கார்த்திகை தீபம்: எத்தனை தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள்?

கார்த்திகை தீபம்: எத்தனை தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள்?

திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அந்த வேளையில், உங்கள் இல்லத்தில் மறக்காமல் விளக்கேற்றுங்கள். ஒவ்வொரு விளக்கிலும் சக்தி குடியேறுகிறாள் என்பதாக ஐதீகம். அது சிவசக்தியாக இருந்து, உங்கள் இல்லத்தையே வலுவாக்கிக் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

தீப வழிபாடு என்பது இன்றைக்கு நேற்றைக்கு வந்தது அல்ல. பன்னெடுங்காலமாக, ஆதிகாலம் தொட்டே இருந்து வருகின்றன. சங்க நூல்களும், தேவாரமும் மிக அழகாக தீப வழிபாட்டை எடுத்துரைக்கின்றன.

கார்த்திகை மாதத்தில், வீடுகளிலும் வாசலிலும் வரிசையாக விளக்கேற்றி வைப்பது வழக்கம். ஊர்க்கோடியில் உள்ளவர்களும் தரிசிக்கும் வகையில் மலையுச்சியில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலையில், மலையுச்சியில் தீபமேற்றி, அதை தரிசிக்கின்றனர் லட்சக்கணக்கான பக்தர்கள்!

பொதுவாகவே, தினமும் வீட்டில் விளக்கேற்றுவது சிறப்பு. அதிலும் சூரியோதயத்தின் போதும் சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபடுவது எண்ணற்ற பலன்களையும் கொடுக்கும். இல்லங்களில் நல்ல அதிர்வுகளைத் தரும். தேவதைகளும் அஷ்டதிக் பாலகர்களும் நம் வீடுகளை அரணெனக் காப்பதாக ஐதீகம். அதனால்தான் காலையும் மாலையும் விளக்கேற்றச் சொல்லி வழிபடச் சொன்னார்கள் முன்னோர்கள்.

கோயிலுக்கு எப்போதெல்லாம் தரிசனம் செய்யச் செல்கிறோமோ, அப்போது ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்லி அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள். மாதந்தோறும் கோயில்களுக்கு விளக்குத் திரி மற்றும் எண்ணெயை தானமாக வழங்குபவர்களும் இருக்கிறார்கள். இதுவும் நம் பாவங்களைப் போக்கும். புண்ணியங்களைப் பெருக்கித் தரும்!

தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்!

ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் யாவும் விலகும்! ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். தீயசக்திகள் அண்டாது.

12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள் அனைத்தும் அழியும். எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். 18 தீபங்களேற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும்! தனம் தானியம் பெருகும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள்.

27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும்.

Ramji

48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். மனோபலம் பெருகும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடன் வம்ச விருத்தியுடன் வாழலாம் என்கிறார் திருவண்ணமலை கோயிலின் கார்த்திகேய குருக்கள். இந்த விளக்குகளின் எண்ணிக்கைகளைக் கொண்டு, திருக்கார்த்திகை தீப நன்னாளில், நம் வீடுகளில் இந்த எண்ணிக்கைகளின் படி விளக்கேற்றலாம்!

முக்கியமாக, பெயரிலேயே ஒளியை வைத்துக் கொண்டு உணர்த்துகிற கார்த்திகை மாதத்தில், தினமும் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். அதிலும் குறிப்பாக, வைணவர்கள் போற்றும் பரணி தீப நாளிலும் சைவர்கள் கொண்டாடும் திருக்கார்த்திகை தீப நாளிலும் விளக்கேற்றுவது சிறப்பு. சைவமோ வைஷ்ணவமோ... எந்த வழிபாட்டுக்காரர்களாக இருந்தாலும், பரணி தீப நன்னாளில் (டிசம்பர் 5ம் தேதி) மாலையில் வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட்டு, இரண்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து இறை வழிபாடு செய்யலாம். அதேபோல் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருநாள். இந்த நன்னாளில், மாலையில் அந்தி சாயும் நேரத்தில், உங்கள் வீட்டில், எவ்வளவு விளக்குகளை ஏற்றி வைக்கமுடியுமோ, அத்தனை விளக்குகளையும் ஏற்றி உலகை ரட்சிக்கும் பேரருளை, இறை எனும் பெருங்கருணையை, தென்னாடுடைய சிவபெருமானை முழுமனதுடன் வணங்கி வழிபடுங்கள்.

திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அந்த வேளையில், உங்கள் இல்லத்தில் மறக்காமல் விளக்கேற்றுங்கள். ஒவ்வொரு விளக்கிலும் சக்தி குடியேறுகிறாள் என்பதாக ஐதீகம். அது சிவசக்தியாக இருந்து, உங்கள் இல்லத்தையே வலுவாக்கிக் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! தம்பதி ஒற்றுமை மேலோங்கும். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திரம் அனைத்தும் நீங்கும்.

ஜோதியே போற்றி. திருவிளக்கே போற்றி. தென்னாடுடைய சிவனே போற்றி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in