்த்திகை என்பதே முருகப் பெருமானைக் குறிக்கும். கார்த்திகை மாதத்து சஷ்டி மிக உன்னதமான நன்னாள். புதன் கிழமை என்பது புத பகவானுக்கு உரிய நாள். புதன் பகவான் புத்தியைக் குறிக்கும் கிரகம். புதனின் ஆதிக்கம் நிறைந்தநாள். இந்தநாளெல்லாம் கூடி வந்திருக்கும் இன்றைய நாளில், கந்தபெருமானை வணங்குவோம்.

கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்குங்கள். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். கேட்ட வரங்களைத் தந்திடுவான் வெற்றிவேல் முருகன். வீடு மனை யோகத்தை தந்து நம் வாழ்வை செழிக்கச் செய்திடுவான். செவ்வாய் தோஷம் முதலான சகல கிரக தோஷங்களையும் நீக்கியருளுவான் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

முருகப்பெருமான், உலகாளும் சிவபெருமானின் மைந்தன் என்றாலும் ஞானகுரு என்றே முருகப்பெருமானைப் போற்றுகிறது புராணம். பிரணவப் பொருளை எடுத்துரைத்தவன், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்றெல்லாம் புகழ்கிறது புராணம். அப்பேர்ப்பட்ட முருகன். ஞானத்தையும் யோகத்தையும் தரக்கூடியவன். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அதாவது பொன்னும் பொருளும் கிடைத்தாலும் கூட, புதன் என்கிற புத்தியே முக்கியம். புத்தியுள்ளவனே பலவான் என்கிறது புராணம்.

செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள். முருகப்பெருமான் பூமிகாரகன். செவ்வாய் பகவானை வழிபடுவதும் முருகப்பெருமானை வழிபடுவதும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை வழிபடுவதும் மிகுந்த பலன்களை தந்தருளக்கூடியது. எனவே, முருகப்பெருமானை தரிசியுங்கள். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

சொந்த வீடு வாங்கும் விருப்பம் தள்ளிப்போகிறதே என்றிருப்பவர்கள், முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வோம். கேட்ட வரங்களைத் தந்திடுவான் கந்தன். வீடு மனை யோகத்தை அளித்திடுவான். செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்திடுவான்.

கார்த்திகை மாதம் நிறைவுறும் தருணத்தில், சஷ்டி திதியில் சரவணபெருமானை வணங்கித் துதிப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in